நவைத்து சவ்மகதின் அன்அதாயி ஃபர்ளி ரமழானி ஹாதிஹிஸ்சனத்தி என்று நீயத்தை மனதுக்குள் ஓதி தண்ணீர் கெட்டிலை அகற்றி வைத்து சுபுஹ் பாங்கிற்காக காத்திருக்கும் ஸஹர் நேரத்தோடு துவங்குகின்றது புனித நோன்பு.
இரவு பகலாகவும் பகல் இரவாகவும் மாறும் ஓர் அற்புத மாதம். ஒன்றுக்கு பத்து என நன்மைகளை வாரி வழங்கும் சங்கைக்குரிய ரமழான் மாதம். ஆயிரம் மாதங்களை விடவும் மேலான லைலத்துல் கத்ரு எனும் பரிசுத்த இரவை பிற் பத்துக்களில் அடைவதற்காக பள்ளிவாசல்களில் இஃதிகாஃப், சிறப்புத்தொழுகை, மாதம் முழுவதும் வணக்க வழிபாடுகள் சதக்கா, மற்றும் ஜக்காத், தான தர்மங்கள் போன்ற ஏராளமான இபாதத்துகள் என தம்மை இணைத்துக் கொண்டு ஒருவித மனக்கட்டுப்பாட்டுடன் முப்பது நாட்களையும் முழு மனதோடு ஈடுபாட்டுடன் கழித்துச் செல்லும் சாரார் ஒருபுறம், அதே நேரம் இரவு வேளைகளில் சிறுவர்களின் சேட்டைகள் வீதியெங்கும் விளையாட்டுக்கள் நண்பர்களின் ஒன்றுகூடல்கள் கடற்கரை மணலில் மல்லார்ந்து படுத்துக் கொண்டு கேலி கிண்டல் பேசி நேரம் போக்குவது என கண்ணியமிக்க இப் புன்னிய மாதத்தை வெறுமொரு பொழுது போக்காக மட்டுமே எண்ணுவோர் மறுபுறம்.
ஷஃபான் மாத இறுதிகளிலேயே ரமழானின் தூய வாசம் வீசத் துவங்கிவிடும். மாத இறுதியில் மஃரிப் தொழுது விட்டு பள்ளிவாசலின் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று ஆவலோடு வானத்தை நோட்டமிடுவோம். யார் கண்ணுக்கு முதலில் பிறை தென்படுகின்றதோ அவர்தான் அதிர்ஷ்டசாலி. சில நிடங்களே காட்சி தரும் நூலிழை போன்ற இளம் பிறையைக் கண்டவுடன் முகம் மலர்ந்து அகம் குளிர்ந்து வீதிகளில் பொறை கண்டாச்சு...வாப்பா வந்தாசு... என கூச்சலிட்டு சின்னஞ் சிறுவர்கள் குதுகளிக்கும் குரலோசை. அதைக் கேட்டு தாய்க்குலங்கள் அவசர அவசரமாக அடுப்படி வேளைகளில் முனைவர். இதோ இஷாவுக்குப் பிறகு தராவீஹ் தொழுவதற்காக பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும். இத்தனை நாள் இருந்த வழமைக்கு மாற்றமான புதிய சூழல் - புதிய தொழுகை என பரவசத்தோடும் பரபரப்போடும் தாய்க்குலங்கள் தைக்காவிற்கு படையெடுக்கும் அற்புத நிமிஷங்கள். இப்படி அருமையான ரமழான் மாதத்தின் அழகிய நிகழ்வுகளை நாம் சற்றே அலசிப் பார்த்து அசை போடுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பள்ளிவாசல்களின் ஹவ்ளுகள் சுத்தம் செய்யப்பட்டு புதிய வர்ணங்கள் மற்றும் வெள்ளைப்பூசி மராமத்து பணிகள் செய்து அனைத்து பள்ளிகளும் புதுப்பொலிவோடு காணப்படும். நோன்பு கஞ்சி காய்ச்சும் இடங்களில் சட்டி சிட்டிகள் நார்கட்டில்கள், போச்சிகள் இப்படி தேவையானயான அனைத்து சாமான்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டு