காயல்பட்டினம் நகராட்சிக்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வாகி நான்கு மாதங்கள் கழிந்துவிட்டன. ஒரு நகர்மன்றத்தின் நான்கு மாத
காலத்தின் செயல்பாடுகள் அடிப்படையில் அது குறித்த கருத்துக்கள் கூறுவதென்பது சாத்தியமில்லை என்றாலும், இதுவரை நடந்தவற்றை கருத்தில்
எடுத்துக்கொண்டு - எஞ்சியுள்ள காலங்களில் நாம் எவ்வாறு முன்தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்று சிந்திக்க/திட்டமிட போதுமான தகவல்களும்,
சம்பவங்களும் உள்ளன.
கடந்த (2011) அக்டோபர் 25 அன்று பதவி ஏற்ற புதிய நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் - நகர்மன்ற செயல்பாடுகளில் மிகுந்த
ஆர்வமும், அக்கறையும் கொண்டுள்ளனர் என்பது உண்மை.
இந்திய அரசியல் சாசனம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் - மாதச் சம்பளம் மற்றும் பல சலுகைகள் வழங்கி -
தங்கள் பணிகளை செவ்வனே செய்திட உதவிகள் பல செய்துவருகிறது. ஆனால் ஒரு நேர்மையான உள்ளாட்சி மன்ற தலைவர் மற்றும்
உறுப்பினர்களுக்கு - மாதாந்திர நகர்மன்ற கூட்டத்திற்கு வந்தால் வழங்கப்படும் 500 ரூபாய் தவிர - அரசு தரப்பிலிருந்து எவ்விதமான ஊதியமோ
சலுகைகளோ வழங்கப்படுவதில்லை.
இருப்பினும், நகர்மன்றம் இயங்கும் ஏறத்தாழ எல்லா நாட்களும் நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் நகர்மன்றத்திற்கு வருகை
புரிகின்றனர்; தங்கள் பணிகளையும் ஆர்வத்துடன் மேற்கொள்கின்றனர். மேலும், அவர்கள் மேற்கொள்ளும் புதிய திட்டங்கள், புதிய அணுகுமுறை
ஆகியவை மக்களிடம் பரவலாக வரவேற்பினையும் பெற்றுள்ளது.
புதிதாக நகர்மன்றத்தில் நுழைந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் - இருவர் தவிர - அனைவரும் முதல் முறையாக அங்கம் வகிப்பவர்கள். இதுவரையிலான
நகர்மன்ற நடப்புகளில் - மக்களால் தேர்வு செய்யப்பட்ட அங்கத்தினரின் செயல்பாடுகளில் ஏதேனும் சில குறைகள் இருப்பின், இப்பொறுப்பில்
போதிய முன்அனுபவம் இல்லாத காரணம் என்றுகூட சொல்லலாம். இருப்பினும், இதே காரணம் அடுத்த நான்கு மாதங்கள் கழித்தும் கூறப்பட்டால்,
அதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இரண்டாம் நிலை நகராட்சியாக ஆகஸ்ட் 2010 இல் தரம் உயர்த்தப்பட்ட காயல்பட்டினம் நகராட்சிக்கு - அலுவலர்களையும், ஊழியர்களையும்
வழிநடத்த - சட்டவிதிகள்படி ஆணையர் நியமிக்கப்படவேண்டும். ஆனால் தமிழக அரசோ நகராட்சி பொறியாளர்களாக (MUNICIPAL ENGINEER)
பணிப்புரிந்தவர்களையே, (ஆணையர்கள் பற்றாக்குறையினால்), தற்காலிக நகராட்சி ஆணையர்களாக (COMMISSIONER IN-CHARGE) நியமனம்
செய்கிறது. தற்போது காயல்பட்டினம் நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவரும் நகராட்சி பொறியாளரே. இவருக்கு முன்னர் சில மாதங்கள்
பொறுப்பில் இருந்தவரும் - நகராட்சி பொறியாளரே. ஆணையர் வரிசையில் (COMMISSIONER CADRE) உள்ள அலுவலர்கள் ஆணையர்களாக
நியமிக்கப்படாததால் நகர்மன்ற சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.
