நகர்மன்றம்: சட்ட வழிமுறைகள்
அனைத்து நகராட்சி சட்ட வழிமுறைகளை காண இங்கு அழுத்தவும் >>
கட்டட அனுமதி குறித்த நகராட்சி சட்ட விதிகள்
ஒரு நகராட்சியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கும், புதுப்பிக்கப்படும் கட்டடத்திற்கும் - நகராட்சியிடம் - கட்டட பணிகளை துவங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதிகள் 197, 198, 199 - இவ்விண்ணப்பங்கள் குறித்த வழிமுறைகளை கூறுகின்றன. பார்க்கவும் கீழே.
அவ்வாறு முறையாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த முடிவினை செயல் அதிகாரி (இரண்டாம் நிலை நகராட்சியில் ஆணையர்) - 30 நாட்களுக்குள் - எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். இது குறித்த வழிமுறைகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதி 200, 201 ஆகியவை விளக்குகின்றன. பார்க்கவும் கீழே. நிராகரிப்பதற்கான காரணங்கள் பிரிவு 203 படி இருக்க்கவேண்டும்.
குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் எந்த பதிலையும் செயல் அதிகாரி தரவில்லை என்றாலோ, அல்லது நிராகரித்து விட்டாலோ விண்ணப்பதாரர் - நகர்மன்றதிற்கு (Council) மனு வழங்கலாம். நகர்மன்றமானது மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் - மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பம் குறித்த - சட்டவிதிகளுக்கு உட்பட்டு - தனது முடிவினை வழங்கவேண்டும். அவ்வாறு தனது (ஏற்பு/மறுப்பு) முடிவை வழங்கவில்லை என்றால் - விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டதாக கருதப்படும். இது குறித்த வழிமுறைகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதி 202-இல் விளக்கப்பட்டுள்ளது. பார்க்கவும் கீழே.
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
பிரிவு 197 - கட்டடங்கள் அமைக்க அல்லது புதுப்பிக்க மனு:
(1) குடிசையில்லாத பிற ஒரு கட்டிடத்தை அமைக்க அல்லது புதுப்பிக்க ஒருவர் கருதினால், அவர்
(a) நிலத்தின் மனையிட வரைப்படத்துடன் (Site Plan) சேர்த்து, அந்த மனையிடத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக
எழுத்துருவிலான விண்ணப்பமொன்றையும்,
(b) தரைப்படம், கட்டட முகப்புத் தோற்றம் மற்றும் அதன் பகுதிகள், கட்டடப் பணிக்கான கட்டுமான அளவுகள்
ஆகியவற்றுடன் சேர்ந்து அப்பணியை நிறைவேற்றுவதற்கு அனுமதி பெறுவதற்காக எழுத்துருவிலான
விண்ணப்பமொன்றையும் ஆணையருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.
விளக்கம்:
இவ்வுட்பிரிவில் கட்டடம் என்பதில் சுவர் அல்லது யாதொரு உயரம் உடைய வேலி பொதுத் தெருவினை ஒட்டியது
உள்ளடங்கும்
(2) 1 ஆம் உட்பிரிவின்படிக் கொடுக்கப்பட்ட ஆவணம் ஒவ்வொன்றும், விதிகளின்படியோ
துணைவிதிகளின்படியோ, தேவைப்படக் கூடிய விவரங்களைக் கொண்டிருந்தாலும், தேவைப்படக்கூடிய
முறையில் தயாரிக்கப்படுதலும் வேண்டும்.
பிரிவு 198 - மனையை முன்னதாகவே ஏற்பு அளிப்பது அவசியமாதல்:
197 வது பிரிவின்படி மனுச் செய்து கொள்வதன் பேரில் செயல் அதிகாரி மனையை ஏற்பளித்தால் அன்றி மற்றப்படி
ஏற்பு அளிக்கும் வரையிலும், ஒரு கட்டடத்தை அமைக்க அல்லது புதுப்பிக்க அனுமதி அளிக்கக்கூடாது.
