கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் திறக்கும் இத் தருணத்தில் எனது பள்ளி வாழ்க்கையில் மறக்க முடியாத பசுமை நினைவுகளாக
இன்றும் என் மனதில் பதிந்திருக்கும் அந்த சுவையான சில அனுபவங்களை இக் கட்டுரையின் மூலம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
– ஹிஜாஸ் மைந்தன்.
ஒருவரது வாழ்நாளில் மறக்க இயலாத பொற்காலம் என்பது அவரது பள்ளிக்கூட வாழ்க்கைதான். காரணம் வீடு மற்றும் பெற்றொர்களின்
அரவணைப்பில் மட்டுமே வாழ்ந்து வந்த நாம் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் பள்ளிக்கூடம் எனும் பல்கலைக்கழகத்திற்குள் நுழையும் போது தான் பிறர்,
பிற சமூகம், பண்பாடு, தோழமை என வாழ்வியலின் அரிச்சுவடியில் முதல் அடியெடுத்து வைக்கின்றோம்.
கல்லூரி வாழ்க்கை என்பது
சுதந்திரமானது. பள்ளிக்கூட வாழ்க்கை என்பது ஆசிரியருக்கும் கட்டுப் பட வேண்டும் அநியாயமும் செய்ய வேண்டும், பெற்றோருக்கும் பணிய
வேண்டும், பிரளியும் பண்ண வேண்டும் எனும் ஓர் சூழ்நிலைச் சிக்கலில் இளங்கன்றுகள் தம் சுதந்திரத்தை இழந்தாலும் சுயமாக சுவாசிக்கும் ஓர்
அற்புதமான பொற்காலத்தைப் பெற்று விடுகின்றன. எனவே தாம் அந்த நாட்கள் நம் வாழ்வில் என்றும் பசுமை மாறாத இனிய நினைவுகளாக பவணி
வந்து கொண்டிருக்கின்றது.
எழுபது எழுபத்தி இரண்டு காலகட்டம். எனக்கு ஐந்து வயது நிறம்ப இன்னும் சில மாதங்களே இருந்தன. இப்போது இருக்கும் LKG, UKG யெல்லாம்
அப்போது கிடையாது. பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோருக்கு கல்வித்தகுதி, பிள்ளைகளுக்கு திறனாய்வு, இண்டர்வியூ ஈரமண்ணு,
மண்ணாங்கட்டி என ஒன்றும் கிடையாது. இருக்க வேண்டிய ஒரே தகுதி தனது வலது கையை தலை வழியாக கொண்டு வந்து இடது காதைத்
தொடவேண்டும். தொட்டு விட்டால் ஒன்னாம் வகுப்பிற்கு அட்மிஷன். இல்லையெனில் நர்சரி ஸ்கூல் அதாவது நம்ம ஊர் பாஷையில் சொன்னால்
குட்டியாப்பு. அன்று எனக்கு கை எட்டவில்லை எனவே கூலற்கடை பஜாரிலிருக்கும் LK தாமரை ஸ்கூல் குட்டியாப்பில் தான் முதல் பிரவேசம்.
கையில் ஏவி அண்ட்கோவின் மஞ்சள் நிறப்பையும் அதற்குள்
மரச்சட்டத்தினாலான தகர க்ளிப் அடித்திருக்கும் கல் சிலேட் ஒன்று, ஒரு நீண்ட பாம்பே கல் குச்சி இவைகள் தான் நான் கற்கப் போகும் ஆயுத
எழுத்திற்கான ஆயத்தக் கருவிகள்.
முதல்நாள் வகுப்பில் சேர்க்க காலை எட்டு மணிக்கே வந்த என் தாயார் இன்னும் போக வில்லை என்பது மூங்கில்
பட்டியலின் வழியாக எனக்குத் தெரிந்தது. அவளைப் பார்ப்பதும் என் உதட்டைப் பிதுக்கி அழ முயற்சிப்பதும், ஆயா அம்மா வந்து கிலுகிலுப்பை பந்து
இவற்றைக் காட்டி என் கவனத்தை திசை திருப்புவதுமாக நேரம் கழிந்தது.
