| |
ஆக்கம் எண் (ID #) 3 | | | ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2011 | | தொலைக்கப்பட்ட சுவனத்து முகவரி! முன்னாள் ஆசிரியர், இளந்தென்றல் / சமூக பார்வையாளர்
|
| இந்த பக்கம் 2586 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய | |
மனிதர்கள் அமைதி கொள்வதற்காக உண்டாக்கிய இரவின் ஒரு நிசப்த வேளை.. வானவர்கள் ஆச்சர்யம் மேலோங்கி நிற்க நபி மார்களும் ரசூல்மார்களும் சந்தோசித்து பார்த்துகொண்டிருக்கும் தருணத்தில் அல்லாஹ்வே அடிவானம் வந்து இறங்கி கேளுங்கள் மனிதர்களே.................என்னிடம் கேளுங்கள்....... என்று .மனிதர்களோடு உரையாட காத்திருக்கும் மகத்தான தஹஜ்ஜத்தின் தனித்தன்மை பொருந்திய நேரமது..................
"உம்மாயிபா.......................உம்மாயிபா.........."
செவி வழி இதயம் புகுந்து இனித்த குரல்......................தலை கோதி கவலைகள் மாற்றிய குரல்.............இன்ப வேளையில் சந்தோசமாகவும் இக்கட்டான வேளையில் அதிராத கடுமையையும் வெளிபடுத்திய குரல்...........மென்மையாய் ."உம்மாயிபா.............எழுந்திரு........தஹஜ்ஜத் நேரம் முடியபோவுது.............எழுந்திருமா........என்று எழுப்ப............எப்போதும் வந்துபோகும் வலிகளின் வரிகளை முகத்தில் தேக்கி சாய்வு நாற்காலி போல் சாய்ந்து கிடந்த மனதை உசுப்பி மெல்ல கண்விழித்து பார்த்தாள் உம்மாயிபா என்று கணவராலும் உம்மாயிம்மா என்று பேர குழந்தைகளாலும் அழைக்கப்படும் உம்மு ஹபீபா..................... கணவரின் நினைவுகள் முழுதும் நின்று மணக்கும் அறையில் மௌனமாய் நிறைந்து நின்றது அவரது புன்னகை...
இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது........தாய் தந்தையர் வைத்த பெயரை மாற்றி வைக்கும் உரிமை இந்த குழந்தைகளுக்கு யார் கொடுத்தது...........எவ்வளவு அழகாக பார்த்து பார்த்து ஆசை ஆசையாய் வைத்த பெயரை தன் இஷ்டத்திற்கு மாற்றி வைத்துக் கொள்கிறது............எப்படி அழைத்தாலும் யாருக்கும் கோபம் வருவதில்லை மாறாக ஒரு சந்தோசம் மனது முழுதும் ஆக்ரமித்துதான் கொள்கிறது..............செய்து அஹ்மத் பாத்திமாவை சேபா என்றும், . முஹம்மத் அப்துல் காதர் உம்மாவை மம்துகார்மா என்றும், சுலைஹா உம்மாவை சலையம்மா என்றும் சுலைமான் நாட்சியை செம்மாட்சி என்றும் மீரா உம்மாள் மிய்யாம்மா என்றும் குழந்தைகளே பேர் மாற்றிவைத்தனர். இந்த வரிசையில் முதல் பேரன் ரிழ்வான் பிறந்த பிறகு தான் ஒரு மகிழ்வான நிமிடத்தில் பேச ஆரம்பித்த சில நாட்களில் எந்த மலக்குமார் வந்து சொன்னார்களோ...........உம்மு ஹபீபா என்ற பெயரை உம்மாயிம்மா என்று தனது மழலை வாய் திறந்து அழைக்க பின்னர் வந்த எல்லா குழந்தைகளும் அதையே ஆமோதிக்க...................உம்மு ஹபீபா உம்மாயிம்மா ஆனாள்.
