அன்பு வாசகர்களே! வலைதளங்களின் வாயிலாக புதுப்புது விஷயங்களை கட்டுரையாக எழுதுவது உண்மையில் புதுமை அல்ல! சமுதாயத்தில் புரையோடிப் புதைந்து கிடக்கும் புற்று போன்ற நிகழ்வுகளை நிதர்சனங்களாக வெளிக்கொணர்வதே என் நோக்கம். அதன் தாக்கத்தினால் உருவாகும் ஆக்கங்கள்தாம் இவைகள் என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
- ஹிஜாஸ் மைந்தன்.
|
பொதுவாக பெண்கள் இளகிய மனம் படைத்தவர்கள் எனவேதான் பிச்சைக்காரன் கூட தனக்கு ஏதேனும் நிச்சயமாகக் கிடைக்கும் என நம்பி, “அம்மா தாயே! பிச்சை போடுங்கம்மா...” என தாய்க்குலத்தையே தானத்திற்கு அழைக்கின்றான். இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் பெண்களை அதிகம் கவரும் வண்ணம் விளம்பரங்களும், சினிமாக்களும், சீரியல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்தகால அரசின் இலவச திட்டங்களில் இல்லங்களுக்கு சுலபமாகக் கிடைக்கப்பெற்ற தொலைக்காட்சிப் பெட்டிகளால் இல்லத்தரசிகளின் சீரியல் மோகம் இன்னும் அதிகமாயிற்று என்பது கவலைக்குரிய விஷயமாகும்.
காலை முதல் வீட்டு வேலைகளில் மூழ்கும் தாய்மார்கள், சாதம் வடித்து சற்று ஓய்வெடுக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மாத - வார இதழ்களை வாசித்து வந்த பழக்கம் அடியோடு மறைந்தொழிந்து போயிற்று. தொலைக்காட்சியின் தொடர்களில் நேரத்தையும், காலத்தையும் தொலைத்து வருவதால்தான் அதற்கு “தொலை” காட்சி எனப் பெயர் வந்ததோ என்னவோ?
எனக்குத் தெரிந்த வரை வேறு எந்த மொழிகளிலும் இல்லாத வகையில் நம் தமிழ் மொழியில்தான் சானல்கள் அதிகமாக உள்ளன. வணிக ரீதியில் ஒன்றை ஒன்று மிஞ்சும் விதத்தில் வெவ்வேறு நேரங்களில் விதவிதமான சீரியல்கள் வீடுகள்தோறும் புகுந்து விளையாடுகின்றன.
வானத்தில் உள்ள நிலாவைக் காட்டி தம் பிள்ளைகளுக்கு அமுதூட்டிய தாய்மார்கள் இன்று தம் இல்லதில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்டி ஊட்டும் அவலம்.
கைப்பிள்ளையாக அன்னையின் இடுப்பில் இருந்து கொண்டு வண்ணக் காட்சிகளைக் கண்டு வளரும் பிள்ளைகள் வாய் பேசத் துவங்கும்போது சீரியலில் வரும் டைட்டில் சாங்ஸைக் கேட்டதும் அதன் பெயரை உச்சரிக்கும் போதும், அதன் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் பெயரைக் கூறும்போதும் தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. மழலையின் கன்னத்தில் அழுத்தமாக முத்த மழை பொழிந்து பெருமிதம் கொள்கின்றாள் அந்தத் தாய்.
அதே பிள்ளைகள் ஐந்து வயதை அடையும் போது நூற்றுக்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கிச் சண்டைகள், ஆயிரம் கொலைகள், கற்பழிப்பு, ஆள் கடத்தல், விவாக ரத்து, மாமியார் மருமகள் சண்டை, சின்ன வீடு, வன்முறைக் காட்சிகள், என உலகில் உள்ள அனைத்து தீமைகளையும் கண்கூடாகப் பார்த்து விடுகின்றனர். காரணம் இதுபோன்ற காட்சிகள்தான் டி.வி சீரியல்களில் (தொடர்ச்சியாக) காட்டப்பட்டு வருகின்றன. அதை தாங்களும் பார்ப்பதோடு தம் மழலைகளை மடியில் வைத்துக் கொண்டு பார்த்து வருவதுதான் தாய்க்குலம் செய்யும் இமாலயத் தவறு.
டி.வியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது விளம்பரங்கள் வந்தாலோ? அல்லது மின்சாரம் தடைபட்டாலோ குழந்தைகளின் முகம் அஷ்டகோணலாக மாறிவிடுவதை நாம் காணலாம். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் சீரியல் தொடர்கள் அக்குழந்தையின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடும் என்பதை ஏனோ இவர்கள் இன்னும் உணரவேயில்லை.
