மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை மனிதக் கழிவுகளால் பாழ்பட்ட நாற்றம் பரவிய இடமாக இருந்தது அந்த பிரதேசம்.
ஆனால் இன்றோ நீரும் , நீர்த்தாமரையும் , மூலிகைச் செடிகளும் ,மரங்களும் , காற்றும் , பறவைகளும் , மண்டபமும் மட்டுமே வாசம் செய்யும் நந்த வனமாக மாறியுள்ளது. பாப நாசம் கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளமும் அதைச் சார்ந்த
இடமும்தான் கிட்டதட்ட இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நந்த வனம்.
மனித சமூகம் இயற்கைக்கு கூட்டாக செய்த கேட்டை ஒரு தனி மனிதன் முயன்று நீக்க முடியும் என்பதற்கு மைக்கேல் என்ற மனிதனின் வாழ்வு ஒரு சான்று. சித்த மருத்துவரான மைக்கேலின் முயற்சியின் விளைவாகத்தான் ஊருக்கு ஒதுக்குப்
புறமாக இருந்த பொதுக் கழிப்பு பிரதேசம் இன்று மூலிகைப்பொழில் என்ற அழகிய நந்தவனமாக எழுந்து நிற்கின்றது.
சங்க இலக்கியத்தில் காணப்படும் மூலிகை வகைகள் அனைத்தையும் பொதிகை மலைக்குள் அலைந்து திரிந்து பழங்குடியினர் உதவியுடன் கண்டு பிடித்து இந்த பொழிலுக்குள் நட்டு வளர்த்து ஓங்கச் செய்துள்ளார் மைக்கேல். ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மூலிகை வகைகள் இந்த பொழிலுக்குள் பாதுகாக்கப்பட்டிருப்பதாக தகவல் சொன்னார் மைக்கேல்.
கூடுதல் தகவல் என்னவென்றால் வழிபாட்டுத்தலங்களுக்கும் கல்விக்கூடங்களுக்கும் அரிய மூலிகைக் கன்றுகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
நானும் நண்பர்கள் அமீர் அப்பாஸ் , ஆதி வள்ளியயப்பன் , அதீஷா ஆகியோரும் மே மாதம் 24 ஆம் தேதி காலை 10:40 மணியளவில் பூவுலகின் நண்பர்கள் நடத்தும் “ விதையிலிருந்தே மரம் “ பயிற்சி பட்டறை அரங்கிற்கு போய்
சேர்ந்தோம்.
பெயர் பதிவு , கட்டணம் பெறல் சடங்குகள் முடிந்தவுடன் பேனா , குறிப்பேடு ,உரை சுருக்கம் , சூழலியல் தொடர்பான நூல் , ‘ பூவுலகு ‘ பழைய இதழ்கள் ஆகியவற்றை தந்தார்கள்.
ஒரு குடுவை நிறைய புதிய பதனீர் வைக்கப்பட்டிருந்தது .சுவையாக இருந்தது.
அரங்கின் அமைவிடம் பொதிகை மலை அடிவாரம் , தாமிரபரணி கரையோரம் என்பதால் அரங்கின் கதவுகள் வழியாக காற்று பாய்ந்துக்கொண்டே இருந்தது. மின் விசிறிக்கான தேவையே ஏற்படவில்லை.
காலை 11 மணியளவில் அமர்வுகள் தொடங்கின. தலை சிறந்த ஆய்வாளரும் மனோன்மணீயம் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் ஓய்வு பெற்ற தலைவருமான பேரா .தொ.பரம சிவம் அவர்கள் தன்னுடைய தலைமை உரையில் பயிற்சிப்பட்டறையின்
கருவை எளிய மொழியில் பட்டறிவுடன் விளக்கினார்.
ஒரு இடை வேளையில் நண்பர் அமீர் அப்பாஸ் என்னை பேரா.தொ.பரம சிவம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் காயல்பட்டினம் என்று சொன்னவுடன் உங்கள் ஊரின் மீஸான் கற்கள் ஏராளமான வரலாறுகளை சுமந்து நிற்கின்றதே ,
அதைப்பற்றி எழுதுங்களேன் என்றார். இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து உரை ஒன்றிற்கு ஏற்பாடு செய்தால் வந்து உரையாற்ற ஆயத்தமாக இருப்பதாகவும் சொன்னார்.
