16ஆவது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான தேர்தல்கள் தற்போது நாடெங்கும் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 07 அன்று துவங்கிய
இத்தேர்தல் - 9 கட்டங்களாக - மே 12 வரை நடைபெறுகிறது. முடிவுகள் மே 16 அன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், இத்தேர்தலின் முடிவுகளை
முற்கூட்டியே - ஊடகங்கள் கருத்து கணிப்புகள் வாயிலாக வெளியிட்டு வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, தேசிய அளவில் அதிக அளவில் இடங்களை வெல்லும் என்றும், ஆட்சியமைக்கத் தேவையான 272 இடங்களை
நெருங்கவோ அல்லது தாண்டவோ செய்யும் என்றும் இக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கு தேர்தல்களும் புதிதல்ல, கருத்துக் கணிப்புகளும் புதிதல்ல. இந்திய ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் - 80 கோடிக்கும் மேலான
வாக்காளர்களின் மன நிலையை அறிந்து, அவற்றை நாடாளுமன்ற இடங்களாகப் பிரித்துக் காண்பிக்கும் திறனை இன்னும் பெறவில்லை என்பது
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள தேர்தல்கள் சொல்லித்தரும் பாடம்.
விற்பனைக்கு செய்தி (PAID NEWS) மிகுந்துள்ளதாகக் கூறப்படும் இந்திய ஊடக உலகில், கருத்து கணிப்புகளும் அதில் ஒரு வகை என்பது வலுவான
- நியாயமான குற்றச்சாட்டு. பணத்திற்காக தேவையானோருக்கு கருத்துக் கணிப்புகளை மாற்ற சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆயத்தமாக உள்ளன என
அண்மையில் வெளியான செய்திகள் உறுதி செய்துள்ளது.
News Express என்ற தொலைக்காட்சி - CVOTER என்ற நிறுவனம்
உட்பட 11 கருத்துகணிப்பு நிறுவனங்கள், பணத்திற்காக, தங்கள் முடிவுகளை மாற்றி வழங்க தயாராக உள்ளதாக செய்தி வெளியிட்டது. CVOTER
நிறுவனத்தின் உரிமையாளர் யஸ்வந்த் தேஷ்முக், ஆர்.எஸ்.எஸ். நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவரான நானாஜி தேஷ்முக்கின் மகன் என்பது
குறிப்பிடத்தக்கது.
மக்களின் முடிவு மே 16 அன்று வெளிவரும். அது பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருந்து, நரேந்திர மோடி இந்திய பிரதமரானால்,
இந்தியாவுக்கு அது நல்லதல்ல என்ற கருத்து தற்போது வெளிநாடுகளில் பரவலாகப் பேசத் துவங்கப்பட்டுள்ளது.
லண்டன் நகரிலிருந்து வெளிவரும் The Economist என்ற பத்திரிக்கை, ஏப்ரல் 05 அன்று Can anyone stop Narendra Modi? என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை வெளியிட்டிருந்தது. 2002ஆம் ஆண்டில்,
குஜராத் மாநிலத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த கலவரங்களில் மோடியின் பங்கு நிரூபிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், இதுவரை
நிருபிக்கப்படாததற்கு முக்கியக் காரணம், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதுதான் என அத்தலையங்கம் தெரிவிக்கிறது.
மேலும் மோடி பிரதமராகத் தேர்வானால், இந்தியாவின் எதிர்காலத்திற்கு அது உகந்ததல்ல என கூட்டாக பல முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ள
கருத்து - லண்டன் நகரில் இருந்து வெளிவரும் மற்றொரு நாளிதழான THE GUARDIAN இல் - ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்டிருந்தது.
ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்களான கிரீஸ் கர்னாட், யு.ஆர்.கிருஷ்ண மூர்த்தி போன்றோர், ‘சமகாலீன விசார வேதிகே’ என்ற
பெயரில் ஒருங்கிணைந்து, மோடியின் வளர்ச்சி - இந்திய பன்மைத்துவ சித்தாந்தத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற கருத்தை பதிந்துள்ளதோடு மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
குஜராத் பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமரானால் நாடு சந்திக்கவுள்ள ஆபத்துகளை இதற்கு மேலும் நாம் விரிவாக விளக்கத் தேவையில்லை.
இந்தியாவின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்டுள்ள பெரும்பாலானோர் இதை உணர்ந்துள்ளனர். நடைபெறும் தேர்தலில் இந்தப் பின்னணியை,
அபாயத்தை, உணர்ந்து எவ்வாறு நாம் வாக்குகளை அளிப்பது என்பதை அலசுவதுதான் இத்தலையங்கத்தின் நோக்கம்.
செய்திகளை மட்டும் வெளியிடாமல், செய்திகளுக்குப் பின்னணியில் உள்ள தகவல்களையும் வழங்குவது ஊடகங்களின் கடமையாகும். ஊடகங்களில்
கட்டுரைகள் வாயிலாக இவைகள் பொதுவாக அவ்வப்போது வெளியிடப்படும். தலையங்கங்கள் - ஊடக ஆசிரியர்களின் எண்ண அலைகளைத்
தெரிவிக்கும் வாகனமாகும்.
