கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது.
“யார்...”
“சார்... தந்தி...”
உடனே என்னுள் சிறிதாக கலவர ரேகை. கதவைத் திறந்து வாசலில் நின்றுகொண்டிருந்த தந்தி சேவகனிடம் கையெழுத்து போட்டு, தந்தியை
வாங்கினேன். அது ஒன்றும ்துயர சம்பவத்தைச் சுமந்துகொண்டு வந்த தந்தியல்ல. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததும் என்னையும் அறியாமலேயே
என்னுள் ஒரு துயர மேகம் படிந்தது.
“டிக்கெட் ரெடி! உடனே புறப்பட்டு வரவும்” -இதுதான் அதிலிருந்த வாசகம்.
என்னை சஊதி அரபிய்யாவிற்கு அனுப்பும் முகமாக, கடந்த ஒரு மாத காலமாக நான் சென்னை போய் வந்து இருந்ததன் இறுதிப்பலன்தான் அது.
எனது பயண ஏஜெண்ட்தான் அந்த தந்தியை எனக்கு அனுப்பியிருந்தார். நல்ல விஷயம்தான். எனினும் குடும்பத்தைப் பிரிந்து செல்லும் சோகம்
என்னை உடனடியாகக் கவ்வியது. அடுத்த நாள் புறப்பட்டுச் சென்ற நான், மறுபடியும் ஒரு முழு நான்கு வருடங்கள் கழிந்த பிறகுதான் எனது தாய்
மண்ணை மிதிக்க முடிந்தது.
“தந்தி...” என்றாலே எல்லோருக்கும் ஓர் அலர்ஜிதான். ஓரளவு படித்த நமக்கே இந்த நிலை எனில், கிராமப்புற மக்களைப் பற்றிக் கேட்கவே
வேண்டாம். அங்கு தந்தி சேவகனை எமனுடைய தூதுவனாகவே கருதும் வழக்கம் உண்டு. கிட்டத்தட்ட உண்மை நிலையும் அதுதான். திருமணம்,
குழந்தைப் பேறு போன்ற சுப காரியங்கள் நமது வாழ்வில் முன்பே நிச்சயிக்கப்பட்டவை. அவைகள் நிகழப்போகும் நாட்களை நாம் முன்பே உறுதிசெய்து
தீர்மானித்துக் கொள்கிறோம். எனவே, அதில் எதிர்பார்க்கவோ, அதிர்ச்சியடையவோ எதுவுமில்லை. விபத்தும், மரணமும் அவ்வாறானதல்ல. அவை
எதிர்பாராதவை. யாருக்கு, எப்போது, எங்கே நிகழும் என்று இறைவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
பெரும்பாலும் அவசர நிலை கருதி, இதுபோன் “துயர” செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவே தந்தி அன்று ஒரு சேவைப் பிரிவாக இருந்தது. இதில்
விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் தந்தி வருவதென்றாலே அது நல்லதற்கல்ல... என்ற ஓர் எண்ணம் எப்படியோ நமது மக்களின் ஆழ்மனதில்
பதிந்துபோன ஒன்றாகிவிட்டது. அது உண்மையும் கூட.
ஆனால், தோழர்களே...! அந்தக் “கஷ்டம்” இனி யாருக்கும் இல்லை. இனி யாரிடமிருந்தும், எவருக்கும் தந்தி வராது.
ஆம், வரும் ஜூலை மாதம் 15ஆம் தேதியிலிருந்து தந்தி சேவைக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்தப்போவதாக பி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கிறது.
கடந்த 160 ஆண்டுகளாக, பயன்பாட்டில் இருந்த ஒன்று, அடுத்த மாதம் முதல் இல்லை. ஸ்மார்ட் போன், செல்போன், இணையதள உரையாடல்கள்,
செய்திப் பரிமாற்றங்கள் நாட்டில் பரவிய பிறகு, “தந்தி” கௌண்டர்கள் காற்று வாங்க ஆரம்பித்தன. ஒரு நிமிடத்தில் பத்து குறுஞ்செய்திகளை (SMS)
அனுப்பும் வழி வந்த பின்பு இனியும் யார் சார் தந்தி கொடுக்கப் போகிறார்கள்…? எனவேதான் இந்த முடிவாம்.