நகர்மன்ற சேவைகள் திருப்திகரமாக அமைய நகர்மன்ற அலுவலர்களின் செயல்பாடும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியம். காயல்பட்டினம்
நகர்மன்றத்தின் வருமானத்தில் (அரசு உதவிகள் தவிர்த்து) - சுமார் 40 சதவீதம் - நகர்மன்ற ஊழியர்கள் வகைக்கே செல்கிறது (மாதம் சுமார் 4
லட்சம் சம்பள வகைக்கு; பென்ஷன் போன்ற சலுகைகள் தனி). போதிய ஊழியர்கள் நகர்மன்றத்திற்கு அரசினால் நியமிக்கப்படவில்லை என்பது ஒரு
புறம் இருக்க, இருக்கும் அலுவலர்களில் பலர் தங்கள் பொறுப்பிலும், கடமையிலும் முழு ஈடுபாடு காட்டுவதில்லை என்பது சேவைகளுக்காக
அன்றாடும் நகர்மன்றம் செல்லும் பொது மக்களின் பரவலான கருத்து.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு திருநெல்வேலியில் உள்ள நகர்மன்றங்களுக்கான மண்டல மூத்த அதிகாரி ஒருவர்
திடீர் விஜயம் செய்திருக்கிறார். அப்போது பல மாதங்களாக நிரப்பப்படாமல் இருந்த பதிவுப் (ரெஜிஸ்டர்) புத்தகம் ஒன்றினை கண்ட அவர் - நகர்மன்ற
அலுவலர்களை கண்டித்தும் உள்ளார்.
தாள்கள் இல்லாத அலுவலகம் (Paperless Office) என நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் பல கோப்புகளே முறையாக பாதுகாக்கப்படாத
நகர்மன்றமாக காயல்பட்டினம் நகர்மன்றம் பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது என்பது ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி கலந்த உண்மையாகும்.
முந்தைய நகர்மன்றங்களை விட - நடப்பு நகர்மன்றத்தின் செயல்பாடுகள் ஊடகங்கள் மூலம் வெளியுலகுக்கு பரவலாக எடுத்துச் செல்லப்படும் சூழல்
தற்போது இருந்தாலும், நகர்மன்ற விவகாரங்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடாமல் தடுப்பதற்காக ஒரு சிறு கூட்டம் தொடர்ந்து
முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது.
காயல்பட்டணம்.காம் நகர்மன்ற நடப்புகளுக்கு என தனிப்பக்கங்கள் உருவாக்கி, விரிவான தகவல்களை வழங்கிவருகிறது. அண்மையில் -
நகர்மன்றம் குறித்த லஞ்சப் புகார்கள் போன்றவற்றை பெற்று அதற்குரிய அதிகாரிகளிடம் - அந்தப் புகார்களை சேர்ப்பிக்கும் புகார் அறை சேவையைத்
துவக்கியுள்ளது.
அரசு துறை நிறுவனங்களை கண்காணிக்க - அது குறித்த அனைத்து தகவல்களையும் பெற - 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசினால்
அமல்படுத்தப்பட்ட - தகவல் பெறும் உரிமை சட்டம் (RIGHT TO INFORMATION ACT) வாயிலாக பல தகவல்களை பெற்று கடந்த காலங்களில்
காயல்பட்டணம்.காம் இணையதளம் வெளியிட்டுள்ளது. இருப்பினும் - இச்சட்டம் மூலம் - காயல்பட்டினம் நகர்மன்றத்திடம் தகவல்கள் பெறுவது
திருப்திகரமாக இல்லை.
சமீபத்தில் - காயல்பட்டினம் நகர்மன்ற தகவல் அலுவலரிடம் - காயல்பட்டினம் நகர்மன்ற எல்லையில் உள்ள DCW தொழிற்சாலை - நகராட்சிகள்
சட்டம் பிரிவு 250 படி உரிமம் பெற்றுள்ளதா என்றும், அவ்வாறு பெற்றிருந்தால் அதன் நகலை தரும்படியும் கேட்டிருந்தது. அதற்கு, உரிமம்
பெற்றுள்ளது என பதில் கூறிய அலுவலர், மூன்றாம் நபர் தகவல் (THIRD PARTY INFORMATION) என உரிம நகலை வழங்க மறுத்துவிட்டார். அது
குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நகரில் குடிநீர் வாரியம் (TWAD) மூலம் பெறப்படும் 23 லட்சம் லிட்டர் குடிநீர், எப்போது - குடிநீர் தொட்டிகளில் ஏற்றப்படுகிறது, ஒவ்வொரு
தொட்டியில் இருந்தும் எத்தனை இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது போன்ற தகவல்கள் வினவப்பட்டு இரு மாதங்களுக்கு மேல் ஆகியும் பதில்
இல்லை. இது குறித்தும் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிடப்பட்டவற்றை தவிர - நகர்மன்றம் மூலம் அறிவிக்கப்படும் டெண்டர்களை எடுக்க போதிய ஒப்பந்தக்காரர்கள் இல்லாதது, புரியாத
புதிராக தொடரும் குடிநீர் விநியோக முறை போன்றவை நகர்மன்றம் முன் உள்ள முக்கிய பிரச்சனைகள்.
இந்த நிலையில் உள்ள நகர்மன்றத்தை - நகர்மன்றத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மட்டும் தனியாக சீர்படுத்தி விட முடியாது என்பது நிதர்சனம்.