தேர்தல் காலங்களில் THE NEW YORK TIMES போன்ற மேற்கத்திய பத்திரிக்கைகள் - அந் நாட்டு தேர்தல்களில், ஒரு
குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளன.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் இந்தத் தலையங்கம், குறிப்பிட்ட எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்க கோரப் போவதில்லை. வாக்களிக்கும்
மக்கள் - தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் முன், மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விசயங்களை மட்டும் இத்தலையங்கம் மூலம் பகிர்ந்து
கொள்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா - 1947ஆம் ஆண்டு சுதந்திரமடைந்தது. இந்த சுதந்திரத்தோடு இந்தியா பிரிவினையையும் சந்தித்தது.
பிரிவினையின் காரணங்கள் நீண்ட, தனி வரலாறு என்றாலும், அவற்றைச் சுருக்கமாக நாம் சில சொற்களில் கூறலாம். குறிப்பிடத்தக்க
அளவிலான முஸ்லிம்களும், ஹிந்துக்களும் ஒரே நாட்டில், ஒற்றுமையாக வாழ முடியாது என்ற எண்ணத்தில் செயல்பட்டதன் விளைவே -
பிரிவினை.
ஒன்றாக, ஒற்றுமையாக இரு சமுதாயத்தினரும் வாழ முடியாது என்ற சிந்தனையில் இருந்த சில முஸ்லிம்கள் - பாகிஸ்தான் என்ற நாட்டை
உருவாக்கி அங்கு குடியேறினர். அதே சிந்தனையிலிருந்த குறிப்பிடும்படியான சில ஹிந்துக்கள் - ஆர்.எஸ்.எஸ். என்றும், ஹிந்து மகா சபா
என்றும், ஜன சங் என்றும் பல பெயர்களில் - இந்திய மண்ணில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
சுதந்திரத்திற்குப் பின்னர் - சிறுபான்மையினர் உட்பட இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசனம் - அனைத்து மக்களுக்கும் பல்வேறு
உரிமைகளையும், பாதுகாப்புகளையும் வழங்கியுள்ளது. மேலும் நீதிமன்றங்கள், பெருவாரியான தருணங்களில் - நியாயமான தீர்ப்புகளையும்
வழங்கி வந்துள்ளன.
இருப்பினும், சுதந்திரத்திற்கு முன்னர் நடந்த மதக் கலவரங்கள் - வீரியத்தில் குறைந்திருந்தாலும், எண்ணிக்கையில் குறையவில்லை. ஹிந்து
மதத்தை முன்னெடுத்து அரசியல் செய்த அமைப்புகள் அவ்வப்போது தலைதூக்கிக் கொண்டே வந்துள்ளன. அந்த அமைப்புகளோ, அவற்றின்
சித்தாந்தங்களோ - கடந்த 50 ஆண்டுகளாக, தீவிரமாக எதிர்க்கப்படவில்லை; சட்ட ரீதியாக அழிக்கப்படவும் இல்லை. அதன் விளைவே 1990களில்
ரத யாத்திரை என்ற பெயரில் அத்வானி நாடு முழுக்க முன்னிலைப் படுத்தப்பட்டது; பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட சில ஆண்டுகளில் வாஜ்பாய்
முன்னிலைப்படுத்தப்பட்டு பிரதமராக்கப்பட்டது; தற்போது குஜராத் கலவரங்களைத் தொடர்ந்து நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவது.
ஆழ சிந்தித்தால், நரேந்திர மோடி போன்ற பாசிச தலைவர்கள் நாட்டின் பிரதமராகும் சூழல் உருவாகியிருப்பது இது முதல் முறை இல்லை. முன்னரும்
அச்சூழல் நிலவியுள்ளது, அதற்கான அடிப்படை காரணங்கள் களையப்படவில்லை என்றால் வருங்காலங்களிலும் இதுபோன்ற சூழல்கள்
தோன்றும்.
அப்படியானால் அதற்கான அடிப்படைக் காரணங்கள்தான் என்ன?
கடந்த 67 ஆண்டுகளில், முஸ்லிம்களும் - முஸ்லிம் அமைப்புகளும், மதசார்பின்மைக் கொள்கை என்பது சிறுபான்மையினர் நலனுக்காக
மட்டுமல்ல; ஒட்டுமொத்த நாட்டுக்கான நலன் என்பதை சக குடிமக்களுக்கு உணர்த்தத் தவறிவிட்டனர். சிறுபான்மை சமுதாயத்தைத் தாண்டி, இடது சாரி, அறிவு ஜீவிகள் வட்டத்தை தாண்டி, இந்த
எண்ணம் - பிற சமுதாய மக்களிடம் பெரிய அளவில் வேரூன்றவில்லை. அதன் விளைவு,
முஸ்லிம்கள் தேசிய அளவில் நம்பிய காங்கிரஸ் போன்ற கட்சிகளும், மாநில அளவில் நம்பிய தி.மு.க. போன்ற கட்சிகளும் - ஊழலிலும்,
நிர்வாகச் சீர்கேட்டிலும் மூழ்க, பெருபான்மை சமுதாய மக்களோ - அந்தக் கட்சிகளை விட்டும் விலகி, பாரதிய ஜனதா போன்ற மாற்றுக் கட்சிகளை
நாடத் துவங்கியுள்ளார்கள்.
