குடிநீர், சாலைகள், குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை தேவைகளை - அதனை பயன்படுத்தும் மக்களின் விருப்பத்தை அறிந்து செயல்படுத்தவே - இந்திய அரசியல் சாசனத்தில், உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்பட்டன. அந்த மன்றங்களை திறம்பட நிர்வகிக்க -
உறுப்பினர்களையும், தலைவர்களையும் - தேர்வு செய்யும் பொறுப்பையும் இந்திய அரசியல் சாசனம் - வாக்குரிமை மூலம் - மக்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் 17ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதனை மையமாக வைத்து தற்போது காயல்பட்டினத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சம்பவங்கள் மிகவும் வருந்தக்கூடியதாக உள்ளது.
காயல்பட்டினம் நகரமன்ற தலைவர் என்பவரை - நகரில் வாக்குரிமை பெற்றுள்ள 28,000 ஆண், பெண் வாக்காளர்களே - நிர்ணயிக்கவேண்டும். பல கொள்கைகள், அதிலும் பல உட்பிரிவுகள், பகுதி பாகுபாடுகள் என்று உள்ள ஒரு நகரில், ஒருமித்த கருத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்துவது என்பது மிகவும் கடினமான - பக்குவத்துடன் அணுகவேண்டிய அம்சமாகும். இப்பொறுப்பை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை எடுத்துக்கொண்டுள்ளது.
அவ்வாறு ஒருமித்த கருத்தில் வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்த ஐக்கிய பேரவை - அதற்காக அறிவித்த வழிமுறைகள், நகர மக்களிடையே பல கேள்விகளை எழுப்பின. துவக்கத்தில் ஐக்கியப் பேரவை நியமிக்கும் 25 நகர பிரமுகர்கள் தேர்வுக்குழுவில் இடம்பெறுவர் என்றும், அது சர்ச்சையை கிளப்பிய பின், அவர்களுக்கு வாக்குரிமை இருக்காது என்ற விளக்கமும் வழங்கப்பட்டது. மேலும் தேர்வுக்குழுவில் 26 ஜமாஅத்துக்கள் (பள்ளிகள்) இடம்பெறும் என்றும், 18 பொது நல அமைப்புகள் இடம்பெறும் என்றும், ஒவ்வொரு பள்ளிக்கும் இரு பிரதிநிதிகள்/வாக்குகள் என்றும், ஒவ்வொரு பொதுநல அமைப்புக்கும் ஒரு பிரதிநிதி/வாக்கு என்றும் அறிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 26 அன்று ஐக்கியப் பேரவை தேர்வு குழுவின் தேர்தலில் 61 பேர் வாக்களித்துள்ளனர். ஆனால், உண்மையாகவே அந்த 61 பேரும் நகரின் 24,000 முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணங்களை அன்று பிரதிபலித்தார்களா என்பதை நாம் சற்று சிந்திக்கவேண்டும்.
தனியாக ஜமாஅத் இல்லாத பள்ளிகளுக்கு இரு பிரதிநிதிகள், சமீபத்தில் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு இரு பிரதிநிதிகள், விளையாட்டு சங்கங்களுக்கு பிரதிநிதிகள், எந்த ஜமாஅத்துக்கும் தொடர்பில்லாத தொண்டு அமைப்புக்கு பிரதிநிதி. இவ்வாறு வடிவமைக்கப்பட்ட குழு ஒன்றின் முடிவினை மக்களின் முடிவு என்று எப்படி கூற முடியும்?
மேலும், விருப்ப மனுக்களை ஐக்கிய பேரவை, செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 22 வரை பெறும் என துண்டு பிரசுரங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. இடையில் - திடீரென - காயல்பட்டின நகர்மன்ற தலைமை பொறுப்பு பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட பின்பு - பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரி, ஐக்கியப் பேரவையால் எந்த புது அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. வாய்மொழி மூலமும், ஊடகங்கள் மூலமும் செய்தி அறிந்த சில பெண்கள் - ஐக்கியப் பேரவையிடம் தங்கள் விருப்ப மனுவை வழங்கியுள்ளனர்.
விருப்ப மனுவை பெற இறுதி நாளான செப்டம்பர் 22க்கு பிறகு, உடனடியாக, தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜமாஅத்தினருக்கும், பொது நல அமைப்புகளுக்கும் - விருப்ப மனு வழங்கியவர்களின் விபரங்களை ஐக்கியப் பேரவை அனுப்பியிருக்க வேண்டும். செப்டம்பர் 26 அன்று மாலை தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும் என்று - தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, எழுத்து மூலம் அழைப்பு கொடுத்த ஐக்கியப் பேரவை, யார், யார் விருப்ப மனுக்களை சமர்ப்பித்துள்ளனர் என்ற அடிப்படை விபரத்தைக் கூட இணைத்து அனுப்பவில்லை.
செப்டம்பர் 26 அன்று மாலை நடந்த தேர்வுக்குழு கூட்டத்திற்கு வந்த அதன் உறுப்பினர்கள், யார் யார் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார்கள் என்ற
அடிப்படை தகவல் கூட இல்லாத நிலையில், அவர்கள் சார்ந்த ஜமாஅத்/பொது நல அமைப்புகளிடம் எந்த விண்ணப்பதாரரை ஆதரிக்கவேண்டும் என்ற அனுமதியை பெறாமலேயே வந்துள்ளனர். ஆகவே - அன்று ஐக்கியப் பேரவையால் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர், வாக்களித்த 61 தனி நபர்களின் தனிப்பட்ட தேர்வே அன்றி - அவர்கள் சார்ந்த நகர ஜமாஅத்துக்கள் சார்பான தேர்வு என்று கூற இயலாது. மேலும் - அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரே அனைத்து ஜமாஅத்துகளின் தேர்வு என்றும், களத்தில் இருக்கும் பிறர் - ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கின்றனர் என்றும் கூறுவது அறிவுடமையன்று என்பது மட்டுமின்றி ஜனநாயகத்தைக் கேலி செய்வதுமாகும்.
புத்தகம் சின்னத்தில் ஆபிதா என்பவரும், லென்சு கண்ணாடி சின்னத்தில் ஆயிஷா பர்வீன் என்பவரும், மைக்கூடு சின்னத்தில் முஹம்மது இப்ராகிம்
உம்மாள் என்பவரும், பேருந்து சின்னத்தில் முத்து மைமூனத்துல் மிஸ்ரியா என்பவரும், குறுக்காக உள்ள இரு கூர்வாள்கள் சின்னத்தில் ரூத்தம்மால் என்பவரும், மேஜை மின் விசிறி சின்னத்தில் செய்யத் மரியம் என்பவரும் காயல்பட்டினம் நகரமன்ற தலைமை பொறுப்புக்கு போட்டியிடுகின்றனர்.
அவர்கள் அனைவரின் திறமையை நன்றாக ஆராய்ந்து, அவர்களில் சிறந்த ஒருவரை - 28,000 வாக்காளர்கள், 45,000 நகர மக்கள் சார்பாக -
அக்டோபர் 17 அன்று தேர்வு செய்வர். அக்டோபர் 21 அன்று அத்தேர்வின் முடிவு உலகுக்குத் தெரியும். |