அல்லது அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அஸர் தொழுகைக்குப்பின் ஊத்துக் கஞ்சி வாங்குவதற்காக மதியம் இரண்டு மணிக்கே அலுமினியம், எவர்சில்வர் தூக்குப்போனிகள் வரிசையில் வைக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு பள்ளி கஞ்சிக்கும் ஒவ்வொரு டேஸ்ட்! சிறுவர்கள் முதல் தள்ளாடும் அப்பாக்கள் வரை கஞ்சி வாங்க வரிசையில் நிற்பது கண்கொள்ளாக் காட்சி! சலசலப்பு முந்தியடித்தல் போன்றவற்றை சமாளிக்க எல்லாப் பள்ளிகளிலும் ஜமாத்திற்கு ஒரு ஜாம்பவான் இருப்பார். அவர் போடும் சத்தம்தான் அனைவரையும் நெறிப்படுத்தும். பள்ளிக்குப் பள்ளி படையெடுத்து பரபரப்போடு கஞ்சி வேட்டை நடத்தி காணாத குறைக்கு கறிக்கஞ்சியோடு வெள்ளைக் கஞ்சியைக் கலந்து வீட்டிலுள்ளவர்க்கு போக மீதியை உறவினர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் பண்பு இன்றளவும் நம் காயலர்களிடம் உள்ளது. இதுக்குத்தான் ஆம்பளைப் பிள்ளை பெறணும்ங்கிறது என மார்தட்டிக் கொள்ளும் தாய்க்குலங்களும் உண்டு.
கஞ்சிக்கு ஸ்பான்ஸர் செய்வோர் வீட்டுக்கு சில போச்சிகள் அணிவகுத்து வருவது வழக்கம். அக்கம் பக்கத்து வீட்டார்க்கு அதுவே பெரும் அதிர்ஷ்ட்டம்! ஆரம்ப காலங்களில் நமதூரில் வெறும்(வெள்ளைக்)கஞ்சி மட்டுமே வழக்கத்திலிருந்து வந்தது. காலப்போக்கில் சில தனவந்தர்களின் தயவால் கறிக்கஞ்சி, கோழிக் கறிக்கஞ்சி, பிரியாணிக் கஞ்சி, வான்கோழிக் கறிக்கஞ்சி என்றெல்லாம் வடிவம் பெற்றது.
மதிய வேலையில் மயான அமைதி போல் வெறிச்சோடிக் கிடக்கும் வீதிகள் மாலை நேரத்தில் களைகட்டத் துவங்கிவிடும். முக்கு மூலைகளில் புதிதாக முளைத்த வடைக்கடைகள், சதா கடகடவென ஓசையெழுப்பும் தையல் கடைகள், நொங்கு, பழக்கடை இப்படி கூட்டம் மொய்க்கும் வியாபார கூடங்களால் பரபரப்போடு பஜார் காணப்படும். லுஹருக்குப் பின் தாய்க்குலங்கள் நோன்பு திறக்க தேவையான விதவிதமான பதார்த்தங்கள் பலகாரங்கள் செய்யும் அலுவலில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வர்.
ப்ளாஸ்டிக் அதிகம் பயன்படுத்தப்படாத அக்காலத்தில் பல கிராமங்களிலிருந்தும் பள்ளிவாசல்களுக்கு மாட்டு வண்டிகளில் மண் சிட்டிகள் வந்து இறங்கும். அதில் சில பெரிய சைஸ் சிட்டிகள் பள்ளி கமிட்டியிலுள்ள சில குறும்பர்களால் ஒளித்து வைக்கப்பட்டு கஞ்சி குடிக்கும் வேளையில் மட்டுமே அவைகள் காட்சி தரும். மாலை வெயில் மங்கிய அந்தி வேளியில் பள்ளிவாசல் தோட்டங்களில் பாய் விரிக்கப்பட்டு பாலகர் முதல் பெரியவர் வரை அமர்ந்து நோன்பு துறக்கும் அற்புத நிமிடங்கள் மறக்க இயலாதவை. அங்குதான் எத்தனை சுவரஸ்யமான நிகழ்வுகள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்.