1920 களில் நமது ஊரில் வெளியான கமருஸ்ஸமான் என்ற அரபு மாதாந்திர தமிழ் பத்திரிக்கையின் படிகள் கிடைக்குமா ? எனக் கேட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை . வெட்கமாக இருந்தது .விசாரித்து சொல்கின்றேன் என
சமாளித்து விட்டேன்.
பின்னர் ALS மாமா அவர்களிடம் விசாரித்ததில் தன்னிடம் உள்ள கமருஸ்ஸமான் பத்திரிக்கையின் 1926 ஆண்டைய இதழின் ஒளிப்படியை என்னிடம் தந்தார். அதை இனிமேல்தான் பேராசிரியரிடம் சேர்க்க வேண்டும்.
பேரா. பரம சிவம் அவர்களையும் ALS மாமா அவர்களையும் நினைக்கும்போது பெருமையாக இருந்தது.
பயிற்சி பட்டறையின் மூன்று நாட்களும் தலை சிறந்த ஆய்வாளர்கள் , கள செயற்பாட்டாளர்கள் , துறை சார் வல்லுனர்களின் உரைகள் மிகுந்த ஆர்வமூட்டுபவையாகவும் தனிப்பட்ட , பொது வாழ்க்கைக்கு நிறைய பயனளிப்பதாகவும் இருந்தது.
உரைகள் , வெளி செல்லுதல் என பயிற்சி பட்டறை நிகழ்வுகள் இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தன.
முதல் நாள் மாலையில் அரங்கிற்கு அடுத்தாற் போல இருந்த மூலிகைப்பொழிலுக்கு சென்றோம். அது பற்றிய வர்ணனைதான் இந்த கட்டுரையின் தொடக்கத்தில் நீங்கள் வாசித்த வரிகள்.
மூலிகைப்பொழிலின் நடுவே நீர்த் தாமரைகள் நிரம்பிய அழகான தெப்பக்குளம் இருந்தது. அதன் நடுவே மண்டபம் கச்சிதமாக உட்கார்ந்திருந்தது. மாலை மங்கிச் சரியும்போது கிழக்கு வானில் நிலவு உயரத் தொடங்கியிருந்தது. தெப்பக்குளத்து நீரில்
நிலவின் பிம்பத்தை பார்க்கும்போது சிறிய மண் கலயத்தில் உறைந்திருக்கும் இள மஞ்சள் நிற ஆடை படிந்த கெட்டித்தயிர் போல இருந்தது.
இரவு எட்டரை மணி போல ஆர்.ஆர் சீனிவாசன் , அ.முத்து கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் குழுவுடன் பாப நாச ஸ்வாமி கோயிலின் படித்துறையை ஒட்டி ஓடுகின்ற தாமிரபரணி ஆற்றில் குளித்தோம்.
தண்ணீர் மிக குறைவாகத்தானே இருக்கின்றது என நீரில் காலை வைத்தால் இழுப்பு மிக வலுவாக இருந்தது. பாதுகாப்பிற்காக இடுப்பளவு ஆழமுள்ள உருளை போன்ற கல் குழி ஒன்றில் இறங்கி நின்றேன். தண்ணீர் தனது முழு பலத்துடன் என்னை
வெளியே தள்ள முயற்சித்தது . வழுக்கும் பாறை முனைகளை பிடித்துக் கொண்டு போராடித்தான் குளிக்க வேண்டியிருந்தது.
இரவு உணவிற்குப் பிறகு அரங்கில் தூங்கி விட்டோம். நள்ளிரவு மீண்டும் ஒரு குழு ஆற்றில் குளிக்கச் சென்றது. இரவு இரண்டரை மணியளவில்தான் திரும்ப வந்தார்கள்.
