வீண்விரயம் செய்யலாமா?
பொருளை வீண்விரயம் செய்யலாமா? யாரைக் கேட்டாலும் வீண்விரயம் செய்யக்கூடாது என்று சொல்லிவிடுவார்கள் சிலர். ஆனால், அவர்களின் வீட்டுக்குள்ளேயே சென்று பார்த்தால் கூட எல்லாப் பொருட்களிலும் வீண்விரயம் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.
தெரியாமல் ஒருவர் செய்யும் தவறை மன்னிக்கலாம். தெரிந்தே செய்தால் என்ன செய்வது? அதைக் கண்டும் நாம் பேசாமல் வாய்மூடி இருப்பதுதான் தவறு. குறைந்தபட்சம் மனதளவிலாவது வருத்தப்பட வேண்டும். இது பலவீனமான ஈமான் என்று நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
தற்காலத்தில் வீண்விரயம் என்பது எல்லா துறைகளிலும் - எல்லா நேரங்களிலும் மலிந்து கிடக்கிறது. இதற்குக் காரணம், வாங்கும் பொருளின் கஷ்டம் நமக்குப் புரியாமல் இருக்கலாம். அல்லது அந்தப் பொருள் வாங்கப்பட எவ்வளவு கடின உழைப்பு நடந்தது என்பதை உணராமல் இருக்கலாம். இவையனைத்தையும் ஒருவர் தானாக புரிந்துகொள்ளனும் அல்லது புரிய வைக்கப்படனும்.
உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் எழுதுகிறேன்... இதை எழுதிக்காட்ட என் மனதில் ஓர் அச்சம் ஏற்படத்தான் செய்தது. ஆனால், எழுதிக்காட்டாமல் இருந்தால் அது என் மனத்திரையில் ஏங்கித் துடித்துக்கொண்டிருக்கும். (அல்லாஹ்வின் சமூகத்தில் நான் எப்படி பதில் சொல்வேன் என்ற பயம் கலந்த அச்சம் எனக்குள்.)
வீடு கட்டும்போது கவனிங்க!
கடல் கடந்து, மனைவி - மக்களை விட்டுப் பிரிந்து, வெயிலிலும், கடுங்குளிரான நாடுகளிலும் பசித்திருந்து, தாகித்திருந்து, ஓடியாடி, தேடித்தேடி திரவியம் ஈட்டி, தன் அன்பு மகளுக்காக அழகிய வீடு ஒன்றைக் கட்டிக்கொடுப்பது நமதூரின் வழக்கம். மணப்பெண்ணுக்கு வீடு கொடுக்கும் பழக்கத்தை உண்டுபண்ணிய காயல் நகரின் அன்றைய அரசர் காழி அலாவுத்தீன் மகான் அவர்கள் (காலம் ஹிஜ்ரீ 973) போட்ட சட்டத்தால் இன்றைக்கு 460 வருடங்கள் ஆகியும் மாமியார் கொடுமை இல்லாத ஊராக - பெண் மக்களுக்கு அழகான வீடு கொடுக்கும் முறை வளர்ந்து வந்துவிட்டது. எந்த இயக்கத்தைச் சார்ந்தவராயினும் - வீடு வாங்கியுள்ள பொதுநலவாதிகளையும, ஆலிம்களையும் எனக்குத் தெரியும். (ஆனால் நானோ, எனது தம்பியோ பெண் வீட்டாரிடம் வீடு உட்பட எதையும் வாங்கியதில்லை. இது என் தாய் - தந்தையர்களின் கொள்கையும், எங்களின் பிரியமான கண்டிப்பும் கூட. புகழ்ச்சிக்காக இதை எழுதவில்லை. உண்மை நிலையை விளக்கினேன். அவ்வளவுதான்!)
வரதட்சணை வாங்காதே! மஹர் கொடு என மார்க்கம் கூறுகிறது. ஆனால், கைக்கூலி கேட்டு கொடுமைப்படுத்திய சமூகவாதிகளும் எனக்குத் தெரியும். இதில் ஆலிம்களும் உண்டு. ஓதிப்படித்த பட்டதாரி ஆவார்.
வீடு கட்டும் நிலை
வீடு கட்ட எல்லாப் பொருட்களும், பணம் கட்டியவுடன் வந்து குவிக்கப்படுகிறது. வீட்டைப் பார்த்து நல்லபடி கட்டிட ஆள் துணையில்லாதபோது கட்டிடப் பொருட்கள் அனைத்தும் குறைவாகவும், தரமற்ற பொருளாகவும் வர அதிகமான வாய்ப்புகள் உண்டு.