பிரிவு 199 - அனுமதியின்றி பணி தொடங்கத் தடை:
பணியைச் செய்து முடிப்பதற்காக செயல் அதிகாரி அனுமதி அளித்தாலன்றி, மற்றப்படி அனுமதி அளிக்கிற வரையிலும்
ஒரு கட்டடத்தைக் கட்ட அல்லது புதுப்பிக்கத் தொடங்கக் கூடாது.
பிரிவு 200 - செயல் அதிகாரி ஏற்பளிப்பதை அல்லது நிராகரிப்பதை இந்தக்கால அளவுக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது:
ஒரு மனையை ஏற்பளிக்க 197 வது பிரிவின்படி செய்துக்கொள்ளப்படும் ஒரு மனுவை விதிகள் அல்லது துணை விதிகளின்படி
தேவைப்பட்டுள்ள ஒரு தகவல் அல்லது மேற்கொண்டு தகவலையாவது பெற்றுக்கொண்ட பிறகு முப்பது நாட்களுக்குள்ளாக
செயல் அதிகாரி எழுத்து மூலமான ஆணையின் மூலம் அந்த மனையை ஏற்பளிக்க வேண்டும். அல்லது 203 வது பிரிவில்
கண்டுள்ள காரணங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பலவற்றின் பேரில் அந்த மனையை ஏற்பளிக்காமல் நிராகரிக்க வேண்டும்.
பிரிவு 201 - பணியை நிறைவேற்றுவதற்கு செயல் அதிகாரி இந்த கால அளவுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும், அல்லது மறுக்க வேண்டும் என்பது:
ஒரு பணியை நிறைவேற்ற அனுமதி வேண்டும் என்று 197 வது பிரிவின்படி செய்துகொள்ளப்படும் ஒரு மனுவையாவது
விதிகள் அல்லது துணை விதிகளின்படி வேண்டியுள்ள ஒரு தகவல் அல்லது ஆவணங்கள் அல்லது மேற்கொண்டு தகவல்
அல்லது ஆவணங்களையாவது பெற்றுக்கொண்ட பிறகு முப்பது நாட்களுக்குள் செயல் அதிகாரி எழுத்து மூலமான ஆணை
மூலம் மேற்படி அனுமதியைக் கொடுக்க வேண்டும் அல்லது 203 வது பிரிவில் கண்ட காரணங்களில் ஒன்று அல்லது
பலவற்றின் பேரில் அதைக் கொடுக்காமல் நிராகரிக்க வேண்டும்.
ஆனால், 200 வது பிரிவின்படி மனை ஏற்பளிக்கப்படும் வரையிற் மேற்படி முப்பது நாள் கால அளவைக் கணக்கிடத் தொடங்கக் கூடாது.
பிரிவு 202 - ஏற்பளிப்புச் செய்ய அல்லது அனுமதி அளிக்க அல்லது மறுக்க செயல் அதிகாரி தாமதித்தால் மன்றத்திற்கு தெரிவிப்பது:
(1) நேர்விற்கேற்ப, 200 வது பிரிவில் அல்லது 201 வது பிரிவில் நிச்சயிக்கப்பட்ட கால அளவுக்குள், செயல் அதிகாரி நேர்வுக்கேற்றப்படி கட்டடத்துக்கான மனையை ஏற்பளிக்காவிட்டாலும், நிராகரிக்காவிட்டாலும், ஒரு பணியை நிறைவேற்ற அனுமதி அளிக்காவிட்டாலும், அளிப்பதில்லை என்று நிராகரிக்காவிட்டாலும், மனுதாரர் எழுதிக் கேட்டுக்கொள்வதன் பேரில், மன்றம் அத்தகைய ஏற்பளிப்பு அல்லது அனுமதியை அளிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை எழுத்து மூலமான ஆணையின் மூலம் முடிவு செய்ய கடமைப்பட்டதாகும்.