டீச்சரம்மா அருகில் வந்து கன்னத்தைக் கிள்ளும் போதெல்லாம் அவரது நீண்ட ஜடைப்பின்னல் தலையிலிருந்து வரும் தேங்காய் எண்ணெய் மணமும்,
நேற்று வாங்கி வைத்து சற்றே வாடிய மல்லிகைப்பூ வாடையும், கோகுல் பவுடர் வாசனையும் எனக்குப் புதிதாகவே தோன்றியது.
வகுப்பறையில்
தரையில் என்னைப் போன்ற அவஸ்த்தையில் அமர்ந்திருக்கும் மழலைகளில் சிலர் அலறினார்கள் சிலர் விளறினார்கள். சிலர் எதுவுமே நடக்காததைப்
போன்று விளையாட்டுப் பொருட்கள் மீது தனது ஆராய்ச்சியை செலுத்திக்கொண்டிருந்தனர். பள்ளிக்கூட மூலையில் தொங்க விடப்பட்டுள்ள தட்டை
வடிவிலான மணியில் கட்டை சுத்தியலால் அடிக்கும் போதெல்லாம் எனது தலையை உயர்த்தி கண்களை விரித்து அந்த பரிச்சயமில்லாத ஓசையைக்
கூர்ந்து கவனிப்பேன். இப்படி முதலாம் நாள் வெற்றித்திருநாளாக முடிந்தது.
காலங்கள் உருண்டோட ஒன்றாம் வகுப்பு கல்லாஜி சார் வகுப்பாசிரியர். என் மீது அக்கறையும் பாசமும் கொண்டவர். நாலுமாவாடியிலிருந்து தினமும்
வருவார். ஒரு முறை வீட்டில் பசியாற பழஞ்சோற்றுடன் பச்சை மிளகாய் போடப்பட்டிருந்தது. இது எனக்கு வேண்டாம் உறைக்கும் என அடம்
பிடித்தழுதபோது ஆறுதலுக்காக என் தாயார், பச்சை மிளகாய் உடம்புக்கு நல்லது நீ உன் வாத்தியாரிடம் போய் கேள் என்றார். நானும் வகுப்பறையில்
இதை வாத்தியாரிடம் கேட்க அன்று முதல் 46 வயதான இன்று வரை பச்சை மிளகாய் எனும் பட்டப் பெயர் எனக்கு சூட்டப்பட்டு விட்டது.
பின்னர் இரண்டாம் மூன்றாம் வகுப்பு என மாறிச் சென்ற போது மர சிலேட் ஆப்பிள் வடிவ ப்ளாஸ்டிக் சிலேட்டாகவும், மஞ்சள் நிறப் பை ப்ளாஸ்டிக்
ஒயர்களால் பின்னப்பட்ட பின்னல் பைகளாகவும், அதுவே காலப்போக்கில் அலுமினியப் பெட்டிகளாகவும் மாறியது. சத்துணவு அறிமுகப்படுத்தப்படாதா
காலம். ஆயினும் எங்கள் பள்ளியில் மதிய உணவு உண்டு. ரவையினால் ஆன ஏதோ ஒருவித சுவையான உணவு வழங்கப்படும்.
நெட்டைக்கொக்கு
வாத்தியார் கணக்குப் பாடம் சொல்லித் தருவார். அவர் அடிக்கடி தனது சட்டைப் பையில் குத்தியிருக்கும் மை பேனாவைத் திறந்து கசிந்த மையை
தனது தலையில் தேய்ப்பது வழக்கம்.
ஒன்னும் ஒன்னும் ரெண்டு, ரெண்டும் ரெண்டும் நாலு என உலாத்திக்கொண்டு தனது வேஷ்ட்டியை அவிழ்ப்பதும்
பின்னர் சீராக உடுப்பதுமாக முழு பீரியடும் முடிவடைந்து விடும்.
ஒருமுறை கரும்பலகையில் சூரியன் மேற்கே உதிக்கும் கிழக்கே மறையும் என
தவறாக எழுத்திப் போட்டு அன்றைய தினம் இன்ஸ்பெக்ஷனுக்கு வந்த கல்வி அதிகாரியிடம் வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டதை மறக்க இயலாது.