சமூக நீதியை நிலைநாட்டி, சுய மரியாதைச் சிந்தனையை வளர்த்த திராவிடக் கட்சிகள் - இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் அளவில்
வளர்ந்துள்ளன. அவர்களின் முடிவுகளும், செயல்பாடுகளும் - மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இருக்கும் என்பது அறிவுக்கு பொருந்தாத எதிர்பார்ப்பு.
மாறாக அவர்களின் செயல்பாடுகள் - தங்களையும், தங்கள் தொழில் நிறுவனங்களையும், தங்கள் குடும்பங்களையும் பாதுக்காதுக்கொள்ளத்தக்க அளவில்தான் இருக்கும்.
அருவருக்கத்தக்க இந்த உண்மையை அறிந்தும், சிறுபான்மையின அமைப்புகள் உட்பட பெருவாரியான மக்கள், அக்கட்சிகளை மக்கள்
மன்றத்திலிருந்து அகற்றுவதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது - அகண்ட சமூகத்தில் நிலவும், அறியாமையின் வெளிப்பாடு.
ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் - தமிழகத்தில் வேரூன்றாமல் இருக்க பெரியார் போன்றோர் ஆற்றிய பணிகள் இன்று புதைக்கப்பட்டு, தீண்டத்தகாத
அந்த சித்தாந்தங்களை இந்த மண்ணில் வரவேற்று, பிறரும் பரிசீலித்து, ஏற்றுக்கொள்ளும் அளவில் வளர்த்த காரியத்தில் தி.மு.க., அ.தி.மு.க.
போன்ற கட்சிகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளும் அந்த முன்னுதாரணத்தைப்
பின்பற்றியே இன்று பா.ஜ.க.வின் பின்னால் சென்றுள்ளனர்.
இந்த நாடு எதிர்நோக்கியுள்ள - ஹிந்துத்வா சக்திகளுடனான போராட்டத்தில், திராவிட கட்சிகள் - சிறுபான்மையினர் பக்கம் முழுவதுமாக இருக்கும்
என எதிர்ப்பார்ப்பது, நிலவும் அரசியல் சூழலை முழுமையாக உணராத சிந்தனையே.
பாரதிய ஜனதா கட்சி, சிறுபான்மை சமுதாய மக்களுக்கு - மதச்சார்பின்மைக்கு எதிரான கட்சியாக இருக்கலாம். ஆனால் – குறிப்பிடத்தக்க
அளவிலான பெரும்பான்மை சமுதாய மக்கள் - அக்கட்சியை அவ்வாறு பார்க்கவில்லை என்பதை நாம் உணர வேண்டியது அவசியம். இதுதான்
வளர்ந்து வரும் நிதர்சன உண்மை. ஊழல் வேறு விஷயம், மதசார்பின்மை வேறு விஷயம் என வாதிடுவோர் இந்தத் தொடர்பைப்
புரிந்துகொள்ளவேண்டும்.
முஸ்லிம் சமுதாயம் - நடப்பு தேர்தலை, மோடி பிரதமர் ஆவதிலிருந்து தடுப்பதற்கான தேர்தல் என்ற பார்வையிலிருந்து விலகவேண்டும். இது
நீண்டகால - ஹிந்து வகுப்புவாதத்திற்கு, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்திற்கு, எதிரான பிரச்சனை. இதற்கு தொலைநோக்குப் பார்வையோடுள்ள
அணுகுமுறையே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
முஸ்லிம் சமுதாயம் - மதச்சார்பின்மை ஆதரவு என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சில கட்சிகளை ஆதரித்து, ஊழல் போன்ற முக்கிய
அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமல் இருப்பது - இனி வருங்காலங்களில் பயனைத் தராது என்பதோடு, பாரதிய ஜனதா கட்சி போன்ற வகுப்புவாத
கட்சிகள் வளரவும், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளின் சித்தாந்தங்கள் ஆழமாக நாட்டில் வேரூன்றவும்தான் துணை புரியும்.
எனவே, முஸ்லிம் சமுதாயம் - தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, நாட்டின் எதிர்காலத்தை அனைத்து சமுதாய மக்களுக்கும் பாதுகாப்பானதாக
அமைத்துக்கொள்ள - வழமையான சிந்தனைகளிலிருந்தும், ஆதரவு நிலைகளிலிருந்தும் - இனியும் காலந்தாழ்த்தாமல் வெளிவருவது காலத்தின்
கட்டாயம்.
|