அன்பான சகோதர, சகோதரிகளே...
அண்மைக் காலமாக நமதூரில் விபத்துக்களின் எண்ணிக்கையும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்து வருவதை, செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
மதியை விட்டுவிட்டு, விதி மேல் பழி போடும் இந்த விபத்துகள் குறித்த செய்திகளால் மனம் நொந்து போன நான் அதை ஒரு கவிதையாக இங்கே வடித்துள்ளேன்...
விபத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு தாயின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இவ்வரிகளால், 10 இளைஞர்களேனும் படிப்பினை பெற்று முறைப்படி நடப்பார்களாயின், 10 உயிர்களைக் காப்பாற்றிய மகிழ்ச்சி எனக்கு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இக்கவிதையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...
பெற்ற வயிறு பற்றி எரிகிறது...
காரணம் நெருப்பு என்றால்
கனப் பொழுதில் அணைத்திடுவேன்
இது வேறன்றோ - நீ என்
உயிரின் வேரன்றோ!
உதிரத்தை உணவாக்கி
உயிர்க்கூட்டில் உரு செய்து
வலிதாங்கிப் பெற்றேனே
வாட்டிடும் என் வேதனை பார்!
அசைவற்ற வெறுங்கூடாய்
ஆசைமகன் பிணமாகத்
திரும்புகையில் திரியின்றி
எரியுதடா தாய் மனது...
எங்கோயோ நீர்க் கரையில்
ஒதுங்கிவிட்டாய் எனக்கேட்ட
உம்மாவின் இதயத்தில்
இடி ஒன்று இறங்குவதை
எப்படி நீ அறிந்திடுவாய்
இல்லாமல் போனாயே!
விதியோடு விளையாடிவிட்டு
விதி விளையாடியது என்ற
வீண் பழி எதற்காக?
ஒட்டகத்தைக் கட்டிவிட்டு
அல்லாஹ்வை துஆ செய்ய
அண்ணல் நபி எடுத்துரைத்த
அழகு மொழி ஏன் மறந்தாய்?
இன்பமிகு பயணத்தை
அந்திமப் பயணமாக்கும்
ஆபத்தின் சூழ்ச்சிகளை
அறிந்திருந்தும் நிராகரித்தாய்!
இளங்கன்றே பயமறியாய்
இழப்பெனக்கு உனக்கென்ன?
சொன்னேன் உன் தந்தையிடம்
சண்டாளன் கேட்டானா?
பன்னிரண்டு வயதுனக்கு
பைக் வாங்கித் தந்தானே!
சாலைவிதி மதிக்காமல்
சாக்காட்டில் நீ விழுந்து
சந்தூக்கில் போகையிலே
நொந்தழுது என்ன பயன்?
கட்டி வைத்த ஆசையெல்லாம்
கனவெனவே கலைந்ததடா!
கொட்டி வைத்த செல்வமெல்லாம்
குப்பையிலே வீசுதற்கா?
எனதருமை இளம்பிறையே ...
இனம் காக்கும் தலைமுறையே..
மனம் போன போக்கினிலே
மதி கெட்டு போகாதே!
உனைநம்பி உன்பெற்றோர்
வீட்டினிலே காத்திருக்க
உன்மத்தம் தலைக்கேறி
ஊர் சுற்றப் போகாதே!
உத்திரவு இடவில்லை...
வேண்டுகோள் மாத்திரமே!
கன்றிழந்த பசு நானே
கண்ணே! நீயுமென் சிசுதானே!
வாழிய நீ நூறாண்டு
வழித்துணையாய் இறை உண்டு! |