“பழையன கழிதலும்
புதியன புகுதலும் – வழுவல
கால வகையினானே”
என்பது பவணந்தி முனிவரின் நன்னூல் வாக்கு. எனவே, கால ஓட்டத்தில் இதெல்லாம் சகஜமே!
ஆதிகாலம் தொட்டே மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம் தகவல் தொடர்புகளை ஏற்படுத்திய வண்ணம்தான் இருந்திருக்கிறார்கள். புறாவின்
காலில் செய்திகளைக் கட்டி அனுப்புதல், மிகப்பெரும் கற்பாறைகளில் ஓவியங்கள் - எழுத்துக்களைச் செதுக்குதல் என இன்னோரன்ன வழிமுறைகள்
ஆதி மனிதனால் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. பிறகு படிப்படியே ஏடு, ஓலைச்சுவடி, பேப்பர், அச்சு உபகரணங்கள், ஆங்கிலேயர்கள் நிலைபெற்ற
பிறகு ரயில் வழி கடிதப் போக்குவரத்து, பிறகு “தந்தி” என இறங்கு வரிசையில் இவை ஒவ்வொன்றாக - கால வேகத்தில் - புழக்கத்திற்கு
வந்திருக்கிறது.
நமது கட்டபொம்மன் குறித்து ஒரு வரலாறு உண்டு. பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள கட்டபொம்மன் தீவிர முருக பக்தர். திருச்செந்தூர் முருகனுக்கு
உச்சிக்கால, அந்திக்கால பூஜைகள் முடிந்த பின்பே அவர் சாப்பிடத் துவங்குவாராம். இதற்காக, திருச்செந்தூரிலிருந்து பாஞ்சை வரை இடையிடையே
‘நகரா’ (முரசு) மண்டபம் அமைத்து, அதில் நகரா (நமதூர் பாஷையில் ‘டங்கா’) ஒலியை - பூஜை முடிந்த பின்பு திருச்செந்தூரிலிருந்து ஒருவன்
முழக்க, அதைக் கேட்டு, தொலைவில் உள்ள இன்னொருவன் முழக்க, இப்படியே பாஞ்சாலங்குறிச்சி வரை அது போய்ச் சேருமாம். அதன் பிறகே
கட்டபொம்மன் உணவில் கை வைப்பாராம். இது அந்தக்கால தகவல் தொடர்பு முறை. நமதூரில் பாங்கு நேரத்தை அறியத்தான் அக்காலங்களில்
‘டங்கா’ ஒலிகள் முழக்கப்பட்டன. வேறு சில ஊர்களில் வெடி வெடித்து நேரம் அறிவித்ததாகவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
தந்தி அனுப்பும் முறையில், கிளாட் ஷாப்பே, சாமுவேல் சோமரிங், ஸ்டீன் ஹெல், கூக் வீட்ஸ்டோன் - இவர்களின் பலவிதமான
கண்டுபிடிப்புகளுக்குப் பிறகு, இன்றைய நவீன தந்தி கருவியை கண்டுபிடித்தவர் சாமவேல் பின்லே பிரீஸ். மோர்ஸ் (சுருக்கமாக மோர்ஸ்)
என்பவர்தான். இத்தனைக்கும் மோர்ஸ் ஒரு விஞ்ஞானி அல்லர். அடிப்படையில் அவர் ஓவியர், கலைஞர். மோர்ஸ் (1791 - 1872) கண்டுபிடித்த
தந்திச் சேவை 04.09.1837 அன்று முதலில் சோதித்துப் பார்க்கப்பட்டது.
