“காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர், வானத்திலிருந்து நாம் நீர் பொழிவித்து, அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம். நீங்கள்
அதனை சேகரிப்பவர்களும் அல்லர். (திருக்குர்ஆன் 15:22)
மனிதன் உயிர் வாழ நீர் அவசியம். “நீரின்றி அமையாது உலகு” என்பது பழந்தமிழ்ப் பாடல். மனிதனின் உடல் அமைப்பே குறிப்பிட்ட சதவிகதம்
நீரால் ஆனதுதான். நீர்ச்சத்து இறங்கினால் மனிதன் அதோகதியாகி விடுவான். நீரும், நிலமும் மனிதன் உயிர் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. நிலம்
செழிக்கவும் நீர் தேவை. ஒரு நாட்டின் வளத்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை நிலையையும் - அந்நாட்டில் பாயும் செழிப்பான
ஆற்றுப்படுகைகளோ அல்லது காய்ந்து உலர்ந்த வறண்ட பூமியோதான் தீர்மானிக்கின்றன.
பெட்ரோல் வளம் நிரம்பிய மத்திய கிழக்கு நாடுகளில் நீருக்கு மக்கள் திண்டாடுகின்றனர். அங்கு பெரும்பெரும் செலவில் நீராதாரங்கள்
ஏற்படுத்தப்படுகின்றன. பாட்டில்களில் அடைத்து தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. நீர் அங்கு ஒரு வியாபாரப் பொருள். நமது நாட்டிலும்
கிட்டத்தட்ட அதே போன்ற நிலை நகர்ப்புறங்களில் வந்துவி்டாலும், கிராமங்களில் இன்னும் அந்த கலாச்சாரம் பரவவில்லை. ஆறுகளையும்,
ஓடைகளையும், கிணறுகளையும், ஏரி - குளங்களையும் நம்பியே இன்றளவும் கிராமங்கள் வாழ்கின்றன. இந்த நிலைக்கும் தற்போது ஆபத்து
ஏற்பட்டுள்ளது. அதை விவரிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
“தண்ணீர்” குறித்து நம் சமூகத்தில் பாரம்பரிய நம்பிக்கைகள் உள்ளன. மலிவாகவும், தட்டுப்பாடின்றியும் கிடைக்கும் எந்தப் பொருளையும் நாம்
“தண்ணீர் பட்டபாடு” என்று சுலபமாகச் சொல்லிவிடுவோம். ஆனால் இன்று அந்த தண்ணீரைப் பெறவே படாத பாடு பட வேண்டியதிருக்கிறது. “தவிச்ச
வாய்க்கு தண்ணீர் போல” என்பது இன்னொரு வழக்குச் சொல். சாராயம் போன்ற போதைப் பொருட்களை உட்கொள்பவர்களை நாம் கேலியாக “தண்ணி
போட்டிருக்கிறான்...” என்று சொல்வது கூட, என்னதான் அதை காசு கொடுத்து உட்கொண்டாலும், அது சுலபமாக - தட்டுப்பாடின்றி கிடைக்கிறது
என்பதால்தான்.
அதுபோல, “தண்ணி தெளிச்சு விட்டுட்டேங்க” என்று சிலர் சொல்வார்கள். தண்ணீரைக் கொண்டு அவனை விலக்கி வைத்துவிட்டேன் என்பது அதன்
பொருள். இப்படியாக நமது சமூக வாழ்வில் தண்ணீருக்குள்ள இடம் மிக உறுதியானது; மறுக்க முடியாதது.
