பிரச்சனைகள் இல்லாத சமூகங்கள் அரிது. சில சமூகங்கள் முன் சிறு பிரச்சனைகள் இருக்கலாம். சில சமூகங்கள் முன் பெரிய பிரச்சனைகள்
இருக்கலாம். சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை மக்கள் மன்றம் முன் எடுத்துச்செல்லும் மிக பெரிய பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.
ஊடகங்களில் அன்றாடும் வெளியாகும் செய்திகள் மூலமாக இப்பிரச்சனைகள் வெளிக்கொண்டுவரப்படுகின்றன.
வெளியாகும் செய்திகளில் தரமான ஊடகங்கள் தங்கள் சுய கருத்துக்களை திணிப்பதில்லை. நிகழ்வுகள் எவ்வாறு இருந்ததோ, அவ்வாறே
செய்திகளும் பொதுவாக வெளிவரும். செய்திகளோடு, விமர்சனங்களும் கலக்காமல் பார்த்துக்கொள்வது ஊடக நிர்வாகிகளின் முக்கிய பொறுப்புகளில்
ஒன்றாகும்.
சில நேரங்களில் - செய்திகளின் பின்னணியை விளக்கும் விதமாக, ஊடகங்கள் செய்தி விமர்சனங்களும், ஆய்வு கட்டுரைகளும் வெளியிடுவது
உண்டு. அவைகள் செய்திகள் அல்ல; ஊடகப்பார்வையில் செய்தி குறித்த விளக்கங்களே என்பது தெளிவாக இருக்கும். விளக்கம் அல்லது
விமர்சனம் என்ற பெயரில் தங்கள் கருத்தினை திணிக்காமல் பார்த்துக்கொள்வதும் ஊடக நிர்வாகிகளின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாகும்.
ஊடகம் என்பது அது உலாவும் சமுதாயத்திலிருந்து சிலரால் பராமரிக்கப்படுபவையே. தனி மனிதருக்கு எவ்வாறு சமூக பிரச்சனைகளில் கருத்துக்கள்
இருக்குமோ, அவ்வாறே ஊடகங்களுக்கும் சமூக பிரச்சனைகளில் தனி கருத்துக்கள் இருக்கும். அவைகளை ஊடகங்கள் தலையங்கள் வாயிலாக
வாசகர்களுக்கு தெளிவுபடுத்தும். செய்திகள் தேர்வுசெய்யப்படுவதிலோ, செய்திகளில் அடங்கிய வார்த்தைகள் மூலமோ - ஒரு தரமான ஊடகத்தால் -
அதன் நிலைப்பாடு திணிக்கப்படுவதில்லை.
ஒரு சமூகம் என்பது சாதாரண மக்களை கொண்டதாகும். செல்வந்தர்களை கொண்டதாகும். பலவிதமான அமைப்புகளை கொண்டதாகும். அரசு
துறைகளை கொண்டதாகும். ஊடகத்திற்கு செய்தியும் இவைகளே. ஊடக வாழ்வில் அன்றாடும் செய்தியாக இருக்கும் அவைகள், சில நேரங்களில்
விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்.
ஒரு பிரச்சனையின் நியாயத்தின் அடிப்படையில் ஊடகங்கள் - அது உலாவரும் சமூகத்தின் அதிகாரவர்கத்தை கேள்விக்கேட்கும் சூழல் ஏற்படலாம்.
அவ்வேளைகளில் - எவ்வித தயக்கம், அச்சம், பாரபட்சமும் இன்றி - எவ்வாறு ஊடகத்தால் உண்மை நிலை வெளிக்கொண்டு வரப்படுகிறது என்பதே - ஊடகங்கள் அவ்வப்போது எழுதும் தேர்வாகும்.
காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் தலையங்கம் பகுதி 2006ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
மூன்றாண்டுகள் தொடர்ந்து வெளிவந்த தலையங்கங்கள் - மே 2009 முதல் நிறுத்தப்பட்டன.
தவிர்க்கமுடியாத
சூழல்களே அதற்கு காரணம்.
தற்போது மீண்டும் தலையங்கம் பகுதி புதுப்பிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் வெளிவந்த தலையங்கங்கள் இனி தமிழில் வெளிவரும்.
தலையங்கங்களை தயாரிக்கும் பொறுப்பினை ஏழு பேர் அடங்கிய இணையதளத்தின் ஆசிரியர் குழு
எடுத்துக்கொண்டுள்ளது.
தலையங்கம் என்பது ஊடகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. ஒரு பிரச்சனை குறித்து சமூகத்தில் பல கருத்துக்கள் நிலவலாம். அக்கருத்துக்களும்
மக்களை சென்றடையும் முகமாக - சமூக ஆர்வலர்கள்/எழுத்தாளர்களுக்கு என எழுத்து மேடை பக்கம்
உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கங்கள் மூலம் - வாரம் ஒருமுறையோ, இருவாரத்திற்கு ஒரு முறையோ, மாதத்திற்கு ஒருமுறையோ - கட்டுரைகள்
வெளியிடப்படும்.
அத்தொடர் கட்டுரைகள் போக, அவ்வப்போது - சிந்தனையாளர்கள்/ஆர்வலர்கள்/எழுத்தாளர்களின் - சிறப்பு கட்டுரைகளையும் தனியாக
வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பதிமூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள காயல்பட்டணம்.காம் இணையதளம் - காயல் நகர மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக தொடர - பல புது அம்சங்களை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது என்பதனையும் இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். |