ரிழ்வானின் அப்பாவிற்கு காலை என்பது..................தஹஜ்ஜத் வேளையிலே தொடங்கி விடுகிறது........தான் தொழுவது மட்டுமல்லாமல் என்னையும் தொழ பழக்கிவிட்டார்..........அன்றைய தினங்களில் ஏழு நாட்கள் திருமண கொண்டாட்டத்தின் முடிவில் தான் மாப்பிள்ளை பெண்ணையே பார்க்க முடியும். ஏழாவது நாளின் இரவில் தான் ரிழ்வானின் அப்பா மணவறைக்கு வந்தார். செய்து அஹ்மத் ஆலிம் என்ற செய்தாலிம் சலாம் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தவர் பதில் சலாம் பெறப்பட்ட சந்தோஷத்தில் அருகே அமர அழைத்த போது தோழிமார்கள் சொல்லிவிட்ட இரகசியங்களும் பெரியவர்கள் சொன்ன அறிவுரைகளும் மனம் முழுதும் பரவி உடலின் எல்லா நரம்புகள் வழி பயணித்து அதன் கலைப்பிலையே வியர்வை துளியாய் வழிந்தது.... தனது பயத்தை எங்கே அவர் கவனித்து விடுவரோ என்ற கவலையில் தலை குனிந்தவாரே இருந்தாள். மெல்ல அவருடைய வலது கரம் மென்மையாய் அவளது கரம் தொட ஏதோ ஒரு நிம்மதி மனம் முழுதும் நிரம்பி வழிந்தது..................
இல்லறத்தின் மேன்மைகளையும் இறைவனின் அருளையும் மனித வணக்கங்களின் அவசியத்தையும் பேசிய போது...........காது விரிய
கேட்டுக்கொண்டாள். மனம் நிறைந்த அழகான அறிவான கணவன் மனம் இளகி கிடந்த இன்பவேளை அது...........என்ன சொன்னாலும் செவி வழி சென்று இதயம் தடவி மூளையில் அமர்ந்து கொண்டது..........அப்படிதான் தஹஜ்ஜத் தொழுகையின் மேன்மையும்..................ரிழ்வானின் அப்பா மௌத் ஆகும் வரை கொஞ்சம் அசந்து தூங்கினாலும் மென்மையாக எழுப்பி விடுவார். இன்றுவரை அப்படித்தான் தொடர்கிறது...........உம்மாயிபா என்ற குரல் உயிரை தட்டி எழுப்பியது..................தஹஜ்ஜத் தொழுதுவிட்டு கண்மூடி சல்லா பாயிலேய அமர்ந்திருந்தாள்.
இன்னும் கொஞ்சம் நேரத்தில் சஹருக்காக எல்லாரும் எழுந்து விடுவார்கள்.எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்து சாப்பிடுகிறார்கள்.......ஆனாலும் அவர்களிடம் ஏதோ ஒரு அந்நிய தன்மை நிறைந்திருந்தது..........எப்படி இந்த நிலை இவர்களுக்குள் ஏற்பட்டது என்று தெரியவில்லை... இவர்கள் சின்ன வயதில் அப்பாவின் கைப்பிடித்து ஹாமிதிய்யா மார்க்கக்கல்வி நிறுவனம் சென்று சேர்ந்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. அதற்கு முன்னால் அவர்களை தயார் படுத்தியது..............சில ஆரம்ப கேள்விகளை மனப்பாடம் செய்ய சொன்னது........ ஆதிதந்தை ஆதம் நபியில் ஆரம்பித்து மார்கத்தந்தை இப்ராஹீம் நபி தொடர்ந்து இறுதி தூதர் முஹம்மத் நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் வரையில் அந்த கேள்வி அமைந்திருக்கும் சென்ற வருடம் சபையில் சேர்ந்த இப்ராஹிமின் ம்மாவிடம் இருந்துதான் அத்தனை கேள்விகளையும் வாங்கினாள் ...ஹாமிதிய்யாவில் சேர்ந்து விட்டு வந்த பிறகு அப்பாவிற்கு முகமெல்லாம் சிரிப்பு...............எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொன்னதுதான் அப்பாவின் சந்தோசத்திற்கு காரணம். ஆலிம் பேரன் என்றால் சும்மாவா....அடுத்தடுத்த வருடங்களில் மூன்று பேரன் மார்களையும் ஹாமிதிய்யாவில் சேர்த்து விட்டார். ..
