நமது முன்னோர் பூமிப்பந்தின் ஒரு கோடியிலிருந்து இக்கடற்கரைப் பட்டினத்திற்கு பல சிரமங்களைப் பொருட்படுத்தாமல் பயணப்பட்டதன் விளைவாக
நாம் இன்று பூர்வீக முஸ்லிம்களாக நடமாடிக்கொண்டிருக்கின்றோம். இதில் நம் முன்னோரின் பங்கை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவர்கள் தங்களது சொந்த நாட்டில் தங்களது குடும்ப நலன்களை மட்டுமே பார்த்துக்கொண்டு ஒரு தன்னலமிக்க வாழ்க்கையை வாழத்
தலைப்பட்டிருந்தால் நமது நிலை என்னவாகியிருக்கும்? அன்று பிறர் விதைத்ததை நாம் இன்று அறுவடை செய்கிறோம்.
நமதூரின் காலச் சக்கரத்தை ஐம்பது வருடங்களுக்குப் பின்னே சுழற்றிச் சென்றால் இன்ற நாம் காணும் காயல்பதியைவிட மிகவும் மாறுபட்டதாக அது
இருக்கும்.
கல்வி, சாலை, குடிநீர், வங்கி, அஞ்சலகம் என பொதுமக்களின் அன்றாட வாழ்வின் இயக்கத்திற்கு தேவையான உள்கட்டுமான விஷயங்களில்
அன்றைய நம்மூர் பெரியவர்கள், செல்வந்தர்கள், படித்தவர்கள் என மிகவும் தாராளமாக கொடைத்தன்மையுடன் செயல்பட்டதால் அவைகளை நாம்
தங்குதடையின்றி தாராளமாக நுகர்ந்துவருகிறோம். இத்தனைக்கும் அன்று செல்வச் செழிப்பு ஓரிருவரிடம் மட்டுமே இருந்தது. ஆனால் பொது
விஷயங்களில் கரிசனையும், தாராள மனமும் அனைவரிடமும் இருந்தன.
ஆனால் இன்று... ?
இன்று சராசரியாக அனைவரிடமும் பணப்புழக்கமிருக்கின்றது. அன்றிருந்ததைப் போல் வணிகத்தை மட்டும் சார்ந்திருக்காமல், கல்வியின் வாயிலாக
பல்வேறு வகையான வேலைவாய்ப்புகளை நமதூர் மக்கள் அடைந்து அனுபவித்து வருகின்றனர். அன்று இலங்கை, ஹாங்காங், வளைகுடா போன்ற
நாடுகளில் பணிபுரிந்த நம் மக்கள். இன்று இப்பூவலகின் எல்லாக் கண்டங்களிலும் பரவியிருக்கின்றனர். சுருங்கக் கூறின், இன்று நாம் ஒரு
பன்னாட்டுச் சமூகம் என்று கூறிக்கொள்ளலாம்.
உண்மை எது எனில் நாம் புறப்பார்வைக்கு மட்டும்தான் பன்னாட்டுச் சமூகம். பன்னாட்டு வாழ்வியல் அனுபவங்களும், பயணங்களும், விரிந்து பரந்த
கல்வி வாய்ப்பும் நம்முடைய சிந்தனையை விரிவாக்கிவிடவில்லை. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் விரவி, பரவி வாழும் முஸ்லிம்
ஊர்களோடு நம்மை நாம் அடையாளப்படுத்திக்கொள்வதில்லை என்பது இதற்கு சாட்சி.
நான், எனது வீடு என்பதைத் தாண்டி சராசரி காயல்வாசி சிந்திப்பதில்லை. நானொரு காயல்வாசி என்கிற எண்ணம் நம்முள் தூக்கலாக
இருக்கின்றதே, அந்த எண்ணத்திற்காகவாது குறைந்தபட்சம் நாம் உண்மையாக இருக்கின்றோமா? நமது வீட்டின் வாசற்படியைத் தாண்டி
வெளியிலுள்ள எந்த ஒரு விஷயத்திற்காகவும் நாம் கவலைப்படுவது மிகக்குறைவு. கல்வி போன்ற விசயங்களில் உதவிப்புரிவதர்க்கு பல
செல்வந்தர்கள் காட்டும் தயக்கம், அலட்சியம் இதற்கு சாட்சி.
ஒட்டுமொத்த ஊர் மக்களையும் குறைகூறுவது நமது நோக்கமல்ல. இத்தலையங்கத்தின் நோக்கம் பெருவாரியான மக்களின் அசிரத்தைப் பற்றி
பேசுவதுதான்.
உலகெங்கும் பரவி உள்ள காயல் நல மன்றங்களின் அரிய பணிகளை நாம் காண்கிறோம். காயல் நகரில் இருந்து பல நல்ல காரியங்களில்
செயல்படும் அமைப்புகளையும் நாம் காண்கிறோம். பொதுப்பணிகளில் தம்மை அர்ப்பணித்து அங்கொன்றும், இங்கொன்றுமாக செயல்படும் தனி
நபர்களையும் நாம் காண்கிறோம். அக்காட்சிகள் நம்மை பெருமிதம் கொள்ள செய்கின்றன. ஆனால் உண்மை என்னவெனில் - அவைகள் யானை
பசிக்கு சோளப்பொரி என்ற பழமொழி போன்றதுதான். இந்த அவலநிலையை மாற்ற வேண்டிய பொறுப்பு நம்மனைவரின் மீதும் உள்ளது. |