1844 மே 24ஆம் தேதி, “கடவுள் செய்த கைவினை யாது?” என்ற வாசகம் முதல் தந்தியாக வெற்றிகரமாக அனுப்பப்பட்டது - அமெரிக்காவில்!
இந்தியாவில் முதல் தந்திச் செய்தி 1851ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கும் (அன்றைய கல்கத்தா) அதன் அருகேயுள்ள டைமண் துறைமுகத்திற்கும்
அனுப்பப்பட்டது. உண்மையில், Telegraph என்ற சொல்லுக்கு, “தேவையற்ற சொற்கள் விலக்கப்பட்ட செய்தி” என்பதே பொருள்.
‘Tele’ என்ற சொல்லுக்கு ‘நெடுந்தொலைவு’ என்பது பொருள். இதனடிப்படையில் பிறந்ததுதான் டெலிபோன், டெலிவிஷன், டெலிபிரிண்ட்
எல்லாம். நெடுந்தொலைவிலிருந்து அனுப்பப்படும் மின்னல்வேக சாதனம்தான் ‘தந்தி’ (Telegraph). தந்தி என்பது அன்று கவர்ச்சிமிக்க ஒரு
சாதனம். அவ்வாறான, மின்னல் வேகத்தில் தந்தி போல தனது வாசகர்களுக்கு செய்தியைத் தருவதால்தான் - ஆதித்தனார் தான் தொடங்கிய தமிழ்
நாளிதழுக்கு “தினத்தந்தி” என பெயரிட்டார்.
“தினத்தந்தி” மட்டுமல்ல! ஆங்கில நாளேடுகளும் இந்தக் கவர்ச்சிக்குத் தப்பவில்லை. “The Daily Telegraph”, “The Telegraph”, “The Mail”
என்று அவற்றுக்குப் பெயர் சூட்டப்பட்டன. இன்றும் கூட “Telegraph” என்ற பின்னொட்டுடன் நிறைய நாளிதழ்கள் உலகம் முழுக்க வெளிவருகிறது.
மோர்ஸ் தந்தி என்பது மின் காந்தப் புலத்தால் இயங்கும் ஒரு சிறிய கருவி. ஒலிக்குறியீடுகளே இதன் ஆதார நிலை. நமதூர் போஸ்ட் ஆபீசிலும் இது
இருந்தது. (இளைய தலைமுறையினர் இதைப் பார்த்திருக்க முடியாது.) டெலக்ஸ் வசதி வந்த பிறகு, இதன் பயன்பாடு வெகுவாகக் குறைந்து
போனது. நமதூரில், கிட்டத்தட்ட ஒரு இருபதாண்டுகளுக்கு முன்பே அந்த மோர்ஸ் கருவியை எடுத்துவிட்டிருந்தனர் என எண்ணுகிறேன். ஒருவேளை
எனது கணிப்பு தவறாகவும் இருக்கலாம். ஆனால், எண்பதுகளின் இறுதி காலகட்டம் வரை அது இருந்தது என்பதே எனது ஞாபகம். சென்னை
மண்ணடி பெரிய போஸ்ட் ஆபீசிலும் அது நிறைய இருந்தது.
மிஞ்சிப் போனால் சுமார் 1 கிலோ எடை வரைதான் அந்தச் சிறிய கருவி இருக்கும். அதிலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிறிய கைப்பிடி போன்ற
பொருளை தந்தி ஆபீஸர் விரல்களால், “டக்டக் டகடக” என்ற ஒலி வரும்படி எந்நேரமும் தட்டிக் கொண்டிருப்பார். இடது கை விரல்களால்
தட்டிக்கொண்டே வலது கையால் செய்தியை தாளில் எழுதிய வண்ணம் இருப்பார். அல்லது தன்னிடமிருக்கும் செய்தியை அதுபோல “டக்டக் டகடக”
என்று ஒலிக்குறியீடுகளால் வேறிடங்களுகு்கு அனுப்பியவண்ணம் இருப்பார். ஆக மொத்தத்தில், அவரது விரல்கள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே
இருக்கும். அவர் தட்டும் ஒவ்வொரு “டகடக” ஒலிக்கும் ஒவ்வொரு விதமான எழுத்தும் (A,B,C,D,E,F - என) பொருள் இருக்கும். இந்த
ஒலிக்குறியீடுகளைக் கொண்டே தந்தி செய்தி, தந்தி பெறுபவரின் முகவரி எல்லாம் எழுதி முடிப்பார். பிறகு அது தந்தி சேவகன் மூலம் சம்பந்தப்பட்ட
நபருக்குப் போய்ச் சேரும்.