பட்டறையின் மூன்று நாட்களும் பூச்சி மருந்து , செயற்கை உரம் எதுவும் கலக்காத இயற்கை உணவு வகைகளே பரிமாறப்பட்டன. குறைவில்லாத சுவையும் கூட.
அடுத்த நாள் காலை 05 : 45 மணியளவில் அனைவரையும் கிளப்பி நடக்க வைத்தனர். பொதிகை மலை சிகரத்தின் மேல் நிலை கொண்ட மேகத்திற்குள் கதிரவன் தன் சிகப்பு நிறத்தை கரைத்து ஊற்றியிருந்தான் . அடர்ந்த சிவப்பு நிற பஞ்சு மிட்டாய்
போலிருந்தது மேகம்.
கிட்ட தட்ட அரை மணி நேர மலையேற்றத்திற்குப் பின் பாப நாசம் நீர் மின் நிலையத்தை தாண்டி அகத்தியர் அருவியை சென்றடைந்தோம்.
ஆனந்த குளியல் நடந்தது . குடத்திலிருந்து கவிழ்த்து விடப்பட்ட நீர் போல தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி வந்தது மலையருவி. செடி கொடிகளின் வேர்கள் , இலைகளின் நடுவே இருந்து தெறித்து பல திவலைகளாக பூப்போல பொழிந்து
கொண்டே இருந்தது.
அகத்தியர் அருவிக்கு மேலேதான் கல்யாணி தீர்த்தம் இருக்கின்றது. இந்த தடாகத்தில்தான் விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.அய்யர் தனது மகளைக் காப்பாற்ற முயலும்போது கால் தவறி விழுந்து உயிரிழந்தார். மலையோடும் நீரோடும் கலந்த அந்த
சோகம் தடாகத்து மீன் போல அங்கு எப்போதும் நீந்திக்கொண்டே இருக்கின்றது.
காலை 08 மணியளவில் அரங்கிற்கு ஊர்திகளில் வந்து சேர்ந்தோம். நல்ல குளியலும் நடையும் இருந்ததால் பசி எடுத்தது. காலை உணவாக சோள தோசையும் பனை வெல்ல சுக்கு காஃபியும் , பத நீரும் தந்தார்கள்.
10 மணியளவில் உரைகள் தொடங்கின .
வகுப்புக்கள் உரைகளாக மட்டும் நடத்தப்படவில்லை. திரைக் கருவி மூலம் விளக்கமும் இடம் பெற்றதால் சலிக்கவில்லை . புரிந்து கொள்வதும் எளிதாக இருந்தது. நடத்தியவர்களும் தாங்கள் போதிக்கும் கருத்துக்களோடு வாழும் போராளிகள் , களச்
செயல்பாட்டாளர்கள் என்பதால் வகுப்புகள் உயிரோட்டமாக இருந்தன.
பங்கேற்பாளர்களில் விவசாயி ,ஊடகவியலாளர் , திரைத் துறையினர் , மருத்துவர் , அரசு அலுவலர் , வணிகர் , மாணவர் , எழுத்தாளர் ,கவிஞர் , இலக்கிய வாதி என பல பிரிவினரும் இருந்தது வண்ண மயமாக இருந்தது. அவர்களில் சில பேர்
குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் பங்கேற்றனர்.
இரண்டாம் நாள் உரைகள் நிறைவடைந்ததும் உணவு இடை வேளை விடப்பட்டது
.................................................................................
பழங்குடியினரான காணிகளின் குடியிருப்பிற்கு செல்லும் பேருந்து மாலை 03:30 மணிக்கு வரும் என அறிவிப்பு வந்தது.
வனத்திற்குள் பேருந்து ஊர்ந்து சென்ற பகுதிகளில் எல்லாம் மரங்கள் இருந்தாலும் வெயிலின் உக்கிரத்தில் அவை காய்ந்து கிடந்தன. வனத்துறையினரின் சோதனைச்சாவடியை பேருந்து கடந்த கொஞ்ச நேரத்தில் ஒரு இடத்தில் இறங்கினோம்.