மூன்றாம் வகுப்பு கம்சா மைதீன் வாத்தியார். அடேயப்பா கையில் பிரம்பும் கண்டிப்பும் மிக்கவர். பாரபட்சமின்றி விளாசியெடுப்பார். இரவுப்பாட சீட்டு
எனும் பாக்கெட் டயரியில் பெற்றோர்களிடமிருந்து இன்று இரவு எனது மகன் படித்தான் என கையொப்பம் வாங்கி வர வேண்டும். வகுப்பிற்கு
வந்ததும் க்ளாஸ் லீடர் எல்லோரிடத்திலும் அதை வாங்கி சார் டேபிளில் வைத்து விடுவான். முப்பதுக்கும் மேற்பட்ட அத்தனை டயரியையும்
வாசித்துப்பார்த்து அவரும் அதில் கையெழுத்திடுவார்.
சில வேளை பேனாவை வைத்துக் கொண்டே கோழித்தூக்கம் தூங்கி விழுவார். நாங்கள்
சப்தமின்றி கள்ளத்தனமாக சிரித்து மகிழ்வோம்.
நான்காம் வகுப்பு அலாவுத்தீன் சார், ஹார்மோனியப்பெட்டி எஸ்போன் சார், தபலாக் கொட்டு அப்பன்
சார், வேஷ்ட்டியைத் தூக்கி பின்னால் கைகளைக்கட்டிக் கொண்டு நடக்கும் தங்கராஜ் சார் இப்படி பல பிரிவுகள் இருந்தன.
அலாவுத்தீன் சார்
எங்களைப் பாடச் சொல்லி கேட்டு மகிழ்வார். அவர் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர் என்பது எங்களுக்குத் தெரியும். நான் பாடும் போது தொப்பி போட்ட
எம்.ஜி.ஆர் பிறருக்கு தொப்பி போடும் எம்.ஜி.ஆர் என பொடி வைத்து பாடியதும் நான்கு குட்டுகள் எனது தலையில் விழுந்தன.
ஐந்தாம் வகுப்பு
ஆசிரியராக இருந்தது ஹெட்மாஸ்டர் தங்கபாண்டி சார். விசிலும் நார்க் கம்பும் அவரோடு ஒட்டிப்பிறந்ததோ? என்னவோ? அவரது மகன்
அலெக்சாண்டர் என்னோடு படித்த சக மாணவன்.
அசம்பெளியில் ஸ்கூல் அடென்ஷன் எனக் குரல் வந்ததும் சலசல சத்தம் மறைந்து அமைதியுடன் வரிசையில் நின்று வாத்தியார் சொல்லுவதைக்
கவனமாகக் கேட்போம்.
தமிழ்த் தாய் வாழ்த்து, ஆதியருள் கனிந்திளங்கி, ஓதுவோம் வாருங்கள், போன்ற பாடல்கள் ஒலிக்க தமது திறமைகளை
ஆர்மோனியப்பெட்டி மற்றும் மிருதங்கத்தில் ஆசிரியர்கள் வெளிப்படுத்த எல்கே அப்பா எல்.எஸ். போன்றோர் அறிவுரைகள் கூற, இப்படி அந்த
மகத்துவமான நிமிடங்கள் இன்னும் நீளாதா? என ஏங்கியதுண்டு.
அவ்வப்போது எல்கே அப்பா மாணவர்களை வரிசையாக நிற்கச் செய்து விரல்
நகத்தைப் பார்பதும் ஈ...எனப் பல்லிளிக்கச் சொல்லி பரிசோதிப்பதும் அவர்கள் மாணவர்களின் நலனில் மீது கொண்டுள்ள அக்கறைக்கு
எடுத்துக்காட்டாகும்.
இண்டர்வெல் எனும் பாட இடை வேளையின் போது கூலற்கடை பஜாரே களை கட்டும்.
கலர் கலராக அடுக்கி வைக்கப்பட்ட சர்க்கரைப் பாணி பாட்டில்களை கைவண்டியில் வைத்து ஐஸ் கட்டியை செதுக்கி கண்ணாடி கிளாஸில் நிறைத்து
அதை வண்ணமயமாக்கி கட்டைக்குச்சியைப் போட்டு தரும் சீவல் ஐஸ், மூலையில் சாக்கு மற்றும் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குட்டிக்
கூடாரத்திற்குள் மெலிந்த உடலும், சுருக்கு விழுந்த முகமும், கூன் முதுகுமாய் படு ஜோராக வியாபாரம் செய்து வரும் பிராட்டி! அவளிடத்தில் தன்
வேஷ்ட்டியில் அள்ளி வந்த புளியங்காய்களை மொத்தமாக கொடுத்து காசு வாங்கிச் செல்லும் சுபுக்கு எனும் புளியங்கா கள்ளன், கூறு போட்டு விற்கும்
கொடுக்காப்புளி, மாங்காய், கொல்லாம்பழம், சுட்ட பனைங்காய், சொடக்குத்தக்காளி, ஒட்டுப்பழங்கள் இப்படி வகை வகையான தின்பண்டங்கள்
பிராட்டியின் ஓலை சூப்பர் மார்க்கெட்டில் தான் கிடைக்கும்.
