மினமாட்டா என்பது ஜப்பானில் மீன் தொழில் மேலோங்கிய ஒரு சிறிய கிராமம். அங்கு 1908ஆம் ஆண்டு Chisso Corporation என்ற தொழிற்சாலை நிறுவப்பட்டது. துவக்கத்தில் நைட்ரஜன் (Nitrogen) போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டது. 1932ஆம் ஆண்டு முதல் Acetaldehyde என்ற திரவத்தை Mercury கொண்டு Chisso தயாரிக்கத் துவங்கியது.
ஊரில் பலர் அந்நிறுவனத்தில் சாதாரண வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அதனால் அக்கிராம மக்கள் தம் வாழ்க்கைத் தரத்தில் உயர்வும் கண்டனர்.
1950களில் நிலமை மாறியது. ஊரில் திடீரென புது விதமான நோய் தோன்றத் துவங்கியது. பிற்காலங்களில் - அந்த நோய், அந்த ஊரின் பெயரில் ‘மினமாட்டா நோய்’ என்றே பரவலாக அழைக்கப்பட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலின் நரம்பு அமைப்பு பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரித்தனர். அங்கு இருந்த பூனைகள் பைத்தியம் பிடித்தது போல் ஓடித்திரிந்து உயிர் விட்டன. பலரது கண், உதடு, கால் போன்றவை பாதிக்கப்பட்டன. பலர் தங்களையும் அறியாமல் உரக்க சப்தமிடத் துவங்கினர். அதனால் அவர்கள் பைத்தியம் என் முத்திரை குத்தப்பட்டனர்.
1959ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், நோய்களுக்குக் காரணம் Chisso நிறுவனத்தின் Mercury என அறிவித்தது. இந்த அறிக்கைக்குப் பின் எதிர்ப்புகள் கிளம்பின. ஊரே கொந்தளித்தபோதும், Chisso நிறுவனம் மினமாட்டாவில் ஏற்பட்ட பாதிப்புகளில் அதன் பங்கு உள்ளது என ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களை Chisso நிறுவனம் பணிய வைத்தது. சிலர் சிறு தொகை பெற்றுக்கொண்டு தாங்கள் பிற்காலங்களில் நஷ்டஈடு கேட்கமாட்டோம் என கையெழுத்திட்டனர். Chisso நிறுவனத்தைப் பொருத்த வரை, பாதுகாப்பான முறையில் தொழிற்சாலைக் கழிவை வெளியேற்றுவதை விட மீனவர்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பது சிக்கனமாக தெரிந்தது.
1968ஆம் ஆண்டு தயாரிப்பு முறை பழமை ஆன காரணத்திற்காக Mercury பயன்படுத்துவதை நிறுத்தி, அந்நிறுவனம் வேறு முறைக்கு மாறியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1932 முதல் 1968 வரை - Chisso நிறுவனம் கடலினை Mercury கொண்டு மாசுப்படுத்தியதே ஊரில் ஏற்பட்ட நோய்களுக்குக் காரணம் என நீதிமன்றம் அறிவித்தது. Mercuryயின் மற்றொரு வடிவமான Methyl Mercury மீன்களுக்குள் சென்று, அது பின்னர் உணவாக மனித உடலுக்குள் சென்றுள்ளது.
நீதிமன்றம் மார்ச் 20, 1973 அன்று வழங்கிய அத்தீர்ப்பின் சாராம்சம்...
... ஓர் இரசாயன தொழிற்சாலை கழிவு நீரை வெளியேற்றும்போது மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்... அக்கழிவை ஆய்வுசெய்து, அதில் என்ன ஆபத்தான பொருட்கள் கலந்துள்ளன என அறியவேண்டும்... அதனால் மிருகங்களுக்கு, தாவரங்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என அறியவேண்டும்... ஆபத்து உண்டு என அறியப்பட்டால் உடனடியாக தொழிற்சாலை செயல்பாடுகளை தானாகவே நிறுத்தி ஆராயவேண்டும்... ஒரு காலமும் அருகில் உள்ள மக்களின் உயிர் மற்றும் உடல் நலனையும் மீறி எந்த தொழிற்சாலையும் நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது...