தார்ச்சாலையிலிருந்து வலது புறம் விலகி கொஞ்ச தொலைவு நடந்தால் நான்கு புறமும் மலைகள் சூழ்ந்த ஒரு சமவெளி வருகின்றது. அதன் நடுவே கண்காணிப்புக் கோபுரம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. காடுகளில் வேனில் காலத்தில் காட்டுத்தீ
உண்டாகும் . அதை கண்காணிப்பதற்காகத்தான் அந்த கோபுரம்.
அந்த கோபுரத்தின் அடியில் நின்று வானத்தையும் காட்டையும் அதற்குள் நிமிர்ந்து நிற்கும் மலைகளையும் பார்க்கும்போது நீலம் , கரும்பச்சை , கருப்பு நிறங்கள் கலந்த தனித் தனி பட்டைகள் எந்த மோதலுமில்லாமல் இணங்கி நின்றன. இயற்கை
கோட்டையின் மாபெரும் இருப்பு பிரமிப்பூட்டியது.
எங்கள் காட்டு வழிப் பயணம் மீண்டும் மாலை 05 : 00 மணிக்கு தொடங்கியது. . காணி பழங்குடியான பூதத்தான் தான் எங்கள் வழிகாட்டி .
அடர்ந்த மரம் செடி கொடிகளை ஊடறுத்து உரசியபடி செல்லும்போது கானகத்தின் மொழி கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத் தொடங்கியது.
நாங்கள் கடந்து சென்ற கானகமானது வன விலங்குகள் உலாவும் இடமாகும். எனினும் எங்களது கண்களில் அவை ஒன்றுமே தட்டுப்படவில்லை.
எங்களது நடைத்தொடரில் கிட்டதட்ட 70 பேர் வரை இருந்தனர் அவர்களில் பெரும்பாலோர் உரக்க பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் ஓசைகளை எழுப்பிக்கொண்டும் பளீர் வண்ண உடைகளை உடுத்திக்கொண்டும் சென்றதுதான் கானுயிர்கள் (காட்டு
உயிரிகள்) தென்படாததிற்கு காரணம்.
கானுயிர்கள் எப்போதும் காட்டில் நிலவும் ஆழ்ந்த மௌனத்தில் இரண்டற கலந்து வாழ்பவை .வெளியாரின் வருகையையும் காலடியையும் ஓசையையும் அரவத்தையும் தங்களின் பிரதேசத்தில் நடக்கும் வெடிகுண்டு வீச்சைப்போல அவை உணரும்.
நாட்டாரியலில் ஆழ்ந்த கவனிப்பு பெற்ற சிங்கம்பட்டி ஜமீன் புகழ் சொரி முத்து அய்யனார் கோயிலை கடந்து மீண்டும் வனத்திற்குள் நுழையும்போது நன்கு இருட்டி விட்டது.
இரவு 07 மணியளவில் தாமிரபரணி ஆறு நோக்கி சென்றோம். வெளிச்ச துகள்கள் மட்டும் மிச்சமிருந்தது. அந்த இருட்டில் ஆள் மிக மங்கலாக தெரியும். முகம் அறிய இயலாது.
ஆற்றில் இறங்கும் முன் ஆழம் என்று அறிவிப்பு வேறு வந்தது.
குளிக்கும் ஆசை , இருள் , ஆழம் , நீச்சல் தெரியாத அச்சம் , வழுக்குப்பாறை எல்லாம் சேர்ந்து சில அடிகளுக்கு மேல் ஆற்று நீரில் நகர முடியவில்லை. ஆசை தீர குளிக்கவும் முடியவில்லை. நடையினால் ஏற்பட்ட வியர்வை தீர முங்கி குளித்து
விட்டு கரையேற வேண்டி வந்தது.. அந்த இருட்டிலும் ஆழமான பகுதிக்குள் யாரும் போய் விடாதவாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
மீண்டும் கும்மிருட்டில் காட்டுப்பயணம் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் காட்டு மரங்களின் இலை கிளைகளுக்கிடையே முழு நிலவு கள்ளத்தனமாக எட்டிப் பார்த்தது. திரைக்கு பின்னாலிருந்து அழகிய சிறுமி எட்டிப்பார்ப்பது போல இருந்தது. மையிருளும்
பொன் மஞ்சள் நிலாவும் கலந்து புதிய ஒலி ஒளி காட்சியை காட்டுக்குள் பரவ விட்டிருந்தன.