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சரித்திரங்கள்.........இஸ்லாமிய சம்பவங்கள்.................ஹதீஸ்கள் என்று பேரன்மார்கள் சொல்ல சொல்ல மூமாவிற்கும் அப்பாவிற்கும் பெருமை பிடிபடாது ................நோன்பு வந்து விட்டால் ரொம்ப கொண்டாட்டமாக இருக்கும். தராவீஹு தொழ வைக்க கிடைத்த அனைத்து பணத்தையும் பேரன்களுக்கு பரிசு வாங்கி தருவதிலேயே செலவழிப்பார். முதலில் ஒரு நோன்பு என்று ஆரம்பித்து, பின்னர் யார் அதிகம் நோன்பு பிடிக்கின்றார்களோ என்று தொடங்கி இறுதியில் ஆறு நோன்பு பிடித்தவர்களுக்கு.. என்று பரிசு கொடுத்து உற்சாகபடுத்துவதில் தானே உற்சாகம் கொள்வார். பெருநாளைக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். பெருநாள் தொழுகை முடிந்து வந்தவுடன் எல்லா பேரன்களுக்கும் பரிசு பொருளை தருவார். இது தனி. நோன்பு பரிசோடு சேராது............இது எல்லாருக்கும் பொது........என்ன பரிசு தரப்போகிறார் என்பது அதனை பிரித்து பார்க்கும்வரை யாருக்கும் தெரியாது.அதற்கு பிரதி பலனாக ஒரு ஈர முத்தத்தை பேரன்களிடம் இருந்து பரிசாக பெற்றுகொள்வார்.தொடராக நடந்து வந்த சந்தோஷ வருடங்களின் ஒன்றில் தான் அப்பாவின் மனதை வேதனை கொள்ளச் செய்த அந்த சம்பவம் நடைபெற்றது. பெருநாள் தொழுகை முடிந்து விட்டது.............பரிசுப்பொருளும் அப்பாவும் தயார். அனால் ஒரு பேரன் ஹக்கீம் மட்டும் வரவில்லை.....ஏதோ வேலையாக சென்றிருப்பான் என்று நினைத்துகொண்டிருந்த பொழுதில் ரிழ்வான் தான் மெதுவாக ஆரம்பித்தான்.
“அப்பா.............அது வந்து...........ஹக்கீம் நேத்தே பெருநா கொண்டாடிட்டான்.....”. இதுவரை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று கேள்விப்பட்ட விஷயம் தான் என்றாலும் தன் வீட்டிலும் இந்த பிரிவு இவ்வளவு சீக்கிரம் வந்துவிடும் என்று நினைக்கவில்லை. எந்த நிமிடத்தில் அவனுடைய இதயத்தில் இந்த பிறழ்வு ஏற்பட்டது என்று தெரியவில்லை.ஒன்றாகத்தானே வளர்ந்தான்.ஒன்றாகத்தானே மார்க்கக்கல்வி கற்றான்.எந்த விசயத்தில் முரண்பாடு ஏற்பட்டது.இதயமெல்லாம் வலித்தது.யா அல்லாஹ் இந்த பிரிவு எங்கே கொண்டு போய் சேர்க்கும் என்று தெரியவில்லையே...............அதன் பின்னர் அந்த வருடம் முதல் யாருக்கும் நோன்பு பெருநாள் பரிசு கொடுக்கவில்லை. எல்லோரும் என்று ஒரே நாள் ஒன்றாக பெருநாள் கொண்டாடுகிறீர்களோ அன்றுதான் பரிசு தருவேன் என்பது போல் அமைதியாக இருந்து விட்டார். ஆனால் அப்பா மௌத் ஆகும் வரை அந்த ஒற்றுமை நிகழவே இல்லை.
