சின்ன நெசவு தெரு, கே.டி.எம். தெரு, மெயின் ரோடு வழியாக காயல்பட்டினத்தில் தற்போது பேருந்து போக்குவரத்து உள்ளது. குறிப்பிட்ட இடங்களில் - வாகன நெருக்கடி ஏற்படுவதால், இப்பாதையில் அவ்வப்போது போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை செய்தியாக பலமுறை காயல்பட்டணம்.காம் வெளியிட்டுள்ளது.
கடந்த காலங்களில் நமதூருக்கு வந்த பொதுவான அடிப்படைகட்டமைப்பு வசதிகளான உள்ளூர் நிதியச்சாலை (L.F. ROAD), கூட்டுக்குடிநீர் திட்டம், கல்விச்சாலைகள், அஞ்சலகம், வங்கி, உயர்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் போன்ற நல்ல பல விஷயங்கள் நல்லுள்ளம் படைத்ததனிநபர்களின், குடும்பங்களின், பொதுமக்களின் முயற்சியால் எவ்வித விவாதமோ, மனக்கசப்போ, பிரிவினையோ, மோதலோ இல்லாமல் சுமுகமாகவும் மனமுவந்துமே கிடைத்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடரும் ஒரு வழிப்பாதை குறித்த விவாதங்கள் இத்தனை தயாளமும், விசாலமும் நிறைந்த நமதூரின் வரலாற்றில் ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விடுமோ என அஞ்சத்தக்க அளவில் உள்ளது.
நமதூரில் தொடர்ந்து அதிகரித்துவரும் வாகனங்களின் எண்ணிக்கை - தற்போதைய பாதையால் நீண்ட நாட்களுக்கு அனைத்து போக்குவரத்தையும் தாங்க இயலாது என்ற உண்மையை அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. இதனை இவ்விவாதத்தில் பங்கேற்கும் அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொண்டும் உள்ளனர். திருசெந்தூரில் இருந்து தூத்துக்குடி - திருநெல்வேலி மார்க்கத்தில் - காயல்பட்டினம் வழியாக - செல்லும் வாகனங்களை எவ்வழியில் அனுப்புவது, இதற்கு மாற்று வழி என்ன என்ற கேள்விக்கான பதிலில்தான் கருத்து வேறுபாடு உள்ளது.
மாற்று வழியாக பிரதானமாக மூன்று தீர்வுகள் பலரால் கூறப்பட்டுள்ளன:
(1) ஓடக்கரை வழியாக, துளிர் பள்ளி அருகில் எல்.எஃப். சாலையை அடைவது
(2) கே.எம்.டி. மருத்துவமனை அருகில் உள்ள ஓடை வழியாக விசாலாட்சி அம்மன் கோயில் தெருவைக் கடந்து - புதிய பேருந்து நிலையத்தை அடைவது
(3) தாயம்பள்ளி முன் திரும்பி, பெரிய நெசவு தெரு - எல்.கே. லெப்பை தம்பி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைவது
இதில் முதல் தீர்வான ஓடக்கரை வழியாக, துளிர் பள்ளி அருகில் எல்.எஃப். சாலையை அடையும் பாதை - இன்னும் பல ஆண்டுகள் கழித்து பிரதான சாலையாக அமையலாம். தற்போது இப்பாதை அமைந்தால் நகரின் பெருவாரியான மக்களுக்கு சிரமமே.
இரண்டாவதாக எடுத்துவைக்கப்பட்டுள்ள தீர்வு - பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினர் சார்பாக - பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்பாதையைப் பயன்படுத்த, இவ்வழியில் பல மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியிருக்கும். உதாரணமாக - ஓடை வழியே புதிய, வலுவான சாலை அமைப்பது... அச்சாலையை அகலப்படுத்த நிலம் ஆர்ஜிதம் செய்வது... விசாலாட்சியம்மன் கோயில் அருகே உள்ள கோயில் - சாலை சந்திப்பு பகுதியின் அகலத்தை விரிவாக்குவது... போன்றவை இப்பாதையை அமல்படுத்தும் முன் செய்ய வேண்டிய காரியங்கள்.
இதில் ஒவ்வொரு அம்சத்திலும் உள்ள சிக்கல்கள் குறித்து அதிக விளக்கம் தேவையில்லை. சுருங்கக்கூறின், இப்பாதையை அமல்படுத்த முற்பட்டால், புதிய பிரச்சனைகள் உருவாகும். அவற்றைத் தீர்ப்பதும் எளிதல்ல.
மூன்றாவதாக பரிசீலனையில் உள்ள பாதை (தாயம்பள்ளி முன் திரும்பி, பெரிய நெசவு தெரு - எல்.கே. லெப்பை தம்பி சாலை வழியாக புதிய பேருந்து நிலையத்தை அடைவது) பலரால், பல ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பெரிய நெசவு தெரு மக்களால் - இப்பாதை பயன்பாடு எதிர்க்கப்பட்டு வருகிறது. அதற்காக பல காரணங்களும் அவர்களால் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.