வீடு கட்டியாகிவிட்டது. சிமிண்ட் பூசுவதில் கலவை சரியில்லா அளவில் இருக்கும்போது, வீடு விரைவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக B.Arch. கட்டிடக்கலை படித்தவர்கள் கூறுகிறார்கள்.
வீடு கட்டும்போது ஒவ்வொரு நிலையிலும் தண்ணீர் ஊற்றி ஊற வைப்பது அதன் ஆயுள் கெட்டியாகும் என்றும் கூறப்படுகிறது. வீடு கட்டுபவர் எங்கோ ஒரு நாட்டில் உள்ளார். (கூலி கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டு விட்டாலும், பொருள் தரமானது போடப்பட்டுள்ளதா என்று பார்க்க நமக்கு உரிமை இருந்தும்) பலர் அதைக் கவனிப்பதில்லை. அதற்குரிய ஆள் இல்லை என்பார்கள். நமது சொந்தத்தில் உள்ள ஊர் சுற்றித் திரிந்த நபரையோ - நலிவடைந்த நமது தூரத்து சொந்தங்களுக்கோ தினக்கூலி கொடுத்து, வீடு கட்டுவரைக் கவனிக்க சொல்லலாம். எதில் கணக்குப் பார்ப்பது என்று சிலர் ஏனோ உணர்வதில்லை.
இறையருளால் வீடு கட்டி முடிந்துவிட்டது. செங்கல் ஒன்றின் விலை ரூ.7.50 ஹாலோ பிளாக் கல் ஒன்றின் விலை ரூ.14 முதல் ரூ.17 வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. மணல், ஃபவுண்டேஷன் கல், கான்க்ரீட்டுக்கு போடப்பட்ட கருங்கல் ஜல்லி, மார்பிள் கல், கிரானைட் கட்பீஸ், வாட்டர் லைனில் போடப்பட்ட பி.வி.சி. பைப் நல்லிகள், Lபோ, T போன்றவைகளும், மின் பொருட்களும் தினக்கூலி அமைப்பில் கொடுக்கப்படும்போது நமது வீட்டைச் சுற்றிலும் தேங்கிக் கிடந்து வீணாகிறது.
இதை நமது தோட்டத்தின் ஒரு பகுதியில் கொண்டு சென்று குவித்து வைக்கலாம். அல்லது மொட்டை மாடியில் ஒரு ஷெட் போட்டு வைத்து பாதுகாத்து வைக்கலாம். அதுவும் செய்ய முடியாவிட்டால், வீடு கட்டியது போக நம்மிடம் உள்ள அனைத்துப் பொருட்களையும் நமது மஹல்லா பள்ளி மையவாடியில் ஒதுக்குப்புறமாகப் போட்டு, அதை பள்ளிக்கே கொடுத்து விடலாம்.
சில நேரம் சாரம் கட்ட கிடுகு அல்லது பிளாஸ்டிக் தார் பாய்களும் சில வீடு கட்டுவோர் வாங்கிவிடடு, வீட்டு வேலை முடிந்ததும் ஒரு ஏழைக்குக் கொடுக்கலாம். ஓலை வீட்டுக்கு மேல் போட்டால் மழைக்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அது இருக்கும். இதை யாரும் செய்கிறார்களா? அல்லது நினைத்தாவது பார்க்கிறார்களா?
இந்த பிளாஸ்டிக் தார் பாய்களை பள்ளிக்குக் கொடுத்தால், நோன்புப் பெருநாள் - ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் மக்கள் வெயில் அல்லது மழைக்கு பாதிக்காமல் பள்ளி உபயோகித்துக்கொள்ளும்.
சிமிண்ட் சாக்கு ரூ.5 முதல் தரம் வாரியாக வாங்குவதாகக் கூறுவதால், நமது வீடு கட்டும்போது ஏராளமான சிமிண்ட் சாக்குகளை நம்மிடம் அண்டி வாழும் ஏழை முஸ்லிம்களிடம் கொடுத்து, விற்று எடுத்துக்கொள் என்றால், அவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் பணம் தேறும். அவர்கள் மனமும் சந்தோஷப்படும். காங்கிரீட்டுக்கு உபயோகித்த இரும்புக் கம்பிகளையும் சேர்த்து விற்கலாம். இதையும் வீண்விரயமாக கவனிப்பாரற்று வீட்டைச் சுற்றிலும் மண்ணில் புதைந்து கிடப்பதைக் கண்டபோதுதான் இதை எழுத வேண்டும் என்று தோன்றியது. (மன்னிக்கவும்.)
