சுமார் 3 வார பிரச்சாரத்தின் முடிவில் காயல் நகர மக்கள் அனைவரும் நாளை (அக்டோபர் 17) தேர்தலை சந்திக்கவுள்ளோம். இத்தேர்தலில் - நமது நகர்மன்ற தலைமை பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். 18 வார்ட் உறுப்பினர் பதவிக்கு 86 பேர் போட்டியிடுகின்றனர்.
வாக்குரிமை பெற்றுள்ள அனைத்து காயலர்களும் செய்ய வேண்டியவை சில இதோ:
1. வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து காயல்வாசிகளையும் வாக்களிக்கும்படி வலியுறுத்த வேண்டும். வாக்களிக்க தவறுவதால் ஏற்படும் தீய விளைவுகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
2. வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் இருப்பவர்கள் தங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் தொடர்பு கொண்டு வாக்களிக்க தூண்ட வேண்டும்
3. வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை மாத்திரமல்ல கடமையும் கூட. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நம் அன்றாட வாழ்விற்கான அடிப்படைத்தேவைகளான குடிநீர் வினியோகம்,குப்பை அகற்றுதல்,சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளுக்கும்,அரசின் நலத்திட்டங்களுக்கும் அடிப்படையாக விளங்கப்போவது நகராட்சிதான்.
இவற்றை நிறைவேற்றித்தர நேர்மையான, செயல்படக்கூடிய, சமூக அக்கறையுள்ள மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது நமது கட்டாயக்கடமையாகும். இதில் நாம் கவனக்குறைவாக இருந்து விட்டு வரப்போகும் 5 வருடங்களுக்கு வெறும் சாபமிடுவதிலோ,
குறை கூறுவதிலோ எப்பயனுமில்லை.
4. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கப்பாற்பட்டு - தனவந்தர்களின், செல்வாக்குமிக்கவர்களின் ஆதிக்க கருத்துகளிலிருந்து விடுபட்டு நமது தெரு, நமதூரின் நலனை மட்டும் கருத்தில் கொண்டு வேட்பாளர்களுக்கு நாம் வாக்களிக்க வேண்டும்.
5. தேர்தல் அன்று மட்டும் நமது வீட்டு வேலைகளை விரைவாக முடித்து விட்டு காலையிலேயே வாக்களிக்க செல்வது நல்லது. நமது வாக்குகளை வேறு யாராவது போடுவதை அது காப்பாற்றும். காலையிலே போக இயலாதவர்கள் மாலை 5 மணிக்குள் வாக்களித்து விட வேண்டும். ஒருக்கால் நமது வாக்கை யாராவது கள்ள வாக்களித்திருந்தால் அதை வாக்குச்சாவடி அலுவலரிடம் ஆட்சேபித்து பதிவு செய்ய வேண்டும்.
6. எந்த ஒரு வேட்பாளரும் கையூட்டாகவோ, அன்பளிப்பாகவோ பொருளையோ, பணத்தையோ தந்தால் வாங்காதீர்கள். அது பாவமானதும், மிக இழிவானதாகும். அம்மாதிரி வாக்களிக்க பணம் தருபவர்கள் நம்மை அடுத்த 5 வருடங்களுக்கு சுரண்டி கொள்ளையடிக்க பகிரங்க அனுமதி கேட்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அவர்களை நாம் புறக்கணிப்பதோடு மட்டுமன்றி அது பற்றிய தகவலை தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும், காவல் துறை அலுவலர்களின் தொலை பேசி எண்களுக்கு அச்சமின்றி தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும்.
நல்லதொரு நகர்மன்றமும், நல்லதொரு சமுதாயமும் உருவாக - நன்றாக சிந்தித்து, விருப்பு, வெறுப்பின்றி - தவறாது வாக்களியுங்கள்! |