பருவம் எய்தும் நிலையில் உள்ள இளம்பிராயத்தினர் கள்ளக்காதல், ஓடிப்போதல், கணவன் மனைவி பிரிந்து வாழ்தல், தாய் தந்தையரை மதியாமை, சூழ்ச்சி, சுய நலம் இவைகளால் சூழப்பட்டுள்ள சீரியல்களை தினமும் - ஐம்புலன்களையும் ஒன்றுபடுத்தி - கவனக்குறைவின்றி தவறாமல் பார்த்து வரும்போது ,அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்பதை பெற்றோர்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?
பருவ மாற்றத்தால் உடலிலுள்ள சுரப்பிகளில் மாற்றம் காணும்போது அவர்களுக்கு ஆவலும், வேகமும் அதிகரிக்கும். ஆசையின் உந்துதலால், ஆர்வக் கோளாறுகளால் அவர்கள் தட்டுத் தடுமாறித் தடம் மாற வாய்ப்புகள் உள்ளனவே...?
இன்னும் தாய்மார்களின் வாழ்க்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, குடும்பச் சுமைகள், ஆகியவற்றால் அவர்கள் மன உளச்சலில் இருக்கும்போது டி.வி தொடர்களில் வரும் டென்ஷனான காட்சிகள் இன்னும் அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும். கண்ணிர், சோகம், அனுதாபம், பரிதாபம் என பெண்களை சுலபமாக உணர்ச்சி வசப்படச் செய்யும் கதைகளை மட்டுமே தொடர்களாக சானல்கள் தேர்ந்தெடுத்து வெளியிடுகின்றன.
இவற்றின் மாய வலையில் சிக்கி, தன்னிலை மறந்து காட்சியோடு ஒன்றிவிட்ட நிலையில் தம் பிள்ளை “அம்மா பசிக்குது” என்றாலோ அல்லது தம் கணவன், தன் சகோதரன் ஏதேனும் கேட்டாலோ ஒருவித எரிச்சலுடன் எழுந்து வரும் நிலைதானே நம்மிடத்தில் உள்ளது? அன்பு, பாசம், அரவணைப்பு ஆகியவைகளுக்கு உலைவைக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் யாவும் உண்மையில் ஒரு சீரியல் கில்லரேதான்!
ஏதேனும் காரணங்களால் ஒரு நாள் தொடரைப் பார்க்கவிட்டால் அதைப் பார்த்தவர்களிடம் போய் கதை கேட்டு ஆசுவாசப்பட்டுக்கொள்ளும் ஜன்மங்கள் (மன்னிக்கவும்) தாய்மார்கள் ஏராளம்! அதே நேரம் அண்டை வீட்டுக்காரர் சுகவீனத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தாலும் அதன் பக்கமே அண்டாமல் ஒதுங்கும் நிலையும் நம்மிடத்தில் உள்ளது. கேட்டால் “நேரமில்லை”, “வேலையாக இருந்தேன்” என ஆயிரம் காரணங்கள் கூறி சமாளித்து விடுகின்றோம்.
சீரியலின் சீரழிவை நீட்டிக் கொண்டே போனால் நாமும் தொடர் எனப் போடும் நிலை வந்துவிடும். எனவே அருமைத் தாய்மார்களே!
டி.வி. எனும் சாத்தானைக் காட்டி சோறூட்டும் பழக்கத்தை இன்றோடு கைவிட்டு விடுங்கள்...
இம்மைக்கும், மறுமைக்கும் எவ்விதத்திலும் பயன் தராத சீரியல்களை பொழுது போக்கிற்காகக் கூட பார்க்க வேண்டாம்...
வளரும் தலைமுறையான மலரும் மொட்டுகளுக்கு மார்க்க போதனைகள், நீதிக் கதைகள், வாழ்வியல் தத்துவங்கள், சரித்திர சான்றுகள், தனி மனித ஒழுக்கம், கற்பு, ஆகியவற்றைக் கற்றுக்கொடுங்கள்...
நம் வீடு தேடி உறவினர்கள், நண்பர்கள், அயல் வீட்டுக்காரர்கள் என யாராவது வந்தால் டி.வியை அணைத்து விட்டு அவர்களைக் கவனியுங்கள்...
எக்காரணம் கொண்டும் கைவிட்ட சீரியலை எங்காவது எப்போதாவது எதேச்சையாகக் காண நேரிட்டால் அத்திசையின் பக்கமே திரும்பாதீர்கள். அது மீண்டும் தொற்றிக்கொள்ளும் ஒரு பவர்ஃபுல் தொற்றுக் கிருமி.
எனவே, எல்லாம் வல்ல நாயன் நம்மையும், நம் சமுதாயத்தையும் இந்த சீரியல் கில்லரிடமிருந்து பாதுகாத்தருள்வானாக! ஆமீன்.
|