வீடு கட்டியதால் மேஸ்திரி வளமான வாழ்வு வாழ்வதைப் போல...!
நமதூரில் வீடு கட்டுவதால் மேஸ்திரிகள் நல்ல வசதியாக வாழ்வதைக் காண்கிறோம். அது மட்டும் அல்ல. செங்கல் வியாபாரி, சிமிண்ட் வியாபாரி, மணல் வியாபாரி, சன்டிங் அடிப்பவர் என்று மேஸ்திரி பல முஸ்லிம் அல்லாத வியாபாரிக்கு தொழில் தருகிறார். (தப்பு இல்லை. கொடுக்க வேண்டாமென்று கூறவுமில்லை.) நமதூரை வைத்து எல்லா இன மக்களும் நல்ல வாழனும். இதுதான் காயல்பட்டணத்து இஸ்லாமிய (முஸ்லிம்) தோழர்களின் ஆசை. அதே சமயம் வீடு கட்டி முடித்துவிட்டது. நம்மவர்களுக்கும் வாழ வழி தருவீர்களா?
உள்ளே, வெளியே வெள்ளை அல்லது வண்ணம் அடிப்பது (பூசுவது), எலக்ட்ரிக் வேலை, வாட்டர் பைப்பு அமைப்பது, தரையில் மார்பிள் - டைல்ஸ் ஒட்டுவது இவற்றையெல்லாம் நம்ம ஊரில் உள்ள முஸ்லிம் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுபவர்கள் வேலைவாய்ப்பு கண்டிப்பாக கொடுக்கிறார்களா?
ஆய்வு செய்தால், முன்பு செய்தார்கள். இன்று வீடு கட்டும் மேஸ்திரிகளே எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆங்காங்கே தலை காட்டுகிறது.
மார்பிள் போட ராஜஸ்தானிலிருந்து ஏழை முஸ்லிம் தொழிலாளி வந்து இருக்கிறார்கள். மார்பிள், கிரானைட் வேலைகளையும் ராஜஸ்தான் முஸல்மான்கள் செய்து தருகிறார்கள். இது மட்டுமல்ல! நமதூரில் பல டைல்ஸ் கம்பெனிகள் உருவாகியுள்ளது. இவர்களுக்கும் ஒரு சான்ஸ் கொடுக்கலாம். சிலர் அப்படி செய்வதில்லை என்று நம்மூர் பல கம்பெனிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்திய நாடு என்பது இந்து - முஸ்லிம் - கிறிஸ்துவ மக்கள் ஒற்றுமையுடன் வாழுமிடம். அதுவும் காயல் நகரில் மத வேறுபாடு பார்ப்பது இல்லை என்பதும் யாவரும் அறிந்த ஒன்று. (வீடு கட்டித் தரும் முஸ்லிம் மேஸ்திரிகளும், சண்டிங் அடிக்கும் முஸ்லிம் தொழிலாளியும் இல்லை.) என்றாலும் கட்டிடம் கட்டித் தரும் மேஸ்திரிகளும் முஸ்லிம் அல்லாதவர்களாக இருப்பதை நாம் வெறுக்கவில்லை. வரவேற்கின்றோம். அதே சமயம், வெள்ளை (வண்ணம்) அடிப்பது, பைப்பு பிட்டிங், எலக்ட்ரிக் வேலை, மார்பிள் போன்றவைகளையாவது முஸ்லிம் தொழிலாளிகளுக்குத் தாருங்களேன் என்று அவர்கள் சார்பில் மனம் திறந்து கேட்கின்றோம்.
அவர்களையும் வாழச் செய்யும்போது, நம்மவர்களும் ஒரு காசு சாப்பிடட்டுமே என்று கட்டிடம் கட்டுவோர் எப்போதும் எண்ண வேண்டும். அப்படியான காலமே ஆரோக்கியமான காலமாக அமையும்.
மார்க்க அமைப்புக்கு பயப்படாமல் பொருட்களை அவர்கள் வீணடித்தால் அல்லாஹு இடத்தில் அவர்களும், வீடு கட்டுபவர்களும் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.
(இன்ஷாஅல்லாஹ் வளரும்) |