முதல் காரணம், வேறு வழி இருக்கும்போது ஏன் அதனை பரிசீலிக்கக்கூடாது என்பது. இரண்டாவது காரணம், புதிய போக்குவரத்து நடைமுறை மூலம் ஏற்படும் விளைவுகள் / ஆபத்துக்கள். இதில் - இப்பகுதியில் வாழும் மக்களுக்கு விபத்து ஏற்பட்டால் உயிருக்கு ஆபத்து, குழந்தைகள் விளையாட இடம் இல்லாமை, தெருவில் திருமணம் நடத்த முடியாமை, வழியில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு பாதிப்பு போன்றவை அச்சங்களாக எடுத்து வைக்கப்பட்டுள்ளன.
முன்னரே கூறியபடி, முதல் காரணம் (கே.எம்.டி மருத்துவமனை அருகில் உள்ள ஓடை வழி) அமலுக்கு வர வாய்ப்புகள் - அதில் உள்ள சிக்கல்களால் - மிகவும் குறைவு. இதில் இரண்டாவதாக கூறப்படும் - பல கஷ்டங்கள், பல சாலைகளில் - குறிப்பாக கே.டி.எம். தெரு, சின்ன நெசவு தெரு மற்றும் மெயின் ரோடில் - அங்குள்ள மக்களால் அனுதினமும் அனுபவிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பெருவாரியான பிரச்சனைகளுக்கு - எளிதானதாக இல்லாவிட்டாலும், போதுமான தீர்வுகள் உள்ளன.
பெரிய நெசவு தெரு சார்பாக குறையாக கூறப்பட்ட அம்சங்களில் ஒன்று - நகரின் பெருவாரியான மக்களின் அணுகுமுறை,
ஒரு வழி பாதை விஷயத்தில் - உத்தரவு போடும் வகையிலேயே இருந்தது என்பதும், கலந்தாலோசனையாகக் கூட எக்காலமும் இருந்தது இல்லை என்பதும்தான். இதில் ஓரளவு உண்மையும் உள்ளது. பெரிய நெசவுத் தெரு ஜமாஅத்தினருக்கும், கோமான் தெரு ஜமாஅத்தினருக்கும் - நகரின் பெருவாரியானோர் தங்களை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை என்ற அதிருப்தி உள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அக்குறையைக் கருத்தில் கொண்டே நகர்மன்றதிற்கு புதிதாக தேர்வாகியுள்ள தலைவர் ஐ.ஆபிதா - ஒரு வழிப்பாதை குறித்து, பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினரை அண்மையில் - பெரிய நெசவு தெருவுக்கு நேரடியாக சென்று - சந்தித்தார். அச்சந்திப்பின்போது, அவ்வழியில் வாழும் மக்களின் அச்சங்களைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர், ஒரு வழிப்பாதை குறித்து நகர்மன்றதிற்கு முடிவு செய்யும் அதிகாரம் இல்லை என தெரிவித்தார்.
மேலும் - அதிகாரிகள் வட்டாரத்தில், பெரிய நெசவுத் தெருவே ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த சிறந்தது என முடிவெடுக்கும் தருவாயில் இருப்பதை அறிய முடிவதாகவும், அவ்வாறு அறிவிப்பு வரும் பட்சத்தில் - நகர்மன்றம் மூலம், பாதுகாப்பு / சௌகரிய ஏற்பாடுகள் என்னென்ன சாத்தியமோ, அவையனைத்தையும் நகர்மன்றம் மூலம் தான் செய்து தர ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அச்சங்களுக்கான தீர்வுகளையும் அக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
பாதுகாப்பு கருதி இவ்வழியில் அதிகம் வேகத்தடைகளை உருவாக்குவது, ஆபத்து உண்டாக்கக்கூடிய மின் கம்பங்களையும், மின்கம்பி வடங்களையும் உயர்த்துவது, குழந்தைகள் விளையாட பூங்கா அமைப்பது, வழியில் உள்ள பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகள் செய்வது போன்ற உறுதிமொழிகளை பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினருக்கு அவர் வழங்கினார்.
சுமுகமான முறையில் தீர்வு காண - நகர்மன்றத் தலைவரின் இம்முயற்சி ஒரு துவக்கமாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பை, அத்தெருவின் தலைமை - தவறவிட்டு விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. ஜமாஅத் ஒற்றுமை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், முற்போக்குச் சிந்தனைக்கு பேர்போன இப்பகுதியினரின் இந்த அணுகுமுறை ஏமாற்றத்தையே தருகிறது.
இது ஒரு புறமிருக்க - பெரிய நெசவு தெரு வழியாகத்தான் பேருந்துகள் செல்லவேண்டும் என வலியுறுத்தி, கே.டி.எம். தெருவினை உட்கொண்ட தாயிம்பள்ளி ஜமாஅத் சார்பாக சில முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. கே.டி.எம். தெருவைப் பொருத்த வரை, பிரதான போக்குவரத்து சாலையாக அமைந்ததால் - அத்தெரு மக்கள் இழந்தவை ஏராளம்.