இந்த “டகடக” முறையை நமது எழுத்தாள பெருமக்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் எழுதும் கதைகளில், கதாநாயகன்
பதற்றத்தோடும், நிதானமிழந்தும் இருக்கிறான் என்பதைச் சுட்ட,
“அவனது விரல்கள் நடுங்கின... தந்தியடித்தன...” என எழுதினார்கள்.
“தந்தியைக் கண்டது போல அவள் முகம் வாடிப்போனது...” என்றும் சிலர் எழுதினார்கள்.
இதெல்லாம் தந்தி குறித்த அக்கால மக்களின் பொதுப்புத்தியில் பதிந்திருந்த மனோபாவத்தையே காட்டுகிறது.
நமதூர் மக்களின் தந்தி குறித்த நினைவுகளோ சுவையானவை. சில துன்பங்களும் உண்டு.
நமதூரின் சில ‘ஜனாப்’கள் ஊரென்று அதிகம் இருக்க மாட்டார்கள். எப்படியாவது பிழைப்பு தேடி ஸபர் வழி (பயணம்) சென்று விடுவார்கள்.
ஆனால், ஜனாபிடமிருந்து கடிதமும் வராது; பணமும் வராது. இங்கே பீவி பிள்ளைகளை வைத்துக்கொண்டு - கஷ்டத்திலும், கவலையிலும்
காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பாள். கடிதம் பல பறந்தாலும் ஜனாபுக்கு உரைக்காது. “இதை தந்தி போல பாவித்து எழுதுகிறேன்... உடனே பணம்
அனுப்பி வையுங்கள்” என்று பாவமாக எழுதுவாள். ஊஹூம்... அப்புாதும் நமது ஜனாப் கல்லுழிமங்கன்தான். அடுத்தபடியாக ‘தந்தி’ பறக்கும்.
“Send money immediately”. அதன்பிறகுதான் ஜனாப் - போனால் போகிறது என்று ஒரு நூறு ரூபாய் (அந்தக் காலத்தில்) அனுப்புவார். அதன்பிறகு,
ஒரு மூன்று மாதம் கழித்து இன்னொரு தந்தி இதுபோல போனால்தான் ஜனாப் இன்னொரு நூறு ரூபாய் அனுப்புவார். அவ்வாறான நிறைய ஜனாப்கள்
நமதூரில் அக்காலத்தில் இருந்தார்கள்.
“Start immediately” என்பதும்,
”today start, tomorrow arrival” என்பதும் பிரபலமான தந்தி வாசகங்கள்.
சென்னையிலிருந்து புறப்பட்டாலும் தந்தி கொடுப்பார்குள். சென்னைக்கு அந்தப் பக்கம் இருப்பவர்கள் சென்னை வந்த பிறகு, ஊர் வரும் நடப்பை தந்தி
மூலம் தெரியப்படுத்துவார்கள். அப்போதுதான் வீட்டில் எல்லாம் ஆயத்தமாக இருக்குமாம்.
இப்போது இதுபோன்று யாராவது தந்தி கொடுததுவிட்டு ஊருக்கு வந்தால் அவனை மூளை வளர்ச்சியில் ‘பிந்தி’ப் போனவன் என்பார்கள்,
இல்லையா...?