தமிழகத்தில் சென்னை தவிர பிற எல்லா மாவட்டங்களும் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கியுள்ளன. சென்ற வருடம் பருவ மழை பொய்த்துவிட்டது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 18 அடிக்கும் கீழே போய்விட்டது. அந்த அணையின் உட்பரப்பில் ஆடு - மாடுகள் மேய்கின்றன. விவசாயிகள்
தங்களது வாழ்வைத் தொலைத்துவிட்டு நிற்கின்றனர். சிலர் தற்கொலையும் செய்துகொண்டனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஒன்றும் புதிதல்ல. இங்கு ஒரு மூன்று தலைமுறையாக காவிரி நீர் சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில
வருடங்கள் தவிர, எல்லா கோடை காலங்களிலும் மக்கள் குடிநீருக்குத் திண்டாடுவது இங்கு பழகிப்போன ஒன்று. அதற்குப் பல காரணங்கள்
சொல்லலாம். அரசு, ஆறு - குளங்களை சரியாகப் பராமரிக்காதது, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்களை எழுப்புவது, திட்டமிட்ட
வினியோகமின்மை, சமீபத்தில் ஏற்பட்ட மின் தட்டுப்பாடு... இப்படி பலப்பல.
ஆனால், இயற்கையான காரணம் என்னவெனில் தாமிரபரணி நதியைத் தவிர, பிற எந்த நதியும் தமிழகத்தில் உற்பத்தியாவதில்லை. மற்ற நதிகளின்
உற்பத்தி ஸ்தலம் அண்டை மாநிலங்கள். எனவேதான் தமிழகம் இத்தனை நெருக்கடியை சந்திக்கிறது. காவிரியும், முல்லைப் பெரியாறும்,
கிருஷ்ணா நதியும் வேறு வேறு இடங்களில் உற்பத்தியாகி, அவர்கள் தயவு வைத்தால் மட்டுமே அவை இங்கே வரும் நிலை. எனவே, தமிழகத்தில்
விவசாய நிலத்தின் பரப்பளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. குன்று விவசாயம் லாபகரமான தொழிலல்ல.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 18 லட்சம் கிணறுகளில், 2 லட்சம் கிணறுகள் வறண்டு போய்விட்டன. தமிழகத்தின் 384 வட்டங்களில் 142
வட்டங்களில் நீர் பெருமளவு உறிஞ்சப்பட்டுவிட்டது. 33 வட்டங்கள் மிகவும் சிக்கலாக இருக்கிறது. 57 வட்டங்களில், தண்ணீர் தட்டுப்பாடு தொடக்க
நிலையிலுள்ளது.
உலகிலேயே ஒரு தனி நபருக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு 6000 கனமீட்டர் எனில், ஓர் இந்தியருக்கோ இது 2000 கன மீட்டர் மட்டும்தான்
கிடைக்கிறது.
மழையின் அளவும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது. ராஜஸ்தானில் 11 மி.மீட்டர் மழை எனில், கேரளாவில் 6000 மி.மீட்டர்;
சிரபுஞ்சியில் 11,500 மி.மீட்டர் எனில், தமிழகத்தில் வெறும் 600 முதல் 1100 மி.மீட்டர் மழைதான் பெய்கிறது. கேரளாவில் உள்ள 44 ஆறுகளின்
80 சதவிகித நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. ஒவ்வொரு நதியும் தோன்றிய 30 கிலோ மீட்டர் அளவிலேயே கடலைத் தொட்டுவிடுகிறது.
இத்தகைய ஓர் இக்கட்டான சூழலில்தான் மத்திய அரசின் “தேசிய நீர் கொள்கை 2012” வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நீர் இனி இலவசமாகத்
தரப்படாது. நீருக்கு விலை உண்டு. தண்ணீர் இனி வியாபாரப் பொருள். நீரின் பயன்பாட்டிற்கு ஏற்ப இனி ஒவ்வொருவரும் தண்ணீருக்குக் கட்டணம்
செலுத்த வேண்டும். இப்போது நாம் கட்டணம் செலுத்தி பெறும் நீர் நகராட்சி, பஞ்சாயத்துக்களால் வழங்கப்படுகிறது. ஆனால் இனி உங்களுக்குச்
சொந்தமான நிலத்தில் நீங்கள் கிணறு தோண்டினாலும், அதிலுள்ள நீர் உங்களுக்குச் சொந்தமல்ல. அதற்கு நீங்கள் அரசுக்குக் கட்டணம் செலுத்த
வேண்டும். 1882 இந்திய சொத்துரிமைக் கட்டுப்பாட்டு சட்டத்தைத் திருத்தி, “நிலத்தடி நீரின் மீது நிலத்தின் சொந்தக்காரனுக்கு எவ்வித உரிமையும்
இல்லை” என்று சொல்கிறது இந்த சட்டம்.