அருகில் மரப்பெட்டியில் சவ்வு மிட்டாய்களை விற்பனை செய்யும் தொட்டாசியை மறக்க
இயலாது. அவர் டீ குடிக்கச் செல்லும் போது நான் தான் அவர் பெட்டிக்கு பாதுகாவலன். அதற்கு கூலியாக எனக்கு ஐந்து பைசா சவ்மிட்டாய்
இலவசமாகக் கிடைக்கும் போது அலாதியான ஆனந்தம்.
பக்கத்திலுள்ள சந்தை அப்போது கட்டிடமாக இல்லை ஓலைக்கூரைகள்தான் இருந்தன.
அதைச் சுற்றி பல்வேறு வியாபாரிகள் கூட்டங்கூட்டமாக இருப்பார்கள். மரவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, சீனிக்கிழங்கு, அகத்திக்கீரை, வெள்ளரிப்
பிஞ்சு, கொய்யாப்பழம், நாவற்பழம், மாம்பழம், பலாப்பழம், நெல்லிக்காய், பழைய பூட்டு சாவி, உபயோகித்த டார்ச் லைட்டு, மர்ஃபி ரேடியோ ,
சைக்கிள் டைனமோ இப்படி அந்த இடமே ஒரு பல்பொருள் அங்காடியாகத் தோன்றும். நமதூர் பாஷையில் சொன்னால் அங்கு பில் போட எங்களில்
ஒரு குழுவே இருந்தது.
ஆறாம் வகுப்பு மாறியதும் ஹைஸ்கூலுக்குப் போனோம். எங்கள் வழக்கமும் வாடிக்கையும் தலைகீழாக மாறியது.
நீண்ட கோபுரத்தில் ஊரையே
உசுப்பிவிடும் சங்கு (சைரன்) பயன்பாட்டில் இருந்து வந்தது. திரு ஞானய்யா சார் தான் தலைமையாசிரியர். சுடலையும், முருகனும்
மெய்க்காப்பாளர்கள். இண்டர்வெல்லுக்கு கேட்டு பூட்டப்பட்டிருக்கும். வெளி நடமாட்டம் குறைவு இவையெல்லாம் எமக்கு பெரும் ஏமாற்றமாகவே
இருந்தது.
எதிரே இருக்கும் கொல்லன் பட்டறை பம்பரத்திற்கு ஆணி போட வசதியாக இருந்தது. முடி வெட்டும் கடை, கடலை வறுக்கும் கடை
(வறுக்கும் போது வகுப்பறை வரை வாசம் மூக்கை துளைக்கும்) பள்ளியில் தமிழ் பாடம் திரு நாராயணன் அவர்கள் பாடத்தை ராகத்தோடும்
அவருக்கே உரித்தான நகைச்சுவை நையாண்டியோடும் நடத்துவார்.
நாயை அடிப்பதில் ஆராம்பள்ளித் தெருக்காரந்தான் (மத்தீன்) கெட்டிக்காரன். ஓடுற
நாயில் காலில் அடிக்கணுமா? வாலில் அடிக்கணுமான்னு அவனுக்குத்தான் தெரியும் என சொல்லிக் கொண்டே அவனது கை முழிகளில் ஸ்கேலை
குறுக்காக வைத்து டட்டொடைன்...என்று உடம்பைக் குலுக்கிக் கொண்டே அடிப்பார்.
அடுத்த வகுப்பில் அதே பாடம் நடத்தும் ஜோசப் சாருக்கும் நாராயணன் வாத்தியாருக்கும் அடிக்கடி செல்லச் சண்டைகள் நடக்கும்.