இரவு 08 மணியைத்தாண்டி சில குடிசைகளும் விளக்கும் தெரிந்தது. காணி குடியிருப்பிற்கு வந்து சேர்ந்தாகி விட்டது. மின்சாரம் இல்லை. செல்லிட பேசிகளுக்கான வலைப்பின்னல் தொடர்பும் அறவே இல்லை. அங்கு எரிந்த ஓரிரு விளக்குகளும்
கதிரொளி மூலம் இயங்குபவை.
ஒரே சறுக்காக சறுக்கி 50-- 60 வருடங்கள் பின்னோக்கி வந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. நவீனங்களின் கொடுங்கரங்களில் சிக்காத காணிகளின் வாழ்க்கை முறையை அருகில் வைத்து ஒப்பிட்டு பார்க்கும்போது நம் வாழ்க்கை மிக சிறுத்து தெரிந்தது.
காணி சமூகத்தின் மூத்தவர்களுடன் அவர்களின் வாழ்க்கை முறைப் பற்றி விரிவாக உரையாடி அறிந்து கொள்ள முடிந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள மலையாளமும் தமிழும் கலந்த இழுவை நடையில்தான் அவர்கள்
பேசுகின்றனர்.
காணிகளை இடம் பெயர்த்து சம வெளிக்குள் வாழ வைக்க அரசு முயற்சி எடுத்ததாம். அப்போது காணிப்பழங்குடியினர் அரசைப் பார்த்து பின் வருமாறு சொல்லியிருக்கிறார்கள் .
“ நாட்டுக்குள் வந்தால் அங்குள்ள வாழ்க்கை முறையில் எங்களால் இணைய முடியாது. அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் நாங்களும் எங்கள் பெண்களும் சிறையில்தான் அடைபட வேண்டி வரும். காட்டின் ஒவ்வொரு அங்குலமும் எங்கள்
உயிரோடும் உணர்வோடும் கலந்தது. எனவே எங்களை அங்கேயே விட்டு விடுங்கள் . அங்குதான் எங்களால் இயல்பாக வாழவும் முடியும் “.
தினை மாவில் செய்யப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை , பலாப்பழம் , அவித்த மர வள்ளிக்கிழங்கு ஆகியன இரவு உணவாக வழங்கப்பட்டது.
காணிப்பழங்குடியினரின் கொக்கரி இசையை இருவர் இசைத்தனர். உள்ளங்கையளவு உள்ள சிறிய இரும்புக்குழாயின் நடுவே துளையிடப்பட்டு இணைக்கப்பட்ட சங்கிலியுடன் கூடிய பொடி கம்பிதான் இசைக்கருவி.
அந்த பொடி கம்பியால் இரும்புக்குழாயில் உரசியபடியே கிராமப்புற கோயில்களில் இரவு முழுக்க பாடுவது போல பாடினார்கள். இரு மொழி நடையுடன் உன்மத்த நிலையில் பிறக்கும் சில புரியாத சொற்களும் கலந்ததாக இருந்தது கொக்கரி இசை.
சிறிது நேரத்தில் காட்டில் கிடைத்த இடத்தில் கோணித்துணி , போர்வைகளை தரையில் விரித்து அப்படியே தூங்கிப்போனோம்.
நள்ளிரவில் விழிப்பு வந்தது. எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் லயித்திருந்தார்கள்.
மல்லாந்த நிலையில் பார்க்கும்போது கரு நீல நிற ஆகாயத்தினை மறைத்து நின்றன காட்டின் உயர்ந்த மரங்கள். பசுமையான இலைகளைக்கொண்ட மர உச்சிகள் வட்டமும் சதுரமுமாக சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய வீட்டு முகடுகள் போன்று
இரவின் இருளில் காட்சியளித்தன.
