“கற்றது கையளவு, கல்லாதது உலகளவு”
“நூல் பல கல், நூலறிவே ஆகுமாம்
நுண்ணறிவு”
உலகம் கிராமமாக சுருங்கியதற்கு நவீன தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் பதினாற்று பாய்ச்சலே காரணம். நமக்கு வேண்டிய தகவல்கள், சான்றுகள் போன்றவைகள் இறைக்க இறைக்க ஊறும். நீருற்றின் குமிழ்கள் போல 24 மணி நேரமும் கொப்பளித்துக் கொண்டேயிருக்கின்றன. செய்தித்தாள்கள், நூல்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம் என மலரிலிருந்து மடல்விழிக்கும் இதழ்கள் போல ஒவ்வொன்றாக மனிதன் நுகர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கின்றான்.
என்னதான் இணையம், கைபேசி, பேஸ்புக், ட்விட்டர் என தகவல் தொழில் நுட்பம் முட்டையிட்டு குஞ்சு பொரித்தாலும் அச்சு ஊடகம் என்றழைக்கப்படும் வெள்ளைத்தாளில் கருப்பு மை கொண்டு உருவாக்கப்படும் நூல்களுக்குள்ள மவுசும், அந்தஸ்தும் தனிதான்.
நாசியினைத்துளைக்கும் புதிய நூற்களுடைய மணத்தின் சிறங்கடிப்பு மின்னனுத் திரைகளுக்கு இல்லைதான். மின்னனு ஊடகங்களில் தகவல்களும், தரவு (னுயுவுயு)களும் ஏராளமாகக் கிடைப்பது உண்மைதான் என்றாலும் நூல்களில் கிடைக்கப்பெறும் ஆழமும், அகலமும் மிக்க ஆய்வுக்கண்ணோட்டம், அவற்றில் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். மின்னணு ஊடகங்களில் நுனிப்புல் மேய்தல் தான் கூடுதல் நடைபெறும் என்பதை நூலையும், மின்னனு ஊடகங்களையும் ஒரு சேரப்பயன்படுத்துபவர்கள் மறுக்கமாட்டார்கள்.
நூல் வாசிப்பதற்கு இக்கட்டுரை ஏன் வலிந்து பரிந்துரை செய்கிறது என வாசகர்களும், நேயர்களும் எண்ணுவது நமக்கு கேட்கத்தான் செய்கிறது. அதற்கு ஒரு காரணம் உள்ளது.
சமீபத்திய ஒரு ஆய்வின்படி நூல்களைப் பயன்படுத்துபவர்களைக் காட்டிலும் தொலைக்காட்சி உள்ளிட்ட மின்னனு ஊடகக்கருவிகளைப் பயன்படுத்துபவர்கள் கூடுதல் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகின்றார்கள் என கண்டறிந்துள்ளனர்.
எனவேதான் சொல்லுகிறோம். மன அழுத்தமில்லாத, செலவு குறைந்த ஆழமும், நுணுக்கமும் மிகுந்த நூல்வாசிப்பை நாம் திரும்ப கைக்கொள்ள வேண்டும் என்று.
ஒரு தடவை நூற்களை நன்கு ஆய்ந்து தேர்ந்தெடுத்து நாம் வாங்கிய பிறகு அவைகளின் தரம் குறித்து தலைமுறைக்கும் அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் தொலைக்காட்சிக்கும், இணையதளத்திற்கும் அதை பயன்படுத்தும் காலமெல்லாம் பல தணிக்கைகள், தடைகளை தொடர்ந்து நாம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.
ஒரு மனிதனுக்கு ஒரே ஒருமுறை மட்டும்தான் வாழும் வாய்ப்பு இவ்வுலகில் கிடைக்கிறது. அவன் வாழ்கிற வாழ்க்கையின் அனுபவம் இன்னொருவருக்கு வாய்ப்பதில்லை. ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்க்கையைத்தான் வாழ முடியும். தான் வாழாத வாழ்க்கையின் அனுபவத்தை அறிந்துக்கொள்ளும் வாய்ப்பு வாசிப்பவனுக்கு மட்டுமே வாய்க்கிறது. காந்திக்கு வாய்த்த அனுபவங்கள் கோட்ஸேக்கு கிடைத்திருந்தால் அவன் கோட்ஸேயாகியிருக்க மாட்டான்.
சில நூற்களை நாம் புரட்டிக்கொண்டேயிருக்கின்றோம். சில நூற்கள் நம்மைப் புரட்டி விடுகின்றன. அப்படி புரட்டப்பட்ட மனிதர்கள் வரலாற்றைப் புரட்டிவிடுகிறார்கள். காலத்தை புரட்டிப்போடுகின்ற கருத்துக்கள் இப்படித்தான் புறப்படுகின்றன.
