தமிழக அரசின் மொத்த ஆண்டு வருவாயில் பெரும்பங்கு மது விற்பனை மூலம் பெறப்படுகிறது. 2012 -13 ஆண்டுக்கான தமிழக நிதி நிலை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மொத்த வருவாய் - சுமார் 100,590 கோடி ரூபாய். அதில் தமிழகத்தின் சொந்த வருவாய் (State's
Own Tax Revenue) - 71,461 கோடி ரூபாய். இதில் மது விற்பனையின் பங்கு - 20,000 கோடி ரூபாய்!
இந்திய அளவில் - அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க
முடியாது. மது விற்பனை மூலம் பெறப்படும் வருவாய் - தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக சில வல்லுனர்கள் கூறுவது
உண்டு. இது ஒரு வேடிக்கையான கருத்தாகும்.
மது விற்பனை/அருந்துதலை பொருத்த வரை - இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக
குஜராத், மணிப்பூர், மிசோராம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவில் - மது விற்பனை/அருந்துவது முழுமையாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில
மாநிலங்களில் - மது அருந்த அனுமதிக்கப்பட்ட வயது கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பஞ்சாபில் அனுமதிக்கப்பட்ட வயது 25.
ஆந்திராவில் அனுமதிக்கப்பட்ட வயது 18. தமிழகத்தில் இது 21.
முழுமையான மதுவிலக்கு தமிழகத்தில் பலமுறை அறிவிக்கப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 1937 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில்
- 1971-74, 1981-87 மற்றும் 1990-91 ஆகிய ஆண்டுகளை தவிர்த்து, பிற ஆண்டுகளில் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு அமலில் இருந்தது.
முழு மதுவிலக்கு மாநிலத்தில் அமலில் இருந்த காலகட்டத்தில் - கள்ளச் சாராயத்தை அருந்தி பலர் இறந்ததைக் காரணங்காட்டி, மது விற்பனை
மாநிலத்தில் பிறகு அனுமதிக்கப்பட்டது.
1983ஆம் ஆண்டு, மொத்த மது விற்பனைக்கு என தமிழக அரசால் துவக்கப்பட்ட டாஸ்மாக் நிறுவனம் [TAMIL NADU STATE MARKETING
CORPORATION LIMITED (TASMAC)] - தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 7000 சாராயக் கடைகளை நடத்துகிறது. ஒரு தனியார் நிறுவனம் -
எவ்வாறு தனது வளர்ச்சியைத் திட்டமிடுமோ (புதிய கடைகள் திறப்பு, அதிக விற்பனை) அது போல - டாஸ்மாக் நிறுவனமும் இலக்குகள்
நிர்ணயித்து செயல்படுகிறது.
அரசாங்கங்களை பொருத்த வரை - எவ்வாறு சிகரட் போன்ற அடிமையாக்கும் பொருட்களுக்கு வரி உயர்த்தி - அதிக வருமானம் ஈட்ட முயற்சி
செய்கின்றனவோ, அது போல - மது விற்பனையையும், அதன் மீதான வரியையும் அவ்வப்போது உயர்த்தி - அதிக வருமானம் ஈட்ட முயற்சி
செய்கிறது. அரசாங்களுக்கு இது எளிதான வழி.
புகைப் பழக்கம் - புற்றுநோயில் முடியும் ; மது பழக்கம் - குடும்பத்தை அழிக்கும் என மேலோட்டமாக விளம்பரங்களைச் செய்யும் தமிழக
அரசாங்கம், இவ்வாண்டு - மது அருந்துதலில் உள்ள ஆபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த - ஒதுக்கியுள்ள தொகை 1 கோடி ரூபாய். ஆம், 1
கோடி ரூபாய்தான். இத்தொகையில் ஒரு பூஜ்யமும் தவறாக விடப்படவில்லை. மது விற்பனை மூலம் தமிழக அரசு ஓர் ஆண்டில் பெறும் வருமானம்
20,000 கோடி ரூபாய். ஆம் - 2 க்கு பிறகு நான்கு பூஜ்யங்கள்.