ஸபரிலிருந்து (பயணத்திலிருந்து) வரும் ஆட்களை அழைத்து வர, குதிரை வண்டியோடு அவரது மக்களோ அல்லது மாமா மச்சானோ அல்லது
அண்ணன் தம்பியோ - யாராவது ரயிலடிக்குச் செல்வார்கள். பெட்டி, பிஜானா, பழக்கூடை, அட்டைப்பெட்டி சகிதம் ஜனாப் ரயிலடியில் வந்து
இறங்குவார். ஏதோ ஆம்ஸ்ட்ராங் அப்போலோ ராக்கெட்டில் வந்திறங்குவது போலிருக்கும். புன்னகையும், சுக விசாரிப்பும் பரஸ்பரம்
பரிமாறிக்கொள்ளப்படும். சென்னை எக்மோரில் இருந்து அஜீத் மாதிரி ரயில் ஏறினாலும், ஊர் வந்து இறங்கும்போது நம்ம ஜனாப் அவர்கள் கஞ்சா
கறுப்பாக மாறிப் போயிருப்பார். எல்லாம் நெல்லை - திருச்செந்தூர் கரி எஞ்ஜின் செய்கிற மாய யதார்த்தம்.
வயது ஐம்பதாக இருந்தாலும், பேரன் - பேத்தி கண்டிருந்தாலும், ஜனாப் அந்த அழுக்கு மூட்டையோடு வீடு செல்ல விரும்ப மாட்டார். ஸ்டேஷன்
பள்ளியில் ரயில் அழுக்கு போக குளித்து, சீவி சிங்காரித்துவிட்டுதான் ஜனாப் மறுபடியும் குதிரை வண்டியில் ஏறுவார்.
குளிக்கும்போதே சோப்பு போட்டவாறு ஜனாப் கேட்பார்…
“என் தந்தி கிடைச்சுதா...?”
(அடப்பாவி... தந்தி கிடைக்கப் போய்தானே ஆட்கள் வந்திருக்கிறார்கள்...? சரி, கிடைக்காவிட்டால்தான் என்ன...? ஜனாப் திரும்பிப்
போய்விடுவாரோ...??)
அது அன்றைய சம்பிரதாயக் கேள்விகளுள் ஒன்று!
எப்படியோ... தந்திக்கு அன்று ஒரு சமூக மதிப்பு இருந்தது. தந்தியைக் காட்டினால் யாரும், எதையும் நம்பி விடுவார்கள். இதைப் பயன்படுத்தி,
போலி தந்திகளை வரவழைத்து, அதை உரியவர்களிடம் காட்டி, வேலை செய்யும் இடங்களில் இருந்து 1 வார ரிலாக்ஸுக்காக நிறைய பேர் வந்து
போவார்கள்.
இல்லாத கம்மா அடிக்கடி சாவாள்...
ஏற்கனவே மண்டையைப் போட்ட பெரியப்பா மீண்டும் மீண்டும் மண்டையைப் போடுவார்...
சிலர், இதில் பெற்ற தாயைக் கூட பணயம் வைக்கத் தயங்க மாட்டார்கள். சில நாட்கள் சென்ற பிறகு, உம்மாவுக்கு அவசரமாக பணம் அனுப்ப
வேண்டும் என மேலிடத்தில் கேட்கும்போது அகப்பட்டுக் கொள்வார்கள். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாள் தாங்கும்...?
“தந்தி” குறித்த எனது அனுபவம் ஒன்றோடு இக்கட்டுரையை முடிக்கலாம் என எண்ணுகிறேன்.