(2) மேற்சொன்னப்படி எழுத்து மூலமாகக் கேட்டுக்கொண்ட மனு வந்து சேர்ந்தது முதல் ஒரு திங்கட் கால் அளவுக்குள் மன்றம் மேற்கண்ட ஏற்பளிப்பு அல்லது அனுமதியை அளிக்க வேண்டும் அல்லது அளிக்கக்கூடாது என முடிவு செய்யாவிடின் அத்தகைய ஏற்பளிப்பு அல்லது அனுமதி அளிக்கப்பட்டதாக கருதப்படும். அதன் பேரில் மனுதாரர் பணியை நிறைவேற்றத் தொடங்கலாம். ஆனால் இந்த சட்டத்தின் விதிமுறைகளில் எவற்றையாகிலும், அல்லது எந்த சட்டத்தின் கீழ்ச் செய்யப்படும் எவையேனும் விதிகள் அல்லது துணை விதிகளை மீறி அவர் அந்தப் பணியை நிறைவேற்றத் தொடங்கக்கூடாது.
பிரிவு 203 - கட்டடத்திற்கான மனையை ஏற்பளிப்பதை மறுப்பதற்கான அல்லது கட்டடத்தை அமைப்பதற்கோ புதுப்பிப்பதற்கோ அனுமதி கொடுப்பதை மறுப்பதற்கான காரணங்கள்:
ஒரு கட்டடத்தை அமைப்பதற்காவது அல்லது புதுபிப்பதற்காவது ஒரு மனையை ஏற்பளிப்பதில்லை என்றாவது ஒரு கட்டடம் அமைக்க அல்லது புதுப்பிக்க அனுமதி அளிப்பதில்லை என்றாவது கீழ்க்கண்ட காரணங்களின் பேரில் மட்டுமே மறுக்க இயலும். அவையாவன:
(1) கட்டடப் பணியாவது கட்டடப் பணிக்காக மனையைப் பயன்படுத்துவதாவது அல்லது மனையின் வரைபடம், நிலத்தின் வரைபடம், மட்டங்கள் பிரிவுகள் அல்லது விவரக் குறிப்புகளில் கண்டுள்ள விவரங்களில், ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட எந்த விதிமுறைகளிலும் ஏதேனும் ஒரு சட்டத்தின் படி செய்யப்படும் குறிப்பிட்ட எந்த ஒரு ஆணை, விதி, உறுதிமொழி அல்லது துணை விதிக்கு எதிராக இருக்கும் என்பது;
(2) அத்தகைய அனுமதிக்காக செய்து கொள்ளப்படும் மனுவில் விதிகளின்படியாவது அல்லது துணை விதிகளின் படியாவது வேண்டியுள்ள விவரங்கள் அடங்கி இருக்கவில்லை அல்லது வேண்டியுள்ள விதத்தில் அது தயாரிக்கப்படவில்லை என்பது;
(3)
197 வது பிரிவில் சொல்லியுள்ள ஆவணங்களில் எதிலாவது விதிகளில் அல்லது துணை விதிகளில் சொல்லியுள்ளபடி கையெழுத்திடப்படவில்லை என்பது;
(4) விதிகள் அல்லது துணை விதிகளின்படி செயல் அதிகாரியால் கேட்கப்படும் ஒரு தகவல் அல்லது ஆவங்கள் முறைப்படி எடுக்கப்படவில்லை என்பது;
(5) தெருக்கள் அல்லது சாலைகள் 175 வது பிரிவில் சொல்லியுள்ளபடி அமைக்கப்படவில்லை என்பது;
(6) கட்டத் திட்டமிடப்பட்டிருந்த கட்டடம் அரசு அல்லது நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தின் மேல் ஆக்கிரமிப்பாகும் என்பது;
ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கான மனைக்கு ஏற்பளிக்க அல்லது ஒரு கட்டடத்தைக் கட்ட அல்லது புதுப்பிக்க அனுமதியளிக்க செயல் அதிகாரி அல்லது மன்றம் மறுக்கும்போதெல்லாம் அவ்வாறு மறுப்பதற்கான காரணங்களை ஆணை மூலம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
|
Advertisement |
|
|
|
|