நோன்பு நோற்ற பசியோடும் களைப்போடும் பள்ளிக்குள் சென்றவுடன் பாயில் அமர்ந்து பசியாற இரண்டு சிட்டிக்கஞ்சி நமக்காக ஊற்றப்படும். இடக்கையில் ஏந்தி வரும் ஒருவர் தாலத்தில் குவிக்கப்பட்ட சட்னியை முதல் மூன்று விரல்கலால் உருட்டி நம் கைகளில் தரும் போது அடுத்தவரின் சட்னியை அளவு பார்க்கும் சிறுபிள்ளைத்தனம் அனைவருக்கும் உண்டு. இன்னும் சில இடங்களில் பூசனி இலையில் மடிக்கப்பட்ட சட்னியை வாங்கி திறந்து பார்த்ததும் மனம் குதூகலிக்கும். கைகளில் பேரீச்சம்பழத்தின் பிசுபிசுப்பும் சட்னியின் கசிவும் மோதியப்பா மைக்கில் இருமும் சத்தத்திற்கான காத்திருப்பும், இரண்டு சிட்டிகளை சேர்த்து அதற்கு நடுவில் மிக கவனமாக ஈத்தப்பழத்தை நிறுத்தி வைத்து வாங்கி வந்த வடையை சிறு சிறு துண்டுகளாக்கி கஞ்சிக்குள் போட்டு அழகு பார்ப்பதும் இனிய நினைவுகள்தான்.
இதில் மிகவும் ரசிக்கக்கூடிய செயல்கள் சிறுவர்களின் சேட்டைகள்தான். காலையில் குளிக்கும்போதே தொட்டித் தண்ணீரை கொஞ்சம் உள் வாங்கி விட்டு லுஹர் தொழும்போது ஹவ்ளுகளில் மூன்றுக்கு முப்பது தடவை வாயைக் கொப்பளிக்க, “டேய்! போதும்... போதும் சீக்கிரமா தொழுவப் போங்கடா” என சில பெரிசுகள் அதட்டுவதும் வழக்கம். மாலையில் அப்பாவி பிள்ளைகளாக முகத்தை வைத்துக் கொண்டு உதட்டைக் காய விட்டு, ஒரிஜினல் நோன்பாளி போல் தோற்றத்தை உருவாக்கி, கஞ்சி ஊத்த வரும் நபரின் கவனத்தை ஈர்த்து, இரண்டு சிட்டிக்கு செஞ்சுரி அடிப்பார்கள். சில வேளை கஞ்சி தட்டுப்பாடு வரும்போது சிறுவர்களுக்கு இரண்டு சிட்டியை ஒரு சிட்டியாகக் குறைக்கும் படலம் துவங்கும். சுங்கத்துறை ரெய்டு வருவதைப் போன்று சுதாகரித்துக் கொண்டு சிறுவர்கள் அவசர அவசரமாக தனது கவுட்டுத் தொடைக்கு கீழ் ஆவி பறக்கும் கஞ்சி சிட்டியை ஒளித்து வைப்பதை கண்டு ரசித்ததுண்டு.
பாங்கு சொல்லட்டும்... அதை சாப்பிட வேண்டும் இதை சாப்பிட வேண்டும் உம்மா செஞ்சு வச்ச வடை, சமூசா, ரோஸ் மில்க், கடப்பாசி இப்படி எல்லாத்தையும் ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்கிற எண்ண ஓட்டம் நோன்பு திறக்க அமர்ந்திருக்கும் வேளையில் கடிவாளமற்ற காட்டுக்குதிரை போல மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அல்லாஹு அக்பர் என பாங்கு சொல்லி லாயிலாஹா இல்லல்லாஹ் என மோதியப்பா முடிப்பதற்குள் சிட்டிகள் பல்லிளிக்க - வயிறு நிரம்பியதும் சாப்பிட எண்ணிய அனைத்தும் சடவு முறித்து விடும்.