இருளின் தனிமை , காட்டின் முணு முணுப்பு , மலையின் மரங்களின் ஓசை மிக்க அமைதி – இவை அனைத்தும் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை சூழ்ந்து கொண்டு மீண்டும் தூங்க வைத்தன.
இரவின் அடர்ந்த திரையை கிழித்து திறக்கும் கதிரவனின் முதல் கிரணத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னரேயே சேவல் கூவத் தொடங்கி விட்டது. அடர்ந்த கானகத்திலும் மலையிலும் சேவல் பாடகனின் கூவல் இசை செல்லமாக முட்டி மோதியது.
கதிரவனின் காலை ஒளி நன்கு பரவிய பிறகுதான் காணி குடியிருப்பு பாபனாசம் மேலணையின் அருகில் அமைந்திருந்தது விளங்கியது. பச்சை பசேலென்று விரிந்த காட்சிகளுக்கு சற்றும் பொருந்தாமல் அணையின் மதகு விசைகளும் எஃகு
சட்டங்களும் கர்வத்துடன் நிமிர்ந்து நின்றன.
காரைச்சுவர்கள் , ஓலைக் கூரை , குழந்தைகள் விளையாடுவதற்கும் தோட்டத்திற்குமான வெளி , மூங்கில் பட்டிகளால் அமைக்கப்பட்ட வேலிப்படல்கள் என கச்சிதமாகவும் வரிசையாகவும் கைத்திறத்துடனும் காணிகளின் வீடுகள்
அமைக்கப்பட்டிருந்தன. எந்த வீட்டிலும் மின்சாரமில்லை. ஓரிரண்டு வீடுகளில் எரிந்த கதிரொளி மின் விளக்குகளைத் தவிர.
முந்தைய நாள் இரவின் நிலவொளியில் மர்ம புன்னகை பூத்துக்கொண்டிருந்த பாறைகள் நிறைந்த நதியின் மடியானது காலை வேளையின் இளம் ஒளியில் நட்புடன் சிரித்துக்கொண்டிருந்தன.
அணையிலிருந்து ஒழுகி ஓடும் தாமிரபரணி நதியின் ஆழங்குறைந்த பகுதியில் நாங்கள் குளித்தோம். மிதமான சில்லிப்பும் பாறைகளின் மணமும் சிவந்த மஞ்சள் நிறமும் கலந்து ஆற்று நீர் ஓடியது.
ஆற்றின் குறுக்கே மரத்தால் ஆன நடைப்பாலம் ஒன்று இருந்தது. அதன் உதவியால் அக்கரைக்கு சென்று பேருந்து வரும் தார்ச் சாலையை அடைய முடியும். ஆற்றில் நீர் பெருக்கெடுக்கும்போது பெரிய மரங்களின் கிளைகளும் நீரின் வேகமும்
நடைப்பாலத்தை பிய்த்து எறிந்து விடுமாம். பேருந்து வரும் தார்ச் சாலையுடன் மலையின் கானகத்தின் மக்களாகிய காணிகளுக்கு பெரிய அளவில் ஒட்டும் உறவும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்கின்றது ஆற்றின் இந்த செய்கை.
ஆற்றின் அப்புறம் பெரிய கல் வீடும் அந்த வீட்டின் முன்பு ஊர்தி ஒன்றும் நின்றது. அது யார் வீடு என காணிச் சிறுவர்களிடம் கேட்ட போது “ நாட்டுக்காரங்க வீடு “ என சொன்னார்கள். ஆறு செய்ததை
உறுதிப்படுத்துவது போலிருந்தது சிறுவர்களின் விடை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மூன்றாம் நாள் மதியத்துடன் பயிற்சி பட்டறை நிறைவிற்கு வந்தது.
மரம் நடுவோம் மழை பெறுவோம் என குடிமக்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டே மறு புறம் காடுகள் , மலைகள் , ஓடைகள் ,நதிகள் , ஏரிகள் , குளங்கள் கண்மாய்கள் , அருவிகள் , இயற்கை
உயிரினங்களை தேச வளர்ச்சி என்ற பெயரில் அரசு அழித்து வருகின்றது.