உம்மு ஹபீபாவிற்கு இன்று வரை தீராத ஏக்கம் இது ஒன்றுதான்......மாறாத துஆவும் இதுதான்.........
நோன்பு பெருநாளைக்கு இன்னும் சில தினங்களே இருந்தது. எல்லோரும் தூங்கும் அந்த வேளையில்...........மெதுவாக தவழ்ந்து வந்து பெட்டி திறக்கும் சப்தம் தனக்கே கேட்காத அளவிற்கு அந்த பழைய காலத்து பெட்டியை திறக்கிறாள்.அதனுள்ளே வெல்வெட் துணி சுற்றப்பட்ட ஒரு சின்ன பெட்டி தெரிகிறது..............அதை எடுத்து நெஞ்சோடு அனைத்துக் கொள்கிறாள்.
"உம்மாயிபா............இதை பத்திரமாக வச்சுக்கோ இந்த பரிசு நம்முடைய பேரன்களுக்கானது................என்னைக்கு எல்லோரும் ஒற்றுமையா பெருநாள் கொண்டடுரான்களோ அன்னைக்கு இதை அவங்ககிட்ட கொடு.....அதுவரைக்கும் நீயும் இதை திறந்து பார்க்காதே... உன்னுடைய மௌத் வரும் வரையில் இன்ஷா அல்லாஹ் ஒற்றுமை வந்து விடும் அப்படி வராத நிலையில் இதனை அழித்துவிடு ." என்ற அவருடைய இறுதி வஷியத்தை இன்று வரை பாதுகாத்து வருகிறாள்.
"இறைவா இஸ்ராயீல் என்னை நெருங்குவதற்கு முன்பாக இந்த மக்களிடம் ஒற்றுமையை ஏற்படுத்திவிடு..........ஒரே நோன்பு தினம்...........ஒரே பெருநாள்...............ஊரெல்லாம் ஒரே சந்தோசம் . .தந்துவிடு அல்லாஹ். கண்ணீர்மல்க கரமேந்தி கொண்டிருகிறாள்.. இந்த மக்கள் திரும்ப திரும்ப இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றமையை தொலைத்ததின் காரணமாக எவ்வளவோ நல்ல வரங்களை இழந்தது நிற்கிறார்கள் ...............லைலதுல் கதர் இரவு அறிவிக்கப்பட்ட அன்று மக்களிடம் அதனை தெரிவிப்பதற்காக வந்த போது இரண்டு சஹாபிகளுக்கு இடையில் நடந்த சண்டையில் எந்த இரவு என்பது மறக்கடிக்கப்பட்டது. எம்பெருமானார் முஹம்மத் நபி அவர்களின் மரண தருவாயில் வெற்றியின் சுவனத்தின் ரகசியம் ஒன்றை அறிவிக்க தோழர்களை அழைத்த போது அவர்களுக்கிடையே நடந்த கருத்து மோதல்களின் விளைவாக ரசூல் அவர்கள் இறுதிவரை மௌனம் சாதித்தது .இப்படி எத்துனை எத்துனை இழப்புகள்....
யா அல்லாஹ் போதும்...............எல்லோரையும் ஒன்றாக்கிவிடு............ஊரின் மொத்த சந்தோசத்தையும் திருப்பி தந்துவிடு............என் மரணத்திற்கு முன் இந்த பரிசுப்பொருளை என் பேரன்களிடம் ஒப்படைக்கும் பாக்கியத்தை கொடு.............
இன்றுவரை அந்த ஊரின் எல்லோரது வீட்டிலும் ஒரு முதிய ஆத்மாவின் துஆ கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது...................
|
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|