முதல் வாரத்தில் தராவீஹ் தொழுகைக்காக பள்ளிவாசல்கள் அலைமோதும் வாண்டுகளும், வயோதிகர்களும் வரிசையில் நின்று தொழ படிப்படியாக சஃபுகள் குறைந்து கொண்டே போகும். இமாம் ஓதும் நீண்ட சூராக்கள் முடிவடையும்போது ஓடிச் சென்று அல்லாஹு அக்பர் என தக்பீர் கட்டி இணைந்து கொள்ளும் சிலர். முதல் ரக்அத்தை விட்டு விட்டு இரண்டாம் ரக்ஆத்தில் சேர்ந்து கொள்ளும் சிலர். தக்பீர் கட்டியதும் தாமதமாக எழுந்து தொழும் சிலர் இப்படி பல நிகழ்வுகளைப் பள்ளிவாசலில் காண முடியும்.
என்ன பாடுபட்டாவது வேலைகளை முடித்து விட்டு தைக்காவிற்கு தொழப் போகும் பெண்கள். வெள்ளைக் குப்பாயத்தோடு கால் கழுவ பிரிந்துவிட்ட ஒளுவை மீண்டும் தொடர கேத்தல்களில் தண்ணீர் கொண்டு செல்வதையும் காணலாம். லெப்பை அதாவது தொழவைப்பவருக்கு ஒரு சின்ன அறையில் பல விதமான தின்பண்டங்கள் வைக்கப்படும். தப்பித் தவறி அவர் கதவிற்கு தாழ்ப்பாள் போட மறந்துவிட்டால் தக்பீர் கட்டியதும் கழுகுக் கண்களோடு காத்திருக்கும் சிறுவர் கூட்டம் மெல்ல உள்ளே நுழைந்து ஆட்டையைப் போட்டுவிடும். தன் கண் முன் நடக்கும் இந்த அட்டூழியத்தை தடுக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் லெப்பை சத்தம் போட்டு அவசரமாக ஓதி சலாம் வாங்கியதும் பின்னால் தொழும் சில பெரிய கம்மாக்கள் “லெப்பை ஏன் இப்படி அவசரமா ஓதுறீங்க? நிதானமா ஓதுங்க” என கடிந்து கொள்ள, பண்டம் போன கதையை லெப்பை சொல்லி கதவை அடைக்க தைக்காவிற்குள் ஒரே சிரிப்பு மயம்தான்.
ஒரு முறை எங்கள் பகுதியில் தொழ வைக்க வந்த லெப்பைக்கு இரண்டு தைக்காக்கள் கிடைத்தது. அவரும் அவசர அவசரமாக குனிந்து நிமிர்ந்துவிட்டு அடுத்த தைக்காவிற்கு ஓடி விடுவார். இவரது செயலை வழக்கமாக சில பெரிய மனுஷிகள் கண்டிக்கவே, எரிச்சலடைந்த லெப்பை எல்லோரையும் சுஜூதில் போட்டுவிட்டு கதவைத் திறந்து கம்பியை நீட்டிவிட்டார். நீண்ட நேரம் சுஜூதில் கிடந்த பெண்மணிகள் சரி லெப்பை மனமுருகி சஜ்தாவில் வேண்டுகின்றார் என ஆரம்பத்தில் நினைக்க நேரம் போகப் போக திரையை விலக்கிப் பார்த்ததும் லெப்பை டிஸ் அப்பியர் என்பது தெரிய வந்தது. “சுபுஹானல்லாஹ்! லெப்பை இப்படியா செய்வோ...?” என கூச்சலும் குழப்பமும் சலசலப்புமாக அன்றைய தராவீஹ் தொழுகை இல்லாமல் போனதை என் சகோதரிகள் சொல்லக் கேட்டுள்ளேன்.