நிறுவனத்தினர் Acetaldehyde கழிவினை எந்தவித அக்கறையும் இன்றி கடலுக்கு விட்டிருக்கிறார்கள்... அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசு அளவு இருந்தாலும், பிற நிறுவனங்களை விட சிறந்த முறையில் கழிவை சுத்திகரித்தாலும், கவனக்குறைவுக்கான தண்டனையில் இருந்து நிறுவனத்தினர் தப்ப முடியாது...
இதுவே அந்த நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்.
ஜப்பானில் உள்ள Chisso நிறுவனத்தின் அணுகுமுறையும், செயல்பாடும் காயல்பட்டினத்தில் உள்ள DCW தொழிற்சாலையின் அணுகுமுறையையும், செயல்பாட்டையும் நினைவுபடுத்துவதாகவே உள்ளது என்றால் அது மிகையாகாது.
ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழிற்சாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் அத்தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அரசு கஜானாவிற்கு வரிகள் மூலம் வருமானம் பெருகுகிறது. இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில், இவை தவிர பிற மறுக்கமுடியாத உண்மைகளும் உள்ளன என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.
ஒரு தொழிற்சாலையின் தரம் - அது ஈட்டும் வருமானத்திலோ, அது தயார் செய்யும் பொருட்களின் முக்கியத்துவத்திலோ மட்டும் அல்ல. மாறாக, அத்தொழிற்சாலை அனைத்து வகைகளிலும் தனது செயல்பாடுகளை எவ்வாறு நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் அமைத்துக்கொள்கிறது என்பதிலும்தான் உள்ளது. இதில், தான் அமைந்திருக்கும் பகுதியின் சுற்றுச்சூழலை அத்தொழிற்சாலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதுவும் அடங்கும்.
காயல்பட்டினத்தில் உற்பத்தியைத் துவங்கிய காலம் முதல் இதுகாலம் வரை DCW தொழிற்சாலை, சுற்றுப்புறசூழலை எந்த வகையிலும் பேணவில்லை.
ஆரம்ப கால Chlorine வாய்வு கசிவுகள், இன்று வரை தொடரும் கடலில் அமில மாசு கலப்பு போன்ற பிரச்சினைகளை மறுத்தும், மழுப்பியுமே DCW தொழிற்சாலை பதில் கூறிவந்துள்ளது.
ஒரு வேதியல் தொழிற்சாலை தான் விரும்பினால், அதற்காக செலவு செய்ய முடிவு செய்தால் - மாசுவினை போதிய அளவில் கட்டுபடுத்த நிச்சயம் இயலும். தொழிற்சாலையின் லாபத்தை முன்னரும், அத்தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்வினை பின்னரும் வைத்து செயல்படும் தொழிற்சாலைகள் அந்த மாசுவினைக் கட்டுப்படுத்த முழு மனதுடன் முயற்சியை செய்வதில்லை. DCW தொழிற்சாலையும் அவ்வகையை சார்ந்த தொழிற்சாலையே.
காயல்பட்டினத்தில் இன்னொரு மினமாட்டாவோ, இன்னொரு போபாலோ நிகழ்வதற்கு முன்னர் மக்கள் விழித்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.
DCW நிறுவனத்தின் 50 ஆண்டு கால செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்படாமல், அரசாங்கம் - இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, நவம்பர் 29 அன்று காயல்பட்டினத்தில் நடைபெறும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் - நீண்ட, நெடிய பயணத்தின் முதல் அடிகளே!
ஜப்பானில் மினமாட்டா மக்கள் பெற்ற தீர்ப்பு நமக்கு தரும் பாடம்: நீதி கிடைக்க காலம் ஆகலாம்; எனினும் என்றாவது ஒரு நாள் அது கிடைத்தே தீரும்! |