சுமார் ஒரு மாதத்திற்கு முன் - பி.எம்.ஐ. ஆபிதா சேக், 38 வயது நிரம்பிய, மழலையர் பள்ளிக்கூடம் நடத்தும் ஒரு குடும்பத் தலைவி. பொது விஷயங்களில் ஆர்வமுள்ளவர் என சிலருக்கு மட்டும் அறிமுகமானவர். ஆனால் இன்றோ, அவர், 45,000 மக்கள் வாழும் ஒரு நகர்மன்றத்தின் தலைவியாக பதவியேற்க உள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று கூறினால் அது மிகையாகாது.
கடந்த ஒரு மாதத்தில் வேட்பாளராக ஆபிதா எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். அவற்றை அவர் எதிர்கொண்ட விதம் அவரின் சீரிய சிந்தனையையும்,பக்குவத்தையும், தனது திறமை மீது அவர் கொண்டிருந்த அளவிலா நம்பிக்கையையும் காண்பிக்கிறது. தினமும் காலை முதல் இரவு வரை அவர் மேற்கொண்ட தொய்வில்லா பிரச்சாரம், மக்களை அவர் அணுகிய விதம், நகர பிரச்சனைகளை புரிந்துகொண்டு அவர் வழங்கிய வாக்குறுதிகள் பலரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, பலரையும் சிந்திக்கவும் தூண்டியது.
வேட்பாளராக ஆபிதா எதிர்கொள்ள வேண்டியிருந்தது சாதாரண சக்திகளை அல்ல. 10 ஆண்டுகளுக்கு முன்னர் நகரின் அனைத்து ஜமாஅத்துகள் மற்றும் பொது நல அமைப்புகளின் கூட்டமைப்பாக
துவக்கப்பட்ட காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவை. அவ்வமைப்புடன் இணைந்து செயல்புரிந்தவர்கள் முழு நேர அரசியல்வாதிகள் மற்றும் பலதரப்பட்ட செல்வந்தர்கள். அவர்கள்
எடுத்து வைத்த வாதங்கள், பிரசார முழக்கங்கள், கையாண்ட யுக்திகள் - நிகழ்கால காயலுக்கு எவ்வித தொடர்பும் இல்லாது இருந்தது மட்டுமின்றி, குறுகிய கால இலக்குகள்
அடிப்படையில் அமைந்திருந்தது.
நகர்மன்றத் தலைவியாக ஆபிதாவின் தேர்வு - பலருக்கு, பல பாடங்களைப் புகட்டியிருக்கிறது.
செல்வத்தால் அனைத்தையும் சாதிக்க இயலாது. ஒரு சிலர் விலை போகலாம், மக்கள் அனைவரையும் விலைக்கு வாங்க இயலாது. இது செல்வந்தர்களுக்கு மக்களால்
வழங்கப்பட்ட பாடம்.
இது புதிய காயல். இதில் மூன்றாம் தர அரசியலுக்கு இடம் கிடையாது. இது முழு நேர அரசியல்வாதிகளுக்கு மக்கள் வழங்கிய பாடம்.
சொல்லப்படும் அனைத்தையும் - கண்ணையும் காதையும் மூடிக்கொண்டு - ஏற்றுக்கொள்ள மக்கள் ஆயத்தமாக இல்லை. தோற்றுவிக்கப்பட்டதற்கான காரணம், செய்ய வேண்டிய பணிகள்,
செய்யக்கூடாத பணிகள் - என அனைத்தையும் - மக்கள் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் கணக்கிலெடுக்காது பயணம் மேற்கொண்டிருக்கும் - ஐக்கியப் பேரவை நினைவு
படுத்திக் கொள்ளவில்லை எனில், மக்கள் அவர்களை மறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.இது காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு மக்கள் வழங்கிய பாடம்.
கடந்த இரண்டு மாதங்களாக நாம் கண்டவை, கடுமையான போராட்டத்திற்கு இடையில் ஆபிதா பெற்றுள்ள வெற்றி - ஆகியவற்றை நாம் காணும்போது நிகழ்வுகளை ஒரு மக்கள்
புரட்சி என்றே நம்மை வர்ணிக்க தூண்டுகிறது.
புரட்சிகள் தரும் பாடங்களை நகர்மன்றத் தலைவி ஆபிதாவும் உணர்ந்து செயல்படவேண்டும். ஒரு புரட்சிக்கு பிறகு நமக்கு கிடைக்கும் சமுதாயம் எழுதப்படாத புத்தகம் போன்றது. அது
ஆபிதா என்ற ஒருவரின் புத்தகம் மட்டும் அல்ல! காயல்பட்டினத்தின் எதிர்காலமும் எழுதப்படவேண்டிய புத்தகம். அவசியமான திட்டங்கள், திடமான செயல்பாடுகள்,
பிரயோசனமான பயன்கள் கொண்டே அதன் பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும்.
தனது தேர்தல் நேர வாக்குறுதிகளை மறவாமல், அடுத்த ஐந்து ஆண்டுகள் நகர்மன்ற தலைவியாக ஆபிதா செயல்படும் பட்சத்தில், காயல்பட்டினம் நகர வரலாற்றில்
அவருக்கு என தனி பக்கம் உண்டு. அவ்வாறு செயல்படவில்லை எனில், இன்றைய புரட்சி, காயல் வரலாற்றில் ஒரு மாதம் நீடித்த ஓர் அர்த்தமற்ற திருவிழா என்றே எழுதப்படும். |