தேனாய் தீப்பழமாய்
என இழுத்து ராகத்துடன் அவர் பாடம் நடத்த ஒரே மூச்சில் அந்த செய்யுளைப் படித்துக் காட்டும் ஜோசப் சார், யோவ்...நிறுத்தி நிதானமாப் பாடம்
நடத்தும் ஓய் என்று இவர் கிண்டலடிக்க இப்படி வகுப்பறையில் ஒரே அமர்க்களம்தான். அவரிடம் தான் நான் டியூஷன் படித்தேன். வந்ததும்
வராததுமாக ப்ளாக் போர்டில் கடகடவென எழுதிப்போட்டு விட்டு அமர்ந்துவிடும் கண்ணன் சார் எனும் இராமநாதன் வாத்தியார் என்னைப் பார்த்து
எழும்புலே..ராஸ்க்கல் என சொல்ல நான் எழுந்ததும் உன்னை எவன்டா எழச் சொன்னான்? எனக் கடுப்பாவார். அவருக்கு சற்று மாறுகண் என்பதால்
யாரை எழச் சொல்லுகினார் என்கிற குழப்பம் வெகுநாட்களாகவே எனக்குள் இருந்து வந்தது.
உன்னை வெச்சு பாடம் நடத்துறதுக்கு நாலு கழுதைகளை
வெச்சு பாடம் நடத்தினா அதுகளாவது நல்ல படிச்சு பாஸாயிட்டு போகும். நான் வேலை வெட்டி இல்லமயாடா பாடம் நடத்துறேன்? போங்க போய்
மேனேஞ்மெண்ட்கிட்டெ சொல்லுங்க..எனக்கு இந்த மடமில்லைன்னா சந்த மடம்! எனப் பொரிந்து தள்ளுவதை நல்ல பிள்ளைகள் போல் முகத்தை
வைத்துக் கொண்டு நாங்கள் ரகசியமாக ரசிப்போம்.
நாக்கை இரண்டாக மடித்து பல்லால் கவ்விக் கொண்டு சாத்து சாத்தும் நெய்னா முகம்மது சார்
எனக்கு கிளாஸ் டீச்சர்.
அடே! வாப்பா நெய்னா முகம்மது நீ எனக்கு ஒரு அழகான பையனை முடிச்சு தாவேன் என கலாய்க்கும் சபியா கம்மாதான்
எங்கள் பள்ளியின் அப்போதைய ஹீரோயின். துப்புறவு பணிக்காக அவர் பாடவேளைகளில் வந்துவிட்டால் ஒரே களேபாரம்தான்.
வகுப்பு நேரங்களில்
பூனை போல ஓசையின்றி வந்து எட்டிப்பார்க்கும் மதிப்பிற்குரிய ஞானய்யா சாருக்கு அந்த பெயரே பட்டப் பெயராகி விட்டதுதான் உண்மை.
ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு இலக்கிய மன்றம் இப்படி வருடங்கள் ஓடின. வரலாறு பாடம் நடத்து செய்ஹுலா சார் தான் எனக்கு வகுப்பாசிரியர்.
அவரிடமுன் நான் டியூஷன் படித்திருக்கின்றேன். எளிமையானவர், இபாதத்து நிறைந்த நல்ல மனிதர். தனது இயலாத கைகளை குவித்து வைத்து
மொத்து மொத்தென்று மொத்தும் போதும் வலிப்பதில்லை.
அறிவியல் பாடம் நடத்தும் ராமன் சார் தனது நெற்றியில் சிவப்பு நிறத்திலான ஒரு
மெல்லிய கோடு போட்டுக் கொண்டு வருவார். அவருக்கு பட்டை எனப் பெயர் வைத்திருந்தனர். கிராப்ஃட் சார் அடேயப்பா...ஒரு கதை ஒன்று
சொல்லுவார். ஏதோ மந்திரப்பந்து...மரம் வளர்ந்துகிட்டே போகும் மாயாவி, மாயக்கிளவி இப்படி முடிவில்லா கதை சொல்லுவதில் அவருக்கு நிகர்
அவரேதான். எனவே தாம் நம் மக்களால் பெருமையுடன் கப்ஸா மன்னன் என அழைக்கப்பட்டார்.
அப்போது ஆங்கில மீடியம் துவங்கப்பட்ட காலம்.
கின்ஸ்லி வாத்தியார் புதிதாக வந்தார். அவர் அடிக்கடி சைலன்ஸ் எனக் கூறுவதால் அவருக்கு சைலன்ஸ் சார் எனும் பெயர் நிலைத்தது.