10 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை தற்போது எவ்வாறு “மின்சார ஒழுங்குமுறை ஆணையம்” மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்து
விற்பனை செய்கிறதோ, அதுபோல, தண்ணீரையும் “தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம்” ஒன்றை ஏற்படுத்தி, ஊரிலுள்ள ஆறுகள், ஏரிகள்,
குளங்கள், தனி நபர்களுக்குச் சொந்தமான இடங்கள் எல்லாவற்றையும் இந்த ஆணையம் கைப்பற்றி, தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யுமாம்.
இதற்காக மாநிலங்களின் அதிகரப் பட்டியலில் உள்ள 17ஆம் பிரிவான - ஆறுகள், பாசனக் கால்வாய்கள், அணைக்கட்டுகள், மின்சார நிலையங்கள்
போன்றவற்றை மத்திய அரசுப் பட்டியலுக்கோ அல்லது பொதுப் பட்டியலுக்கோ மாற்ற வேண்டும் என்கிறது. இனி உங்கள் வயலுக்கோ,
தென்னந்தோப்புக்கோ நீர் பாய்ச்ச வேண்டும் எனில், அரசுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த நீர் உங்கள் நிலத்திலிருந்தே
பெறப்பட்டாலும், உங்களுக்குச் சொந்தமானதல்ல.
தண்ணீர் இனி பொதுச் சொத்தல்ல. அது அரசுக்கோ அல்லது அரசால் ஏற்படுத்தப்படும் அமைப்புக்கோ சொந்தமானது. இந்த நடைமுறை 1993ஆம்
ஆண்டே ஆரம்பமாகிவிட்டது. அந்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் (தற்போதைய சட்டீஸ்கர்) உள்ள ஷியோநாத் ஆற்றின் குறுக்கே அணை மற்றும்
நீர்த்தேக்கம் கட்டி, அதை நிர்வகிக்கும் பொறுப்பு, “ரேடியஸ் வாட்டர் லிமிட்டெட்” என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. உள்ளூர் மக்களின்
ஜீவாதார உரிமையாக விளங்கும் இந்த ஆற்றின் 23 கி.மீ. பரப்பளவை இந்நிறுவனம் ஆக்கிரமித்தது. 2000ஆம் ஆண்டில் இதை எதிர்த்து மக்கள்
போராடினார்கள். பிறகு அரசு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது.
உலக அளவில் இது 1992ஆம் ஆண்டு ரியோ-டி-ஜெனிரோ நகரில் நடந்த “உலக பூமி உச்சி மாநாட்டில்”தான் தண்ணிர் என்பது பொருளாதார மதிப்பு
மிக்க பொருள் - கச்சா எண்ணெய் மாதிரி - என்ற கருத்து உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீர்க்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம்,
கழிவு நீர் அகற்றுதல், நீர் குழாய்கள் அமைத்தல், குடிநீர்த் தொட்டி கட்டுதல், அணைகள் கட்டுமானம், தண்ணீர் வியாபாரம் போன்றவற்றை
விவெண்டி, பெக்டெல், சூயஸ் போன்ற பகாசுர தனியார் நிறுவனங்கள் கையில் எடுத்தன.
இலத்தீன் அமெரிக்க நாடான பொலியாவில் உள்ள ‘கொச்சகோம்பா’ நகரின் நீர் வினியோகத்தை அமெரிக்க நிறுவனமான ‘பெக்டெலு’க்கு அந்நாட்டு
(பொலிவியா) அரசு ஒப்பந்த அடிப்படையில் வழங்கியது. அந்நிறுவனம் அங்கு பெய்யும் மழைக்கும் கூட சொந்தம் கொண்டாடியது. அதுவரை அங்கு
மக்கள் செலவில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள், அணைகள் எல்லாவற்றையும் அது தன் கைவசப்படுத்தியது. மக்கள் குடிநீருக்கு வரிசையில்
நின்றார்கள். குடிநீர் கட்டணம் கிட்டத்தட்ட 500 மடங்கு உயர்ந்தது. மக்கள் தெருவில் இறங்கிப் போராடினார்கள். போராட்டம் வலுக்கவே, பொலிவிய
அரசு ‘பெக்டெல்’ உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தது. அரசின் இந்த முடிவை எதிர்த்து உலக நீதிமன்றத்தில் 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு
‘பெக்டெல்’ வழக்கு தொடர்ந்திருக்கிறது.