இப்படி வாழ்வையும், வரலாற்றையும் உருவாக்குகின்ற வாசிப்படங்கிய ஒரு கல்வி முறை நம்மிடையே உள்ளதா? இல்லை என்பதுதான் ஏகோபித்த விடையாக உள்ளது.
நமது இன்றைய பள்ளி, கல்லூரிக் கல்விமுறை வெறுமனே வயிற்றுப்பாட்டைக்கழுவும் கருவியாக மட்டுமே மாறிப்போயுள்ளது. தனக்கு கீழ்வாழும் குடிமக்கள் வெறும் வயிற்றுப்பசிக்கு இறைதேடும் ஒருகல்வியைப் பயின்று நிரந்தர அடிமைகளாக வாழ்வதைதே அன்று இந்தியாவை ஆண்ட வெள்ளையர்கள் விரும்பினர். அதற்காகவே மெக்காலே பிரபு ஒரு கல்வித்திட்டத்தை உருவாக்கினர். அக்கல்வி திட்டம் தான் விடுதலை பெற்ற இந்தியாவிலும் பெரிய மாற்றங்களின்றித் தொடர்கிறது. இதில் ஏற்பட வேண்டிய மாற்றத்தை ஆட்சியாளர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆட்சியாளர்கள் மனம் மாறும் நாள்வரை நாம் வாழ்க்கையைத் தொலைக்க முடியுமா? நமது இன்றைய கல்விமுறையில் நமக்கு கிடைக்காததை வெளியுலகில் உலவும் உன்னத நூற்களிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது ஓர் இனிய அனுபவம். கூடவே அது பல எதிர்பாராத வளைவுகளையும், திருப்பங்களையும், மேடுகளையும், பள்ளங்களையும், இருள்மூலைகளையும் கொண்டது. அதை சரியான முறையில் எதிர்கொள்ளவில்லையென்றால் நமது வாழ்க்கையே அச்சமும், அவலமும் நிறைந்த ஒரு கொடுங்கனவாக மாறிவிடும். இதைத் தவிர்ப்பதற்கான பல வழிகளில் நூல்வாசிப்பும் தலையாய ஒன்று.
வாழ்க்கை எனும் பெருங்கடலில் பேரலைகளையும், சுழன்றடிக்கும் கொடுங்காற்றையும் எதிர்கொண்டு கடந்த மனிதர்கள் அவற்றை அனுபவக்குறிப்புகளாக நூற்களில் பதிந்து வைத்துள்ளனர். அவற்றை வாசிப்பதால் நாம் நம்முடைய வாழ்க்கையை பாதுகாப்பாகவும், கவனமாகவும், திட்டமிட்டும் வாழவியலும்.
வாய்க்கும், வயிறுக்கும் தேவையானவற்றை தேடும் அன்றாட போராட்ட வாழ்வில் களைத்து, சலித்துப்போகும் மனிதனுக்கு நூல்கள் இளைப்பாறுதலைத் தருகின்றன. தட்டையான வாழ்விற்கு அவை வண்ணந் சேர்க்கின்றன. வாழ்வின் வசந்தங்களை கோலமிட்டு காட்டுகின்றன. அயர்ந்துபோன உள்ளத்திற்கு உன்னத இலக்குகளை அடையாளங்காட்டி அவற்றை அடைய இடையிலாத ஒரு சுகானுபவ முயற்சிக்கு மனிதனைத் தூண்டுகின்றன. உயர்ந்த நூற்கள் நல்ல நூற்கள் மனிதனை நெய்யும் ஒரு நல்ல நெசவாளி போன்றவை.
நமதூரின் வாசிப்பு முறை
உணவு, உடை, பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் நமது தரத்தை அடையாளங்காட்டுபவையாக உள்ளன. அவை வாசிப்பிற்கும் பொருந்தும். நமதூரில் விற்பனையாகும் செய்தித்தாள்களையும், வார, மாத இதழ்களையும் சற்று உற்று நோக்குங்கள்.
தினகரன், தினத்தந்தி, மாலைமலர், மாலைமுரசு, குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம் போன்ற மூன்றாந்தர பத்திரிக்கைகளே கூடுதலாக செலவாகின்றன. இவைகள் தங்கள் விற்பனையை பெருக்குவதற்காக கொலை, கொள்ளை, ஓடிப்போதல், பாலியல் வன்முறை, சினிமா போன்றவற்றை சிலாகித்து சித்தரிக்கின்றன. இப்பத்திரிகைகளை குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து வாசிக்வியலாத நிலைமைதான் காணப்படுகின்றது.
தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், த ஹிந்து, ஃபரண்ட்லைன் போன்ற தரமான நாளேடுகளுக்கும், இருவார இதழுக்கும் நமதூரில் பெரிய மவுசுமில்லை, வரNவுற்புமில்லை. இதில் தினமணி போன்ற நாளிதழின் மீது பக்கச்சார்பு, ஹிந்துத்வ சாய்மானம் என்ற விசர்சனங்கள் உண்டு. ஆனாலும் அதைப்பற்றிய தெளிவோடு நாம் குடும்பத்துடன் அந்நாளேட்;டை வீட்டாருடன் அமர்ந்து வாசிக்கவியலும்.
சாலை, குடிநீர், மருத்துவசதிகள் இல்லாத எத்தனையோ தமிழகக் குக்கிராமங்களிலிருந்து பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுகிறார்கள். இன்னுந்சொல்லப்போனால் பெரும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் இப்படி தொட்டிகளிலிருந்து முளைத்து கிளைத்து வருகின்றனர். நாட்டையும், மக்களையும் பாதிக்கின்ற அனைத்து சிக்கல்களிலும் இவர்குள் பங்கேற்கின்றார்கள், கருத்துரைக்கின்றார்கள், கருத்தை உருவாக்கின்றார்கள். இன்னுந் சொல்லப்போனால் அந்தக்கருத்தை வெகுமக்கள் கருத்தாக மாற்றி தாங்கள் அடைய விரும்பும் சமூக, பண்பாட்டு, அரசியல் இலக்குகளை அடைந்துகொள்கின்றனர்.
ஆனால் அந்தோ பரிதாபம்! அண்டை மாநிலமான கேரளா தொடங்கி பனி மனிதர்கள் வாழும் எஸ்கிமோ பிராந்தியம் வரை விரிந்து பரந்து வாழும் காயல்வாசிகளை ஒரு பன்னாட்டுச்சமூகம் என விளித்தால் அது மிகையில்லை. ஆனால் அதெல்லாம் நமது உடலளவில்தான். உள்ளத்தளவில் நாம் மிகவும் குறுகிய காயலர்களாகவே வாழ்ந்து வருகின்றோம். நாம் வாழும் இப்பூவுலகின் ஏனைய மானிடத்திரனோடு நமக்கு எவ்விதத் தொடர்புமில்லை. இதையே ஒரு குற்றச்சாட்டாக இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் முன்வைக்கின்றனர். அண்மையில் தமிழ் இணையதளமொன்றில் ஒருவர் “காயல்பட்டின வாழ் முஸ்லிம்கள் உயர்சாதி மனோபாவங் கொண்டவர்கள். அண்டை அயலில் உள்ள முஸ்லிம் ஊர்களோடு அவர்கள் திருமண உறவு பூணுவதில்லை” என எழுதியிருந்தார். இவ்வாதத்திற்கு சமாளிப்பு முறையில் எதிர்வினைகளை நாம் ஆற்றினோம் என்றாலும் அவரின் கூர்மையான கேள்வி நாம் குறுகிய மனோபாவம் கொண்டவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது என்பதை மறுக்கவியலாது.
எனவேதான் சொல்லுகிறோம்! நம் குறுகிய பார்வைகள் தகர்ந்திட வாழ்க்கை குறித்து விசாலமான பார்வை உண்டாக நாம் வாசிப்பதேயாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அற்ப மனித உயிர்களான நாம் உட்பட இந்த பிரபஞ்சத்தையும், அண்டசராசரத்தையும் படைத்து பரிபக்குவப்படுத்தும் அந்த மாபெரும் ஆற்றலாளனாகிய அல்லாஹ்வை ஆழ்ந்து அறிந்து நேசிப்பதற்கும் அறிவு வேண்டும்.
சாதாரண வணக்கசாலியின் வணக்கத்தை விட ஒரு அறிவாளியின் வணக்கம் சிறந்தது. அறிஞர்களுக்கு வானம், பூமியிலுள்ளவர்கள் பாவமன்னிப்புத் தேடுவதோடு நீரில் உள்ள மீன்களும் பாவமன்னிப்புத்தேடுகின்றன.
(அபூதாவுத், திர்மிதி) அறிவிப்பாளர் : அபூத்தல்கா (ரழி)
என்ற ஷரீஅத்தின் வைரவரிகள் நம்மை வழிநடத்தட்டும்.
வரகவி காஸிம் புலவர், ஷாம் ஸிஹாபுத்தின் (ரஹ்) என்ற பண்டைய நமதூரின் அறிஞர் தொடர் நமதூரில் மீண்டும் தழைக்கட்டும்.
நல்ல நூற்களை வாங்குவோம்
வீட்டிற்கொரு நூல் நிலையம் அமைப்போம்
வாசிக்கும் ஒரு நல்ல தலைமுறையை வார்த்தெடுப்போம்.
|