டிராயிங் சார்
அட்டை, காட்போர்டுகளில் படங்களை ஒட்டி அதை மெல்லிய அரத்தால் வெட்டியெடுக்கவும், ஓவியங்கள் வரையவும் கற்றுத்தருவதில் வல்லவர்.
யாரிடமும் அதிகம் பேசுவதோ வழகுவதோ கிடையாது. எனவே அவருக்கு பட்டப்பெயரும் கிடையாது.
ட்ரில் மாஸ்ட்டர் கோல்டு ராஜ் சார்
ஆங்...ஆங் லைனாப் போ...என பாவலர் பூங்காவிற்கு விளையாட எங்களை அழைத்துச் சொல்வார்.
சாகுல் ஹமீது சார் எங்களை ஸ்கூல் விட்ட
பிறகும் (எக்ஸஸைஸ்) உடற்பயிற்சி செய்யச் சொல்லி உயிரை எடுப்பவர். பள்ளி விட்ட பிறகும் எங்களை அவர் பழி வாங்குவதாகவே அப்போது
தோன்றும்.
சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை போன்ற அமைப்புகள் அப்போது தான் புதிதாக நம் பள்ளிக்கு அறிமுகம் செய்யப்பட்ட காலம். காக்கி உடை
தொப்பி, ஷூ, சாக்ஸ் என ஒரு போலீஸ் தோரணை அந்த சீருடைக்கு இருந்தது. அதில் சேருவதற்கு உயரம், உருவம் மற்றும் காலை சேர்த்து
வைக்கும் போது முட்டுகள் ஒட்டக்கூடாது என பல விதி முறைகள் இருந்தன. நான் குள்ளமாக இருந்த படியால் தேர்வு செய்யும் வரிசையில்கூட
நிற்கின்ற தகுதியை இழந்தேன்.
அந்த காலத்தில் ஒர் சுவரஸ்யமான நிகழ்வு நினவுக்கு வருகின்றது. நம் பள்ளியை ஒட்டி மெயின் ரோட்டில்
சோமசுந்தர நாடார் என்பவர் குளிர்பாணக் கடை வைத்திருந்தார். பெரிய செட்டுக்களான அலி அக்பர், காஜா போன்றோர் NCC யில் பயிற்சி முடிந்த
கையோடு சர்பத் குடிக்க சோமசுந்தரத்தின் கடைக்கு வந்துள்ளனர். காக்கி உடையில் அவர்களைப் பார்த்ததும் யப்பா..நீங்க எப்ப போலீசானீங்க? என
வெள்ளந்தியாக அவர் கேட்டதை பிடித்துக் கொண்டு ஆமா அண்ணாச்சி! நாங்க இப்ப ஆறுமுகநேரி ஸ்டேஷன் போலீஸ் ஆயிட்டோம். நான்
கான்ஸ்டபிள் இவன் ஏட்டய்யாவாயிட்டான். ஆமா உங்க கடைலெ கிளாஸெல்லாம் சுத்தமா இருக்கா? நன்னாரியிலெ கலப்படமில்லையே? நாங்க
டெய்லி வந்து செக் பண்ணுவோம் என அவரை மிரட்ட, வாங்க தம்பி நீங்க எப்ப வந்தாலும் காசு தர வேண்டாம் சும்மாவே குடிச்சிட்டுப் போங்க ஆனா
கம்ளைண்ட் மட்டும் பண்ணிடாதீங்க என அவர் மிரண்டு போயிருக்கிறார்.
இப்படியே பல நாள் அவர்கள் ஆட்டையைப் போட ஒரு நாள் வாத்தியார் ஒருவர் சோமசுந்தரத்திடம் விபரத்தை விளக்கமாகச் சொல்ல சர்பத் குடிக்க
வந்தவர்கள் மீது வாங்கடா வாங்க துலுக்கப்பயபுள்ளைங்களா...இம்புட்டு நாளா என்னயா ஏமாத்தினீங்க? என ஆத்திரத்தோடு கிளாஸ் கழுகிய
தண்ணீரை அவர்களுக்கு மேல் வீசவே, ஓஸி சர்பத் குடிக்க வந்தவர்கள் என்ன நடந்தது என தெரியாமல் தலை கால் தெறிக்க ஓடினார்களாம்.
