காயல்பட்டினம் நகர்மன்றத்தில் தலைவர் - உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது புதிதல்ல. கடந்த நகர்மன்றத்தின் (2006 -
2011) ஆரம்ப மாதங்களில் இதே சூழல் நிலவியது. அக்காலகட்டத்தில் பல தலைப்புகளில் செய்திகளும், தலையங்கங்களும் காயல்பட்டணம்.காம்
இணையதளத்தில் வெளியாயின.
பார்க்க:-
(a) நகர்மன்றத்தில் சுமூகம்! நலத்திட்டப் பணிகளுக்கு அடித்தளம்!! பொதுநல அமைப்புகள் பாராட்டு!!! [23-11-2007]
(b) நகர்மன்றத் தலைவர் ராஜினாமா! முழு விபரம்!! [28-11-2007]
(c) ஐக்கியப் பேரவை வற்புறுத்தலால் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா வாபஸ்!!!
[28-11-2007]
(d) நகர்மன்றத் தலைவர் ராஜினாமா - தினகரன் விளக்கம்! [29-11-2007]
(e) நகர்மன்றத் தலைவர் மீது அதிருப்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு! [1-12-2007]
(f) ஊழலின்றி செயல்படுங்கள்! இல்லாவிடில் நகராட்சியைக் கலைக்கக்
கோருவோம்!! -ஐக்கியப் பேரவை [10-12-2007]
ஊழலுக்கு எதிரான நகர்மன்றத் தலைவர், ஊழலுக்கு ஆதரவான / கண்டுகொள்ளாத நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பக்க பலமாக காயல்பட்டினத்தைச் சார்ந்த சென்னை வாழ் தொழிலதிபர்.
இது அன்றைய நிகழ்வு மட்டுமல்ல, இன்றும் அதே நிலைதான். அன்று நிலவிய சூழலிலும் சில சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 11
பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அம்முயற்சிகள் குறித்து பிப்ரவரி 27, 2008 அன்று Peace returns to Municipality? என்ற தலைப்பில் காயல்பட்டணம்.காம், தலையங்கம் ஒன்றும் வெளியிட்டிருந்தது.
அதன் பின் நகராட்சியில் நிலவிய அமைதி எந்த வடிவில் இருந்தது என்பதற்கு கடந்த ஐந்தாண்டுகளாக நகர்மன்றத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். வளாகத்தில் - வார்டு 01 முன்னாள் உறுப்பினர் திருத்துவராஜ், செப்டம்பர் 25, 2011 அன்று, ஆற்றிய உரை சான்று.
முடிந்தது அக்டோபர் 2011 தேர்தல். வந்தது ஏறத்தாழ (இருவரைத் தவிர) புதிய நகர்மன்ற அங்கத்தினர்கள். திரும்பியது ஐந்தாண்டுகளுக்கு முன் ஓடிய அதே திரைக்கதை.
நகராட்சியில் மீண்டும் அசாதாரண சூழல். மீண்டும் சமாதானக் குழு அமைக்கப்படுகிறது. அசாதாரண சூழலுக்கு முக்கிய காரணம் யாரோ,
அவரும் குழுவில் ஓர் அங்கம். அவரும் இருந்தால்தான் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று பிந்தைய விளக்கம். காயல்பட்டினம் ஒரு சிலருக்கு விளையாட்டு மைதானம். கேள்விகள் கேட்கக் கூடாது. ஆட்டத்தை மட்டும் ரசிக்க வேண்டும். (?)
ஆங்கிலத்தில் Elephant in the room என்று ஒரு நேர் சொற்பொருளாகாத மரபுக்கூறு (Metaphorical Idiom) உண்டு. அந்த மரபுக்கூறுக்கு - ஒரு
நிதர்சன உண்மை கண்டுகொள்ளப்படாமலும், எதிர்கொள்ளப்படாமலும் இருப்பது என்று பொருள். பிப்ரவரி 27, 2013 அன்று வெளியிடப்பட்ட சமாதானக் குழுவின் பரிந்துரைகளும் அந்த நிலையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தனது பரிந்துரையின் துவக்கத்தில் பிரச்சனைகளாக அடையாளம் காட்டப்பட்ட
நகராட்சி தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உறவு,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிலை,
ஊடகங்களின் செயல்பாடு,
தனி நபர்களின் குறுக்கீடு
ஆகிய நான்கில், மூன்று அம்சங்களுக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்தி, தனது பரிந்துரையை சமாதான குழு வழங்கியுள்ளது. முக்கிய மற்றும் தலையாய பிரச்சனையான தனி நபர் குறுக்கீடு - முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அணுகப்பட்டுள்ளது. இதே அணுகுமுறைதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பும் கையாளப்பட்டது. அதன் விளைவுதான் - அதே பிரச்சனைகள், அதே நபர் மூலம் மீண்டும் தற்போது திரும்பியுள்ள சூழல்.
மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 - நகர்மன்றத் தலைவரையும், உறுப்பினர்களையும் சரி சமமாகப் பார்க்கவில்லை. நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பெருவாரியான ஆதரவு அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கூறும் அச்சட்டம், கூட்டங்களில் எழும் ஒழுங்கு பிரச்சனைகளில் (Points of order) நகர்மன்றத் தலைவரின் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.