ஊடகங்களில் பிரச்சனைகளை செய்திகளாக வெளியிடுவதாலும் மட்டும் தீர்வுகள் கிடைத்திடாது. பொது மக்கள்/பொது நல ஆர்வலர்கள்/அமைப்புகள்
(CIVIL SOCIETY) நகர்மன்ற விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
நகர்மன்ற கண்காணிப்பு பணிகளில் முதலாவது மற்றும் முக்கியமான பணி - வலுவான RTI ஆர்வலர்கள் குழுவினை அமைப்பது (RTI COMMITTEE).
இக்குழு மூலம் - நகர்மன்ற தகவல்கள் அனைத்தையும் (வங்கி கணக்கு, ரசீதுகள், காசோலை விநியோகம், டெண்டர் விபரங்கள், செலவு
விபரங்கள், குடிநீர் விநியோக விபரம் போன்றவை) முறையாக பெற்று - அவைகளை துறை வல்லுனர்கள் பார்வைக்கு
எடுத்துச்செல்லலாம்.
இரண்டாவதாக அமைக்கப்படவேண்டிய குழு - பொறியாளர்கள் குழு (ENGINEERS COMMITTEE). இக்குழு நகர்மன்றம் மூலம் வெளியிடப்படும் டெண்டர்
விபரங்களை அலசி - அவைகளில் குறைகள் ஏதும் இருப்பின் - அவைகளை சுட்டிக்காட்டலாம். இப்பொறியாளர் குழு - கட்டிடப்பணி/சாலைப் பணி
போன்றவைகளில் பயன்படுத்தப்படும் பொருள்களின் தரத்தினையும் - தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்று - பரிசோதனை
செய்யலாம்.
மூன்றாவதாக அமைக்கப்படவேண்டிய குழு - தணிக்கையாளர்கள் குழு (AUDITORS COMMITTEE). இக்குழு - தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம்
பெறப்படும் நகர்மன்ற கணக்கு வழக்குகளை பார்வையிட்டு, மேலும் அரசு தணிக்கையாளர்கள் கடந்த காலங்களில் தெரிவித்துள்ள தணிக்கை
ஆட்சேபனைகளையும் (AUDIT OBJECTIONS) பரிசீலித்து - பொது மக்களுக்கு விளக்கம் வழங்கலாம்.
நான்காவதாக அமைக்கப்படவேண்டிய குழு - வழக்கறிஞர்கள் குழு (LEGAL COMMITTEE). இக்குழு - நகர்மன்ற கண்காணிப்பு குழுவிற்கு ஆலோசனை
வழங்கவும், தேவைப்படும்போது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பயன்படும்.
இக்குழுக்களை தவிர, பொது மக்களுக்கும், நகர்மன்ற விசயங்களில் ஆர்வம் ஊட்டப்படவேண்டும். பல நாடுகளில் - மக்களின் வரிப்பணம் மூலம்
வடிவமைக்கப்படும் ஒரு நகராட்சியின் பட்ஜெட் தயாரிப்பில், பொது மக்களும், சமூக அமைப்புகளும் - பலத்த ஆர்வமும், ஈடுபாடும்
காட்டுகின்றனர். காயல்பட்டினம் நகராட்சியின் பட்ஜெட் தயாரிப்பு விசயத்தில் பொது மக்கள் கண்டிப்பாக கலந்தாலோசிக்கப்பட வேண்டும். மேலும் -
மாதாந்திர நகர்மன்ற கூட்டங்களை பொதுமக்கள் / சமூக அமைப்பு பிரதிநிதிகள் பார்வையிட முறையான அறிவிப்பும்/ஏற்பாடும்
மேற்கொள்ளப்படவேண்டும்.
ஒரு நல்ல நகர்மன்றம் உருவாகுவது என்பது - நம் நாட்டைப் பொறுத்தவரை தானாகவே நடந்து விடுவது அல்ல. மாறாக நல்லோர்களால்
உருவாக்கப்படுவதாகும். நல்ல தலைவரையும், உறுப்பினர்களையும் தேர்வு செய்து அனுப்பிவிட்டோம், இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என
அமைதியாக மக்கள் இருந்தால் - அது மெத்தனமான, விவரமறியாத செயலாகவே கருதப்படும். நகர்மன்றத் தலைவர் / உறுப்பினர்கள் /
அலுவலர்கள் ஒத்துழைப்புடனும், பொது மக்கள்/ஆர்வலர்கள்/அமைப்புகள் (CIVIL SOCIETY) கண்காணிப்பிலும் தான் ஒரு சிறந்த நகர்மன்றத்தினை
உருவாக்க முடியும். இதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
RTI ஆர்வலர்கள் குழு, பொறியாளர்கள் குழு, தணிக்கையாளர்கள் குழு மற்றும் வழக்கறிஞர்கள் குழு என நான்கு குழுக்களை விரைவில் அமைத்து,
நகர்மன்ற கண்காணிப்பு பணியினை காலம்தாழ்த்தாமல், உடனடியாக துவக்குவது மிகவும் அவசியம். |