இதே போல வேறு ஒரு தைக்காவில் துணைக்கு தொழ வைப்பதற்காக ஒரு பையனை லெப்பை அழைத்துச் செல்வது வழக்கம். லெப்பை தொழ வைக்கும் கடைசி நேர வித்ரு தொழுகைக்கு முன், திரை வழியாக பண்டங்கள் வைக்கப்படும். தட்டில் உள்ள முக்கிய ஐட்டங்களை பையன் பதம் பார்த்து விட, லெப்பைக்கு வெறும் மிச்சர் மட்டுமே மிஞ்சியது. “தம்பி இப்படி செய்யாதே! நான் தொழுது முடித்து உனக்குத் தருவதை மட்டும் நீ சாப்பிடு!!” என எச்சரித்துள்ளார். நஃப்சை அடக்க முடியாமல் பையன் அடுத்த நாளும் இதையே வாடிக்கையாகத் தொடர தக்பீர் கட்டியவர் சட்டென பையனின் கையைப் பிடித்துக் கொண்டு, ரூகூஃ – ஸுஜூது என சலாம் வாங்கி மொத்த தொழுகையையும் முடித்ததும், பிடியில் இருந்த பையனை சாத்து சாத்து என சாத்திவிட்டாராம். இப்படி தெருவுக்குத் தெரு தைக்காவுக்குத் தைக்கா பல்வேறு சுவையான நிகழ்வுகள் நடப்பது இயல்பு.
இரவில்தான் சங்கங்கள் உயிர்பெறும். அதன் உறுப்பினர்கள் ஒன்று கூடி அரட்டையடிப்பதும், ஊர் பசாது பேசுவதும் வாடிக்கை. பெண்களில் கொள்ளை சுற்றிப்பார்க்க என ஒரு கூட்டம் தெருத் தெருவாக குடியிருப்புகளுக்கு இடையிலான தைக்காக்களை சுற்றிப்பார்த்து வருவார்கள். நம்ம பசங்க பால்மாவு டின்னில் துளைகளிட்டு மெழுகுவர்த்தியை ஏற்றி, கள்ளன் போலீஸ் விளையாடுவதும், கழுதையின் வாலில் டின் கட்டி அல்லது தேங்காய் மட்டையைக் கட்டி தீ வைத்து விரட்டும் சில விபரீதமும், தப்பித் தவறி நாய் நம் கண்ணில் பட்டுவிட்டால் அது நாய் படாத பாடு பட்டு ஓடி ஒளியும் அவலமும் வீதியெங்கும் சஹர் நேரம் வரை தொடரும் இது போன்ற அட்டகாசங்கள்தான் ரமழான் இரவுகளில் உள்ள ஹைலைட்!
நான் மத்திய காயலைச் சார்ந்தவன். எங்கள் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில் தராவீஹ் முடிந்து வானம் தெரியும் திறந்தவெளியில் ஒன்றுகூடி ஆள்காட்டி விரலை உயர்த்தி “தீன் தீன் முஹம்மத்... சலவாத் முஹம்மத்” என சபதமெடுத்து பிரிந்து செல்வோம். தராவீஹ் தொழுகை முடிந்ததும் பல பள்ளிகளிலும் வித்ரிய்யா ஓதப்படும். அதபுடன் வித்திரியா“வை“ என்று லெப்பை “வை”யை அழுத்திச் சொன்னதும் நார்சா வைப்பார்கள். தெருக்களில் மெய் மறந்து விளையாட்டில் மூழ்கிக்கிடக்கும் எங்களுக்குத் தொலை தொடர்பு இல்லாத அக்காலத்தில் கூட அதிசயமாகத் தகவல்கள் வந்து சேரும். ஓடிச் சென்று இடுப்பில் சொறுகி வைத்த தொப்பியை அணிந்து கொண்டு வரிசையில் அமர்ந்து நார்சா வாங்கி தின்று மகிழ்வோம்.
