நகரில் ஒரு வழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஜனவரி 22 அன்று - எங்கே செல்கிறது இந்த ஒரு
வழிப்பாதை? என்ற தலைப்பில், காயல்பட்டணம்.காம் தலையங்கம் ஒன்று வெளியிட்டிருந்தது. நகரில் ஒருவழிப்பாதை அமல்படுத்துவதில்
உள்ள பல்வேறு அம்சங்கள் அத்தலையங்கத்தில் விவரிக்கப்பட்டிருந்தது.
ஒருவழிப்பாதை சம்பந்தமாக, டிசம்பர் மாதம் நடந்த பெரிய நெசவு தெரு ஜமாஅத் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கே.டி.எம். தெரு - மெயின் பஜார் மற்றும் ஹாஜி அப்பா தைக்காத் தெரு ஆகிய போக்குவரத்து வழிகளில்
உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி சீர்செய்ய வேண்டுகோள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்தீர்மானத்தினை தொடர்ந்து -
இதுகாலம் வரை, ஒருவழிப்பாதை விஷயத்தில் - பெரிய நெசவு தெரு பாதையைக் குறிப்பிட்டு எந்த முயற்சிகளும் மேற்கொள்ளாதிருந்த தாயிம்பள்ளி
ஜமாஅத்தினர், நகரிலுள்ள ஜமாஅத்துகளிடமிருந்தும், பொது நல அமைப்புகளிடமிருந்தும், நகர்மன்ற உறுப்பினர்களிடமிருந்தும் - ஒருவழிப்பாதை
பெரிய நெசவுத் தெரு வழியாகவே அமையவேண்டும் என கையெழுத்து வாங்கும் முயற்சியில் இறங்கினர்.
இம்முயற்சி குறித்து மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தலையங்கம் - இதனை (கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்பு உள்ளது என பெரிய நெசவு தெரு
ஜமாஅத் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை) இரு ஜமாஅத்தினரும் நேரடியாகப் பேசித் தீர்த்திருக்கலாம் என கருத்து
தெரிவித்திருந்தது.
மேலும், இப்பிரச்சனையில் - நகர் முழுவதும் கையெழுத்து வாங்கும் முயற்சி, பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினருக்கும், நகரின் பிற மக்களுக்கும்
இடையே உள்ள தூரத்தை மேலும் அதிகரிக்கும் என்ற அடிப்படையிலும், சுமுக தீர்வுக்கான வாய்ப்பை மேலும் இது குறைக்கவே செய்யும் என்ற
அடிப்படையிலும், ஒரு தவறான முன்னுதாரணமாக தோன்றுகிறது என அத்தலையங்கத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தலையங்கம் குறித்த விமர்சனங்கள் - இணையதளத்தின் கருத்துக்கள் பகுதி மூலமும், தொலைபேசி மூலமும் - பெறப்பட்டன. மேலும்
தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் - காயல்பட்டணம்.காம் இணையதள செய்தியாளரை நேரடியாக அழைத்தும் - தலையங்கம்
குறித்து வினவியுள்ளனர். தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகிறது என்ற தலையங்க வாசகத்தை ஆட்சேபனைக்குரியதாக அவர்கள்
தெரிவித்துள்ளனர்.
தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகிறது என்ற அவ்வாசகம், வருங்காலங்களில் (ஒரு ஜமாஅத்திற்கும், மற்றொரு ஜமாஅத்திற்கும்)
இதுபோன்று பிரச்சனைகள் ஏற்படுகையில், தற்போது மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து முயற்சி போன்று, அவ்வேளையிலும், ஒரு சாராரின்
நிலையினை ஆதரித்தோ, எதிர்த்தோ - மற்றவர்களும் நகர் முழுக்க கையெழுத்து வாங்க முற்பட - முன் உதாரணமாக ஆகிவிடும் என்ற
அடிப்படையிலேயே பதிவுசெய்யப்பட்டிருந்தது.
மேலும் இதுபோன்ற முயற்சி - மாற்றுக்கருத்தில் உள்ள பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினரையும் தங்கள் நிலைப்பாட்டை இன்னும் கடுமையாக்கிக்
கொள்ள வழிவகுக்கும் என்ற எண்ணத்திலும், சுமூகமாகவும் - விரைவாகவும் ஒருவழிப்பாதை அமையும் வாய்ப்பையும் இது குறைக்கும் என்ற
ஐயத்திலுமே அவ்வாறு அத்தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர, தாயிம்பள்ளி ஜமாஅத்தினரை விமர்சிக்கவேண்டும் என்ற நோக்கில்
அவ்வாசகம் வெளியிடப்படவில்லை என்பதனை இங்கு தெளிவுற தெரிவித்துக் கொள்கிறோம்.
இரு வழிப்போக்குவரத்து கே.டி.எம். தெரு வழியாக அமைந்துள்ளதால் அத்தெரு மக்கள் அனுதினமும் அனுபவித்து வரும் இன்னல்களையும்
சுட்டிக்காட்ட அத்தலையங்கம் மறக்கவில்லை என்பதனையும் நினைவுகூர விரும்புகிறோம்.
சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளில் - ஒரு தனி நபருக்கு எவ்வாறு கருத்துக்கள் கூற உரிமை இருக்குமோ, ஓர் அமைப்புக்கு எவ்வாறு கருத்துக்கள்
கூற உரிமை இருக்குமோ, அது போல் - ஊடகத்திற்கு உள்ள கருத்துரிமை தலையங்கங்கள் வாயிலாக வெளியிடப்படுவது வழமை. சமூக அக்கறை
உள்ள அனைத்து ஊடகங்களிலும் - தலையங்கம் பகுதி என்பது இன்றியமையாத ஓர் அம்சமாகும். அதில் தெரிவிக்கப்படும் - கருத்துக்கள், அந்த
ஊடகத்தை நிர்வகிக்கும் ஆசிரியர்/ஆசிரியர் குழுவின் கருத்துக்களே. அந்த கருத்துக்கள் - இணையதளத்தின் பிற பகுதிகளான செய்திகள், செய்தி
விமர்சனங்கள் போன்றவற்றில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ - எவ்வழியிலும் திணிக்கப்படுவதில்லை.
தலையங்கத்தில் வரும் கருத்துக்களோடு உடன்படவும், மாறுபடவும் அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து,
சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையுடன் தெரிவிக்கப்படும் தரமான கருத்துக்களை அனைவரும் மனந்திறந்த முறையில் அமைதியாக
எதிர்கொண்டு விவாதிக்க முனையும் போதுதான், ஓர் ஆரோக்கியமான, ஜனநாயகமிக்க, சமூகத்தை உருவாக்க முடியும்.
நகரின் பெருவாரியானவர்கள் விரும்புவது போல் - காயல்பட்டணம்.காம் இணையதளமும் - பெரிய நெசவு தெரு வழியாகவே ஒரு வழிப்பாதை -
சுமூகமாகவும் - விரைவாகவும் அமைவதை - வலியுறுத்துகிறது. எங்கே செல்கிறது இந்த ஒருவழிப்பாதை?
என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கத்திலும் பல இடங்களில் அது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்பதனை நினைவு படுத்த
விரும்புகிறோம்.
|