அதே
குறும்புக்கார மாணவர்கள் காக்கி யூனிஃபார் அணிந்து கொண்டு பகல் நேரங்களில் மிடுக்கோடு முடுக்குகளில் பவணி வர அப் பகுதி பெண்கள்
போலீஸ்க்காரர்கள்தான் வந்து விட்டார்கள் என பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி ஒளிந்தார்களாம். நாளடைவில் இந்த குறும்பர்கள்
நம்மவர்கள்தாம் எனத் தெரிய வர தாய்க்குலங்களின் அர்ச்சனை பலமாக இருக்க இவர்கள் ஓடி ஒளிவார்களாம். இப்படி எகப்பட்ட குறும்புகள்
பள்ளிக்கூட வாழ்க்கையில் மட்டும் தான் கிடைக்கும்.
அந்த காலத்தில் தெருக்களில் வலம்வரும் கனி ஐஸ், ரெக்ஸ் ஐஸ், ராஜன் ஐஸ், பால் ஐஸ், சேமியா ஐஸ், நுனியில் மட்டும் இருக்கும் ஜவ்வரிசி
ஐஸ் இவைகளை சுவைக்கத நபர்களே இருக்க முடியாது.
மஃரிப் ஆகி விட்டால் ஐந்து பைசாவுக்கு இரண்டு ஐஸ் கிடைக்கும் ஊருக்கு வெளியில்
ஐஸ் பெட்டிகளிலிருந்து கொட்டப்படும் பனிக்கட்டிகளை ஓடிப்போய் எடுத்து சுவைப்பதும் அது உப்பு கரிப்பதும் ஒரு டேஸ்ட்டுதான்.
மண்ணில்
கிடக்கும் ஐஸ்பார்களில் ஏறி நின்று கூத்துப்போடுவதும் ஓர் குளிந்த அனுபவமே! குமரன் சைக்கிள் மார்ட் மீசை, ஹபீபா சக்கிள் மார்ட், SMT,
சலீம், ஜுவைரியா, யாசீன், தம்பி, போன்றவைகள் தான் நல்ல பொழுது போக்கிற்காக உதவும் பிரதான ஸ்தாபனங்கள்.
கால்வண்டி, அரை வண்டி,
முழு வண்டி என சைக்கிள் கடைகளில் ஒரு மணிநேர வாடகைக்கு எடுத்து அதை பின்னாலிருந்து ஒருவன் பிடித்துக் கொண்டே ஓடி வர நாம் தத்தக்க
பித்தக்கா என ஓட்டி அவன் கையை விடும் போது சரிந்து விழுந்து நொறுங்கிய அனுபவமும் உண்டு. பின்னர் டைம் ஆயிடுச்சுடான்னு பதறிக்கொண்டு
ஓடி கடைக்குச் சென்றதும் கடிகாரத்தைப் பார்த்தது அடடா அஞ்சு நிமிடம் கூடிப்போச்சே என அசடு வழிந்து நின்றதும் உண்டு.
தைக்கா தெரு
கருவண்டு எனும் நண்பன் புளிய மரம் ஏறுவதில் எக்ஸ்பர்ட். அவனை ஊர் முழுக்கத்தேடினாலும் கிடைக்க மாட்டான். புதுப்பள்ளிக்கு எதிரே
அமைந்துள்ள புளியமரத் தோட்டத்தில் மரக்கிளைகளில் படுக்கை செய்து அதில் குடியேறி குடித்தனமும் நடத்திவிடுவான். அதே மரத்தில் சுபுக்கு
காக்காவை கட்டி வைத்து உரித்த கனவான்கள் பலர் இன்று மண் மறைந்து விட்டனர்.
மனதில் மறையாத இது போன்ற அனுபவங்களை எழுதிக்கொண்டு போனால் முப்பது பாகங்கள் ஆனாலும் முடியப்போவதில்லை. ஏதோ என் நினைவில்
நீங்கா இடம் பெற்ற சில சம்பவங்களை மட்டும் உங்களோடு பகிர்ந்துள்ளேன். இது யாரையும் குறை கூறுவதற்காகவோ அல்லது குறைத்து
மதிப்பிடுவதற்காவோ அல்ல என்பதைக் கூறி விடை பெறுகின்றேன். |