மது விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி - ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறதா? அதுவும் இல்லை. மதுப் பழக்கத்தில்
அதிகம் பாதிக்கப்படுவோர் - நடுத்தர மற்றும் பொருளாதரத்தில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களே. அதுபோன்ற மக்களின் குறைந்த வருமானத்தை
மதுவுக்கு செலவு செய்ய செய்து - அதுமூலம் பெறும் - பெரும் வருவாய் மூலம், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள அதே மக்களுக்கு -
கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் இலவசங்களை அரசாங்கங்கள் அள்ளி வீசுகின்றன.
நடப்பாண்டில் - எடுத்துக்காட்டாக ஃபேன், மிக்சி, கிரைண்டர் போன்ற இலவசங்களுக்கு அரசு ஒதுக்கிய தொகை 1250 கோடி ரூபாய். இலவச ௦- சூரிய
ஒளியில் இயங்கும் வீடுகள் கட்ட - ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 1080 கோடி. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 489 கோடி ரூபாய் இலவசம்,
மணப்பெண்களுக்கு தங்கத் தாலி வகைக்கு - 514 கோடி ரூபாய் இலவசம், இலவச பள்ளி சீருடை வகைக்கு 330 கோடி ரூபாய், இலவச பஸ் பாஸ்
- 324 கோடி ரூபாய், இலவச ஆடு விநியோகத்திற்கு 188 கோடி ரூபாய், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வகைக்கு 188 கோடி ரூபாய், இலவச
புடவை/வேஷ்டி வகைக்கு 269 கோடி ரூபாய். பட்டியல் மிக நீளம்.
ஒருபுறம் மக்களை மதுவுக்கு அடிமையாக்கும் செயல். மறுபுறம் - அதன் மூலம் பெறப்படும் வருவாயின் பெரும் உதவிகொண்டு மக்களை -
இலவசங்களுக்கு அடிமையாக்கும் செயல். இந்த பொருளாதார வளர்ச்சி வழிமுறை மூலம் எவ்வாறு வருங்காலத்தில் வலுவான தமிழகத்தை
உருவாக்குவது?
பொதுவாகவே அரசுகள் மக்கள் நல அரசுகளாத்தான் செயல்பட வேண்டும். ஆனால் மதுவினால் குடிமக்களின் உடல் நலம் கெடுவதோடு
குற்றச்செயல்களும் பெருகுகின்றன. மக்கள் குடிகாரர்களாகவும், குற்றவாளிகளாகவும், நோயாளிகளாகவும் மாறுவதைப்பற்றி எக்கவலையும் படாமல்
- களஞ்சியத்திற்கு காசு வந்தால் சரி என்பது ஒரு நல அரசிற்கு அழகல்ல.
தமிழகத்தைப் பொறுத்தவரை மதுவிலக்கை - பெரிய கட்சிகளில் - பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே ஆதரிக்கிறது. இதர கட்சிகள் - மது
விற்பனையை - நேரடியாகவோ, மறைமுகமாகவோ - பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும் அம்சமாக ஏற்றுக்கொண்டுள்ளன.
இது எவ்வாறு ஒரு தவறான அணுகுமுறை என்பதற்கு குஜராத் ஓர் சிறந்த உதாரணம். தமிழகம் போல - இந்தியாவில் மிக அதிக பொருளாதார
வளர்ச்சி கண்டுள்ள மாநிலங்களில் ஒன்று குஜராத். மது விற்பனை மூலம் குஜராத் பெறும் வருமானம் - 0 ரூபாய். ஆம், ஒரு ரூபாயும் அல்ல.
அங்கு மது விற்பனையும் கிடையாது, இலவசங்களும் கிடையாது.
தமிழக பொருளாதாரம் தற்போது (மது விற்பனையைப் முதன்மையாக கொண்டு) காணும் வளர்ச்சி, அது ஏற்படுத்தும் - சமுதாயத் தாக்கங்களால்
(குடி போதைக்கு அடிமை, இலவசங்களுக்கு அடிமை) நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்பதில் நியாயமான சந்தேகங்கள் உள்ளன. இப்போக்கில்
உள்ள ஆபத்துகளை உணர்ந்து - அக்கறையுள்ள கட்சிகளும், பொது நல அமைப்புகளும் - தமிழக பொருளாதாரத்தை போதைக்கு அடிமையாகியுள்ள
நிலையில் இருந்து, தெளிவான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.
|