இந்த மக்கள் போராட்டத்தை சித்தரிக்கும் இஸியார் பொலன் என்பவரின் ‘Even the rain” (மழையும் கூட) என்ற திரைப்படம் உலகப் புகழ் பெற்றது.
இதைப் போன்றே, தென்னாப்பிரிக்காவில் பல நகரங்களில் குடிநீர் வினியோகம் தனியார் மயமாக்கப்பட்டது. சூயஸ், விவெண்டி, பைவாட்டர் போனற்
நிறுவனங்களிடம் குடிநீர் வினியோகப் பொறுப்பு கையளிக்கப்பட்டது. அவர்கள் குடிநீர்க் குழாய்களில் மீட்டர் பொருத்தினார்கள். கட்டணமாக 7500
ரூபாய் வசூலித்தார்கள். இடையிடையே கட்டணங்களை் வரம்பின்றி உயர்த்தப்பட்டன. கட்டணம் செலுத்த வழியில்லாத 1 கோடிமக்களுக்கு குடிநீர்
வினியோகம் நிறுத்தப்பட்டது. ஏழை - எளிய மக்கள், ஆறுகள் – குளங்களில் தேங்கிக் கிடந்த நீரைக் குடித்ததால் - வாந்தி, பேதி, காலரா
நோய்களால் பாதிக்கப்பட்டனர். பலர் இறந்தனர். எனவே மக்கள் வெகுண்டெழுந்து போராடினார்கள். பிறகு அரசு இறங்கி வந்து, ஒரு நாளைக்கு ஒரு
நபருக்கு 25 லிட்டர் நீர் இலவசம் என்று அறிவித்தது. இன்றளவும் அங்கு இதே நிலைதான்.
நமது நாட்டிலும் - கேரளாவில் உள்ள பிளாச்சிமடா என்ற ஊரில் ‘கோகா கோலா’ நிறுவனத்திற்கெதிராக மக்கள் போராடி, அந்நிறுவனத்தை
விரட்டியடித்தனர். அது இப்போது நமது நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் என்ற இடத்தில் தனது ஆலையை அமைத்து வருகிறது.
நீரை வைத்து இன்று கோடிகளில் புரள்கிறார்கள். “டேங்கர் லாரி” வைத்திருப்பவனே பெரும் முதலாளி ஆகிவிடுகிறான். கிணற்று நீரை “ரிவர்ஸ்
ஆஸ்மாசிஸ்” (எதிர் சவ்வூடு பரவில்) முறையில் சுத்திகரித்து, நீரை பாட்டில்களிலும், கேன்களிலும் அடைத்து விற்பனை செய்கிறார்கள். தண்ணீர்
தட்டுப்பாடு ஒருபுறமிருக்க, கிடைக்கும் தண்ணீரும் தூய்மையற்றதாக - குடிப்பதற்கு லாயக்கற்றதாக இருக்கிறது. எனவேதான் தண்ணீர் வியாபாரம்
கொடிகட்டிப் பறக்கிறது.
“உணவையும், நீரையும் காசுக்கு விற்பதே பெரும்பாவம்” என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. யாத்ரீகர்களுக்கு இலவச உணவும், தங்குமிடமும்
அளிப்பதற்காகவே அக்கால மன்னர்கள் வழியெங்கும் “அன்ன சத்திரங்கள்” அமைத்து வைத்தார்கள்.