தலைவருக்கான உரிமைகள் என்னென்ன என்பதை நகராட்சிகள் சட்டம் - பிரிவுகள் 13, 13B, 14, 18 உட்பட பல பிரிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், நகராட்சிகளின் சட்டம் - பிரிவு 19, தலைவருக்கும், நிர்வாக அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ள தனி உரிமைகளில் மன்றம்
குறிக்கிட அனுமதி இல்லை என்றும் தெளிவுற கூறுகிறது.
அது தவிர, தனிப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்புகளும், அதிகாரங்களும் என்னென்ன என்பதையும் நகராட்சிகளின் சட்டம் பிரிவு 20
தெளிவுபடுத்துகிறது.
சமாதானக் குழு நகர்மன்ற அங்கத்தினருக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளில் துவக்கமாக, நகராட்சி சட்ட விதிகளை உணர்ந்து தலைவரும்,
உறுப்பினர்களும் செயல்படவேண்டும் என பரிந்துரைத்துவிட்டு, இந்திய அரசிய சாசனத்திற்கு புறம்பாக - ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில், 12
பேர் கொண்ட புதிய அதிகார மையத்தை உருவாக்கவும் பரிந்துரை செய்கிறது. அப்படியெனில் தேர்தல்கள் எதற்கு?
தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் கூற, அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற அங்கத்தினர்
கடமைபட்டவர்கள். ஆனால், மக்கள் பிரதிநிதிகளை - அசாதாரண சூழலில் உருவான ஒரு குழு உருவாக்கும் மற்றொரு குழு கட்டுப்படுத்தும் என
எதிர்பார்ப்பது சட்டத்தோடு விளையாடும் ஒரு செயல்.
“வெறும் பரிந்துரைதான்... கட்டுப்படுவது அவசியம் இல்லை” என விளக்கங்கள் கூறினாலும், பரிந்துரை ஆவணத்தின் இறுதியில் (அனைவருக்கும் பொதுவாக),
இந்த யோசனைகளை ஏற்று நடப்பவர்களுக்கு ஊரின் அனைத்து ஜமாஅத்தினரும், சர்வ சமய அமைப்புகளும், பொதுமக்களும்
முழு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்
என்று கூறியிருப்பதை, இந்தப் பரிந்துரைகளை - பல நியாயமான காரணங்களுக்காக - முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள முடியும்.
சமாதானக் குழுவின் - ஊடகங்கள் குறித்த பரிந்துரைகள் பெருமளவில் விவாதிக்கக் கூடியதாக இல்லை. இருப்பினும், இணையதளங்களும் இந்திய
அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே. அவை குறித்த தீர்வுகளும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்கவேண்டும் என்பதனையும் மறந்து விடக்கூடாது.
நகராட்சி நடவடிக்கைகளில் யாரேனும் தவறு செய்வதாக அறிந்தால் அவர்களை அணுகி, நளினமாக உண்மையை உணர்த்தி, அனைவரையும் ஊரின் நலனில் தன்னலம் கருதாமல் ஈடுபடச் செய்ய முயற்சிக்கும் பணியில் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்ற சமாதானக் குழுவின் பரிந்துரையானது - ஊடகங்கள் தங்கள் எல்லையைத் தாண்டி செயல்படக் கூறும் பரிந்துரை. இது, பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. மாறாக, புதிய பிரச்சனைகளைத்தான் உருவாக்கும். ஊடகங்களின் கடமை செய்திகள் உண்மையா என ஊர்ஜிதம் செய்து வெளியிடுவதே.
சமாதானக் குழுவின் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை குறித்த பரிந்துரைகள் மேலோட்டமாக வரவேற்கப்பட வேண்டியவை. மாற்றங்கள்
மேலோட்டமாக மட்டும் இல்லாமல், முழுமையானதாகவும், ஆழமானதாகவும் இருத்தல் வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளாக சில வணிகர்கள் / வணிகக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இவ்வமைப்பு செயல்பட்டு வருவதிலிருந்து முற்றிலும் விடுபடவேண்டும்.
இறுதியாக, சமாதானக் குழுவின் முயற்சி வரவேற்கத்தக்கது. இதில் ஈடுப்பட்டுள்ள பலர், பல சமூக நலக் காரியங்களில் தங்களை முழுமையாக
ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்கள். அவர்களின் பரிந்துரைகள் முழுமையாக நிராகரிக்கத்தக்கவை அல்ல என்றாலும், முழுமையாக
ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் அல்ல. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள பரிந்துரைகளை துவக்க ஆவணமாக எடுத்துக்கொண்டு, பிற முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பிரச்சனைக்கான மூல காரணியை நேரடியாக எதிர்கொள்ளாமால், ஐந்தாண்டுகளுக்கு முன் செய்த அதே தவறை மீண்டும் செய்ய வேண்டுமா?
இந்த கேள்விக்கான விடையை - இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் காண வேண்டிய தருணம் இது! |