செல்ஃபோனில் அலாரம் வைத்து சஹருக்கு கண்விழிப்பது இக்காலம். தினமும் மறக்காமல் சாவி கொடுத்து ரேடியம் வைத்த முள் ‘டிக்’ ‘டிக்’ என ஓசை தந்து ஓடக்கூடிய அலாரம் மூன்று வீடுகளுக்கு கேட்கும் அளவிற்கு சப்தமெழுப்பும் வட்ட வடிவிலான டம் பீஸ்தான் அப்போது பரவலாக எல்லா வீடுகளிலும் இருந்தது. அதையும் தாண்டி பக்கீர் அப்பாக்கள் கொட்டடித்துக் கொண்டு பாட்டுப்பாடி முடுக்குகளில் வலம் வந்து போவார்கள். “பக்கீரப்பா வந்துட்டோ... பக்கீரப்பா வந்துட்டோ” என பதறியடித்துக் கொண்டு எழுந்து மாசி உரலைத் துடைப்பதும், வறட்டி வைத்த கறி, இறால், மீன் பொரிப்பதும், அந்த நடு நிசியிலும் கூட நாசித்துவாரங்களை வந்தடையும். வாசனையோ சொல்லி மாளாது.
நோன்புக்கும் நகரா அல்லது முரசு எனும் டங்காவுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. சில இளைஞர்கள் லைன் டீயைப் போட்டுக்கொண்டு அதே தீக்கனலில் டங்காவைக் காய வைத்து ‘ஒத்தக் கொட்டு’ ‘ரெட்டக் கொட்டு’ என சஹர் நேரத்தை அவ்வப்போது ஒலி பெருக்கி மூலம் அறியத் தருவார்கள். என் தாயார் வீடு இருந்த மஹ்ழரா பகுதிகளில் ஆஸாத் தெருவிலிருந்து ஹாஃபிழ் அமீர் அவர்களின் தந்தை தனது வயதான காலத்திலும் குடைக் கம்பிகளில் சோடா மூடிகளைத் தட்டிக் கோர்த்து கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் ‘சில்க்...’ ‘சில்க்’ எனும் ஒலியெழுப்பி முடுக்குகளில் சென்று மக்களை சஹருக்கு எழுப்பி விடுவார்கள். நாளடைவில் அவர் ‘சில்க் அப்பா’ என்றே மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டார்.
பின்னர் காலம் மாறியது காட்சியும் மெல்ல மாறத் துவங்கியது. அநேக பள்ளிகளில் ஹதீஸ் எனும் மார்க்க உபந்நியாசங்கள், குர்ஆன் வகுப்புக்கள் ஆரம்பமாயின. “நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது..... காதிரியா கொடிமர சிறு நெய்னார் பள்ளியின் சஹர் நேர விசேஷ ஒலிபரப்பு... நேரம் சரியாக மூன்று மணி பதினைந்து நிமிடம்..... சஹர் முடிவடைய இன்னும் ஒரு மணி முப்பது நிமிடங்கள் உள்ளன...” எனும் அறிவிப்பு தனித்துவம் வாய்ந்த குரலோசைக்குச் சொந்தக்காரர் அபுல் காசிம் காக்காவிடமிருந்து ஒலிபெருக்கி மூலம் நம் காதுகளில் வந்தடையும்.
ரமழான் கடைசிப் பகுதியில், பகல் நேரத்தில் “உம்மா தமாம் சாப்பாடு வசூல்” என அந்தந்த முஹல்லாக்களின் பிரதிநிதிகள் வந்து கதவைத் தட்டி ரசீது தந்துவிட்டுச் செல்வார்கள். கடைசி சஹர் உணவு களறி சாப்பாட்டுடன் கை மணக்க உண்டு வரும் காலம் இன்னும் தொடர்வதுதான் சிறப்பு.