அது 1982ஆம் ஆண்டு என நினைக்கிறேன். திருமணமாகி ஒரு வருடமே ஆகியிருந்த நிலை. சென்னையில் இருக்கும் ஒரு பிரபல கம்பெனி மூலமாக
துபாய் செல்வதற்கு முயன்று கொண்டிருந்தேன். அது சம்பந்தமாக நானும், வாப்பாவும் சென்னை சென்றோம். அந்தக் கம்பெனியின் மானேஜர்
பொறுப்பில் இருந்தவர் வாப்பாவுக்கு நல்ல பழக்கம். வாப்பாவோடு சென்றதால் நான் உடனே இன்டர்வியூவுக்கு அழைக்கப்பட்டேன். அவர் என்னிடம்
சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, எனது பாஸ்போர்ட் மற்றும் சர்டிபிகேட்களை வாங்கி வைத்துக்கொண்டு. “ஒரு மாதம் கழித்து தகவல்
தருகிறோம்...” என்று சொல்லிவிட்டார்.
சரி, அதோடு ஊருக்குத் திரும்பலாம் என்று பார்த்தால், வாப்பா என்னை அவர்களோடு ஆந்திரா ராஜமுந்திரிக்குக் கூட்டிச் சென்றுவிட்டார்கள். அங்கு,
ராஜமுந்திரியில் எங்களது செயல்படாத பழைய தோல் ஷாப் ஒன்று இருந்தது. அதில் சில இடங்களை வாடகைக்கு விட்டிருந்தார்கள். நானும்,
வாப்பாவும், ஒரு சமையல்கார அப்பாவும் மட்டும்தான். வாப்பா முகத்தை நான் பார்க்க, என் முகத்தை வாப்பா பார்க்க... எப்படியோ ஓர் இருபது
நாட்களைத் தள்ளிவிட்டேன். அதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. அப்போது சென்னையில் படித்துக் கொண்டிருந்த எனது நண்பன்
ஒருவனுக்கு (அவன் இப்போது ஷார்ஜாவில் பெரிய வேலையில் இருக்கிறான்...) கடிதமத் எழுதி, போலி தந்தி கொடுக்கச் சொன்னேன். சரியாக
நான்கே நாட்களில் தந்தி வந்தது...
‘Visa ready. Start immediately – xxx"
தந்தியைப் பார்த்ததும் என்னை விட வாப்பாவுக்குத்தான் அதிக சந்தோஷம். என்னிடம் ஐநூறு ரூபாயும் தந்து, தேவைப்பட்டால் சென்னையில்
குறிப்பிட்ட நபரிடம் பணம் வாங்கிக் கொள்ளும்படியும் சொல்லி, என்னை ரயிலேற்றி அனுப்பினார்கள். நம்மை நம்பி பணம் தரும் வாப்பாவை இப்படி
ஏமாற்றுகிறோமே... என்ற குற்ற உணர்ச்சி அப்போது என்னிடம் துளியும் இல்லை. சென்னை வந்து அந்த நண்பனோடு 2 நாட்கள் ஊர் சுற்றிவிட்டு,
வாப்பா சொன்ன அந்த நபரிடம் (அதையும் விடவில்லை) கூடுதலாக ஐநூறு ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, ஊருக்கு வண்டி ஏறிவிட்டேன்.
ஊருக்கு வந்த பிறகு, “அந்தக் கம்பெனியில் இன்னும் ஒரு மாத காலம் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள்” என்று சொல்லி விரிவாக வாப்பாவுக்கு
ஒரு கடிதம் எழுதிப்போட்டுவிட்டேன். வாப்பா என்ன நினைத்தார்களோ... தெரியாது. நான் ஊரில் ஜாலியாக இருந்தேன். சில காலத்திற்குப் பிறகு
வாப்பாவுக்கு எனது “பித்தலாட்டம்” தெரிய வர, என்னைக் கண்டித்தார்கள்.
சிறுவயதில் தந்தையை ஏமாற்றாத தனயனும் உண்டோ...?
கவுண்டமணி பாஷையில் சொல்வதானால்,
“இதெல்லாம் வாழ்க்கையில் ஜகஜமப்பா...!”
நன்றி:- தம்பி சாளை பஷீருக்கு.
|