நகரில் சாதாரணமாகக் காணக்கூடிய - தெருக்களில் குழந்தைகள் விளையாடும் காட்சிகள், திருமண வைபவங்கள் - கே.டி.எம் தெரு, சின்ன நெசவு தெரு, மெயின் ரோடு ஆகியவற்றில் காண இயலாது. அது மட்டுமின்றி, விபத்து அச்சம், வாகனங்கள் எழுப்பும் ஒலி, வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு பிரச்சனை போனற் சங்கடங்களையும் பல வருடங்களாக அப்பகுதிகளின் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
இருப்பினும் பெரிய நெசவு தெரு பாதையை ஒரு வழிப்பாதையாக அறிவிக்க வலியுறுத்தி தாயிம்பள்ளி சார்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள - நகரின் பிற ஜமாஅத்துக்கள், பொது நல அமைப்புகளிடம் கையெழுத்து வாங்கும் முயற்சி ஒரு தவறான முன்னுதாரணமாகவே தோன்றுகிறது.
பெரிய நெசவு தெரு ஜமாஅத் சார்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் - கே.டி.எம். தெருவில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவை அகற்றப்பட வேண்டும் என்றும் கூறியிருந்ததே இக்கையெழுத்து வாங்கும் முயற்சிக்கு முக்கிய காரணமாகத் தெரிகிறது. ஒருவழிப்பாதை குறித்த விவாதங்கள் பல காலமாக இருந்து வருகின்றபோதிலும், பெரிய நெசவுத் தெருவைக் குறிப்பிட்டு தாயிம்பள்ளி சார்பில் நகர்முழுக்க ஆதரவு திரட்டுவது இதுவே முதன்முறை. இதனை இரு ஜமாஅத்தினரும் நேரடியாக பேசி தீர்த்திருக்கலாம்.
இந்த கையெழுத்து வாங்கும் முயற்சி ஒரு வழிப்பாதை நகரில் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு பெரும் அளவில் உதவியாக இருக்கும் என்று சொல்ல முடியாது என்பது ஒருபுறமிருக்க, பெரிய நெசவு தெரு ஜமாஅத்தினருக்கும், நகரின் பிற மக்களுக்கும் இடையே உள்ள தூரத்தை மேலும் இது அதிகரிக்கும். சுமுகமான தீர்வுக்கான வாய்ப்பை மேலும் இது குறைக்கவே செய்யும்.
காயல்பட்டினம் நகர்மன்றத்தையும் இப்பிரச்சனையில் தலையிட வைக்க முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு வழிப்பாதைக்கான வழித்தடத்தை நிர்ணயிப்பது நகர்மன்றத்தின் கட்டுப்பாட்டில் கிடையாது. ஆகவே இவ்விஷயத்தில் நகர்மன்றத்தின் தலையீடு புது சட்டச் சிக்கல்களை உருவாக்கும்.
நகர்மன்றம் என்பது ஓர் அரசாங்க அமைப்பு. அது ஒரு தீர்மானம் நிறைவேற்றும்போது - ஆதாரங்கள் அடிப்படையிலும், அதுகுறித்த தீர்மானம்
நிறைவேற்ற அதற்கு உரிமையுள்ளதா என்ற அடிப்படையிலுமே இருக்கவேண்டுமேயன்றி, மக்களின் வெறும் உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கக் கூடாது.
பழைய வழியில் இருந்த வாகன போக்குவரத்து எண்ணிக்கை, அதில் உள்ள பிரச்சனைகள், பரிசீலனைக்கான மாற்றுப் பாதைகள், அவற்றில் உள்ள சாதக - பாதகங்கள் ஆகியவற்றை, அத்துறை சார்ந்த வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்தே - அரசு ஒரு வழிப்பாதையை அறிவிக்கும்.
இதுபோன்ற ஆய்வுகள் செய்யும் வசதி - நகர்மன்றத்திடம் கிடையாது. ஆகவே இவ்விஷயத்தில் நகர்மன்றம் - தலையிடாமல், மாவட்ட நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக செயல்புரிவதே சரியான அணுகுமுறையாக அமையும்.
கடந்த நகர்மன்றக் கூட்டத்தில் - இவ்விஷயம் குறித்து விவாதம் நடந்தபோது, இது நகர்மன்றம் தீர்மானிக்கக்கூடிய பிரச்சனை இல்லை என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகும் - தாயிம்பள்ளி சார்பாக மேற்கொள்ளப்பட்ட கையெழுத்து வேட்டையில் பல உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது.
இப்பிரச்சினையை மேலும் பெரிதாக்க சில சந்தர்ப்பவாதிகள் முயற்சி செய்கின்றனர். அவர்களின் திட்டங்களுக்கு இரையாகாமல் தாயிம்பள்ளி மற்றும் பெரிய நெசவு தெரு ஜமாஅத்துகளின் பெரியவர்கள் ஒரு குழு அமைத்து, சுமுகமான முறையில் - பெரிய நெசவு தெரு வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த, காலந்தாழ்த்தாமல் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு முயற்சிகள் எடுக்காமல் விட்டு - இப்பிரச்சனை விபரீதத்தில் முடிந்தால் - இதில் சம்பந்தப்பட்ட அனைவரின் பொது வாழ்விலும் இது ஒரு கரும்புள்ளியாகவே அமையும்.
|