பிற்பத்துகளில் அமல்களும் கூடும் அதே நேரம் அட்டகாசங்களும் கூடும். அடம் பிடித்து அழுது தொழுது உம்மாவிடம் வாங்கிய காசுகளை நண்பர்களோடு சேர்ந்து ஏரலுக்குச் சென்று வித விதமான பட்டாசுகளை வாங்கி வந்து தெருப்படிகளில் வைத்து விற்பனை செய்வோம். குலவானம், ஓலை வெடி, லெட்சுமி வெடி, பாம்பு மாத்திரை, பொட்டு வெடி, ரோல் வெடி, இரயில் வெடி, கம்பி மத்தாப்பு, சக்கரம், ராக்கெட்டு, அணுகுண்டு, மிளகாய் வெடி, சடப்புடா, பென்சில் வெடி என பல ரகங்கள் உண்டு. வீடுகளின் மடைகளுக்குள் ஓலை வெடியைக் கொளுத்தி அங்குள்ளோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டதும் உண்டு. காலப்போக்கில் வெடி கலாச்சாரம் ஓர் அனாச்சாரம் எனத் தெரிய வந்ததும் அவை மெல்ல மறையத் துவங்கி விட்டது.
ஆந்திரா, மும்பை, கேரளா, ஜெய்ப்பூர், சிலோன் ஆகிய இடங்களிலிருந்து பெருநாளைக்காக வாப்பா, மாமா, சாச்சப்பா என உறவினர்களின் ஊர் வருகை மிகுந்த உற்சாகத்தை தரும். ஆயத்த ஆடைகள் அறிமுகமில்லாத அந்த நாளில் நகரில் உள்ள பிரதான துணிக்கடைகள் இரவு வெகுநேரம் வரை திறந்தே இருக்கும். தையல் கடைக்காரர்களுக்கு மவுசு கூடி விடும். பெண்கள் தனது புடவைக்கு மேட்சிங்காக பிளவுஸ் பீஸ் கிடைக்காமல் பெருநாள் இரவு வரை அலைந்து திரிவதுண்டு. உள்ளூர் ஹசன் ஸ்டோர், சிங்கர் ஸ்டோர் ஆகியவைகள்தாம் பிரதான துணிக்கடைகள். ஜெஸ்மின் அதற்குப் பிறகுதான் வந்தது. தொப்பிக் கடை முத்து காக்காவிடம் பின்னல் தொப்பிகளுக்கு அளவு கொடுத்ததும் மிக நேர்த்தியாக தைத்து தருவார். வட நாட்டிலிருந்து வந்து புடவை வியாபாரம் செய்யும் சேனச்சிகளுக்கு அப்போது ஏகப்பட்ட மவுசு. சேலையும் அந்த பிறை போட்ட டிஸனும் அப்போது ஃபேஷன்.
அது போக துணிமணிகள் எடுப்பதற்கு வெளியூர் என்றால் அது திருச்செந்தூர் ஏவி அண்ட் கோ மட்டும்தான். கருப்பு பர்தா இல்லாத காலம். எட்டு முழ வேஷ்ட்டியை சேலைக்கு மேல் சுற்றி வெள்ளை நிற பென்குவின் போல நமது தாய்மார்கள் அங்கு செல்வதைக் காணலாம். நோன்பு துறக்க ஈத்தப்பழம் தண்ணீர் ஆகியன அங்கு இலவசமாகத் தரப்படும். நம் பெண்டிர்களுக்கு நல்ல பாதுகாப்பும், மரியாதையும் அக்கடையின் உரிமையாளர் மூலம் கிடைக்கப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திருநெல்வேலி என்பது ஏதோ சென்னை தூரம் என நினைத்திருந்த காலம் அது.