அரசின் கண்மூடித்தனமான இந்த போக்கிற்கு குடி மக்கள் கொடுத்த விலைதான் உத்தரகாண்ட் பேரிடர்.
தேச பாதுகாப்பு என்ற பெயரில் அணு உலைகளும் , தேச வளர்ச்சி என்ற பெயரில் கொள்ளை லாப கார்ப்பரேட் நிறுவனங்களும் நம் அருமை தாய் மண்ணையும், கடலையும் , விண்ணையும் சீரழித்து வரும்
நிலையில் நாம் அதன் பலிகடாக்கள் ஆகத்தான் வேண்டுமா ? என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சிதான் இந்த விதையிலிருந்தே மரம் பயிற்சி பட்டறை.
நிகழ்ச்சிகள் நடந்த மூன்று நாட்களும் விதம் விதமான சுவையுடன் பரிமாறப்பட்ட இயற்கை உணவுகளில் மண்டை வெல்ல தே(நீர்) , சாமை & குதிரை வாலி பிஸ்கட் , வரகரிசி பொங்கல் , பஞ்சாமிர்தம் , அரி கிராவி அரிசி இட்லி போன்றவற்றின்
சுவை நாவிலும் மனதிலும் நிலைத்து விட்டது.
அரங்கத்தின் முகப்பில் சூழலியல் , இயற்கை உணவு , நாட்டாரியல் தொடர்பான வெளியில் கிடைக்காத அருமையான நூல்களை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். அடக்கமான விலையுடன் வண்ணப்படங்களும் நிறைந்ததாக இருந்தது நூற்கள் .
வந்தவர்கள் மோகத்துடன் வாங்கிச் சென்றார்கள்.
பட்டறைக்கான மொத்த வரவு செலவு எவ்வளவு ? என ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஆர்.ஆர்.சீனிவாசனிடம் கேட்டேன். வெறும் பத்தாயிரம் மட்டும்தான் கடன் என மனம் நிறைந்து சிரித்தபடி சொன்னார்.
கானக பயணத்தில் இரவு தங்கலுக்கு எந்த தனி ஏற்பாடும் செய்யாமல் அப்படியே தங்கிக் கொள்வது என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டிருந்தனர் ., “ நாம் செல்வது உல்லாச பயணம் இல்லை. வாழ்வை அதன் இயல்பான ஓட்டத்தில் புரிந்து
கொள்வதுதான் நம் நோக்கம் “ என இந்த திட்டமிடலுக்கான பின்னணியைப் பற்றி ஏற்பாட்டாளர்கள் விளக்கினர்.
பயிர்களின் கருப்பை விதையாகும். அந்த விதையின் பெயர் சூட்டப்பட்ட இந்த பயிற்சிப் பட்டறைக்கு சமூகத்தின் கருப்பைகளாகிய பெண்கள் கலந்து கொண்டது இந்த நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாகும் . அந்த பெண்களில் பலர் சூழலியல் , விளிம்பு நிலை
மக்களுக்கான அரசியல் என காத்திரமாக போர்க்குணத்துடன் தங்களது பங்களிப்பை செய்து வருபவர்கள்.
கானக பயணத்தில் வெட்ட வெளியில் நள்ளிரவிலிருந்து காலை வரை எந்த வித தனி சௌகரியங்களுமின்றி குழந்தைகள் உள்ளிட்ட பெண் பங்கேற்பாளர்கள் தங்கினர். அவர்கள் இதை ஒரு அசௌகரியமாகவே எடுத்துக் கொள்ளவில்லை .இந்த பெண்
பங்கேற்பாளர்களில் பலர் நவீன நாகரீக வசதிகளுடன் நகரங்களில் வாழ்ந்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டறை ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பாளர்களும் இணையும் இந்த மனப்புள்ளிகள்தான் பூவுலகின் நண்பர்களின் முயற்சிக்கு கிடைத்த முழு வெற்றிக்கு சான்று. |