சேவைத் தொழில்களான கல்வி, மருத்துவம் - இவற்றோடு, தண்ணீரும் இன்று விற்பனைப் பொருளாக - மக்களைக் கசக்கிப் பிழியும் ஒன்றாக ஆகி
வருகிறது.
உலகின் மொத்த தண்ணீர் அளவில் 97 சதவீதம் கடல் நீராகும். மீது 2.5 சதவீதம் பனிக்கட்டியாக உள்ளது. 0.5 சதவீதத்தை மட்டுமே நன்னீராக
நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்று இந்தியாவில் ஒருவனது தண்ணீர்த் தேவை 2500 கியூபிக் மீட்டர். இது வெகுவிரைவில் 10,000 கியூபிக்
மீட்டராக மாறும் தேவையுள்ளது. எனவே, இனி வருங்காலங்களில் தண்ணீரின் தேவை நம்மை பயமுறுத்தக் கூடும்.
இப்போதே கூட பெரும்பாலான நகராட்சிகளில் தண்ணீர் கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். தண்ணீரும் - வாரம் ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு
ஒருமுறை என்ற அளவில்தான் வினியோகம் செய்யப்படுகிறது. மிகப்பெரும் ஹோட்டல்களும், தங்கும் விடுதிகளும் தண்ணீருக்காகவே பெருமளவு
பணத்தை செலவிடுகின்றன. இவையனைத்தும் வாடிக்கையாளர்கள் தலையில்தான் சுமத்தப்படுகின்றன.
நாம் அருந்தும் ஒரு லிட்டர் தண்ணீரில் நைட்ரேட் 20 மில்லி கிராம், துத்த நாகம் - ஃப்ளோரைடு தலா 1 மில்லி கிராம், சோடியம் 20 மில்லி கிராம்
என்ற அளவை மிகாமல் இருக்க வேண்டும். இதுவே முறையான நல்ல நீராகும். ஆனால், இவை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் உள்ள நீர்தான்
தமிழகத்தின் பல மாவட்டங்களில் குடிநீராகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு. சிறுநீரக நோய்கள், இதய நோய்
போன்றவை இவற்றால் உருவாகின்றன.
ஆறுகளிலும், கடலிலும் தொழிற்சாலைகளின் கழிவு நீர் கலப்பதால், சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடு ஏற்பட்டு - அது மனிதனைத் தொற்றி, பல
நோய்களுக்கு அவனை ஆளாக்குகிறது. திருப்பூர் சாயப்பட்டறைக் கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலப்பதால், அங்கு விவசாயம் பாழ்பட்டது.
குடிநீருக்கும் கேடு வந்தது. வியாதிகளும் பெருகின.
இந்திய அளவில் பாட்டில் தண்ணீர் வியாபாரம் தமிழகத்தில்தான் அதிக அளவில் நடக்கிறது. சாராய அதிபர்கள், கல்வி வள்ளல்கள் ஆகியோருக்கு
அடுத்தபடியாக, நீரைக் கொள்ளையடித்து விற்பவர்கள்தான் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்.
இன்று நீர், நிலம் (மணல் கொள்ளை), காற்று (தொழிற்சாலைகளில் இருந்து வெளிப்படும் விஷவாயு) எல்லாம் நாசமாகிவிட்டன.
இறைவன் படைத்த உலகத்தை மனிதன் தனது சுயநல வெறியால் கூறு போடுகிறான்; நாசமாக்குகிறான். இயற்கையோடு இணைந்த வாழ்வே நல
வாழ்வாகும். இயற்கையின் முன்னாள் மனிதன் வெறும் குழந்தைதான்!
அவனது பிள்ளை விளையாட்டை, இயற்கைத் தாயும் வலி மிகுந்த ஒரு குறுநகைப்போடு, வேறு வழியின்றி பொறுத்துக்கொண்டிருக்கிறாள். வேறு
என்ன சொல்ல...?
“உங்களின் தண்ணீர் பூமியினுள் போய்விட்டால், அப்போது ஓடம் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதைத் தெரிவியுங்கள் என
(தூதரே!) கூறும்.” (திருக்குர்ஆன் 67:30)
|