மீண்டும் பிறை பார்க்கும் படலம்... ஷவ்வால் பிறையை சந்திக்க காத்திருக்கும் கண்கள். கண்டுவிட்டால் பெருநாள். இல்லையேல் சஹர்! இரண்டுக்கும் இடையில் சிலோனில் பெருநாள், கேரளாவில் பெருநாள் என குழப்பமாக உள்ள போது ஊரிலுள்ள மார்க்க அறிஞர்கள் உதாரணமாக மர்ஹூம் செய்யது ஆலிம்சா, சாவன்னா ஆலிம்சா, ஐதுரூஸ் ஆலிம்சா, சாயி லெப்பை ஆலிம்சா, ஊண்டி ஆலிம்சா, போன்ற பெரியோர்கள் மஹ்ழராவுக்கு வரவழைக்கப்பட்டு பெரிய பெரிய கிதாபுகளை முன்னால் அடுக்கி வைத்து ஹதீஸ்கள் அடிப்படையில் ஆதாரங்களைத் திரட்டி ஒருமித்த கருத்துடன் ஊருக்கெல்லாம் ஒரே பெருநாள் என அறிவிப்பார்கள். மணிக்கனக்கில் தெருவில் காத்துக் கிடக்கும் தாய்மார்கள் “என்னாச்சு? என்னாச்சு? முடிவு சொல்லிட்டாங்களா?” என ஆவலோடு கேட்பதும் எதிர்பார்ப்பதும் அந்தக் காலம்.
“நாளைக்குப் பெருநாள்
நம்மளுக்கு நல்ல நாள்
கட்டக் கோழி அறுத்து
கப்பக் கப்ப திங்கலாம்”
என மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சிறுவர்கள் குதுகலத்தோடு ஆடிப் பாட ஊர் முழுக்க அந்த நன்னாளின் கொண்டாட்டம் கோலாகலத்துடனும், புத்தாடை மணத்தோடு அத்தர் வாடை சேர்ந்து ஒரு புது மணத்தை ஊரெங்கும் பரப்பிடும். பள்ளிக்கு பள்ளி தக்பீர் முழக்கமும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும் அன்று மாலை கடற்கரையில் ஒன்று கூடியும் வட்ட வடிவிலான ரவுண்டானா சிமெண்ட் இருக்கையில் அமர்ந்து அருகிலிருக்கும் ஓர் சின்ன அறையில் வால்வு ரேடியோ மூலம் கூம்புக் குழாயில் ஒலிபரப்பாகும் ஆகாசவாணி செய்திகளைக் கேட்டும் மகிழ்ந்த காலம் ஓர் பொற்காலமே!
ஒரு வாரத்திற்கு முன் நாள் வாடகைக்குச் சொல்லி வைத்த சைக்கிளின் பின் சக்கரத்தில் பலூனைக் கட்டி ஓசை எழுப்பி, ஊர் சுற்றி வந்த அந்த உல்லாச நிமிடங்கள் இன்று ஏனோ ஓடி ஒளிந்து போயிற்று.
ஊருக்குள் ஒன்பது பெருநாள் அதுவும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு அமைப்புகள் என ஊர் ஒற்றுமை மறக்கப்பட்டு, தனித்தனி குழுக்களாகப் பிரிந்து போய்விட்டோம். ஒரே வீட்டில் சிலருக்கு நோன்பு சிலருக்கு பெருநாள். மனம் வலிக்கிறது.
சரியான வழிகாட்டிகள் இல்லாத குறையா?
அல்லது உலமாக்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டினாலா?
ஊர் முழுக்க ஒரே பெருநாள் இல்லாமல் இன்று கோழி வியாபாரிகள் கூட “முதலாளி அந்தாளுங்களுக்கு என்னைக்கு பெருநாள்?” எனக் கேட்டு நம்மை தலை குனியச் செய்யும் இக்கொடுமைக்கு எப்போதுதான் விடிவுகாலம் வருமோ...? இதயம் சுமக்கும் இனிய நினைவுகள் ஆயிரம் இருந்தபோதிலும் இது போன்ற இதயம் கனக்கும் ஒரு சில நினைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இனி வருங்காலங்களில், எல்லோர் கண்ணுக்கும் ஒரே பிறை தென்பட அந்த வல்லோனை வேண்டி விடை பெறுகின்றேன். வஸ்ஸலாம்.
-ஹிஜாஸ் மைந்தன்.
|