செய்தி: மாணவியர் உதவித்தொகை குறித்த ம.சே.கரங்கள் - தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி விவகாரம்! மாவட்ட கல்வி அதிகாரி முன்னிலையில் இக்ராஃ துணையுடன் தீர்வு காணப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை மக்கள் சேவா கரங்கள் நிறுவனர் சகோ. பா.மு.ஜலாலி தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என தெரிகிறது.
காரணம், அவர் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, மாணவியர் கல்வி உதவித்தொகை குறித்த அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியையுடனான விவகாரத்தில், அவர் மேற்கொண்ட முயற்சிகளை இக்ராஃ மேற்கொண்டதாக இச்செய்தியின் எந்தப் பகுதியிலும் குறிப்பிடப்படவில்லை
மாறாக, அவர் செய்த முயற்சிகளையும், அவரது நோக்கங்களையும், மறுபுறம் தலைமையாசிரியை தரப்பில் கூறப்பட்ட நோக்கங்களையும் செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் கூற வரும் குற்றச்சாட்டு:-
தனக்குக் கிடைக்க வேண்டிய நற்பெயரை இக்ராஃ பறித்துவிட்டது என்பதே! ஆனால், இக்ராஃவுக்கு இதை வைத்துதான் பெயர் பெற வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. காரணம், இதையெல்லாம் தாண்டி - நகர மாணவ சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு பல முக்கியமான கல்விப் பணிகளை, மிகுந்த சிரமங்களுக்கிடையிலும் பெரிய அளவில் பல ஆண்டுகளாக இக்ராஃ செயல்படுத்தி வருவதை உள்ளூர் மக்களும், வெளியூர் - வெளிநாடுவாழ் மக்களும் நன்கறிவர்.
இக்ராஃவின் பல்வேறு கல்வி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி (CEO), மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போன்ற அரசுத் துறைகளைச் சார்ந்த பலர் இக்ராஃவின் கல்விச் சேவைகளை வியந்து பாராட்டியதை நேரிலும், செய்திகள் வாயிலாகவும் மக்கள் நன்கறிவர்.
மேலும், இக்ராஃ கல்விச் சங்கம் என்பது ஒரு நபர் சங்கமல்ல! இதில் தலைவர், பல துணைத்தலைவர்கள், செயலாளர்கள், ஏராளமான செயற்குழு உறுப்பினர்கள், பல நூறு உறுப்பினர்கள் என்று முறைப்படியாக செயல்பட்டு வரும் அரசுப் பதிவு செய்யப்பட்ட ஓர் அமைப்பு.
எனவே, இக்ராஃவிற்கென்று ஒரு கோட்பாடு, தொலைநோக்குப் பார்வை, அனைத்து தரப்பினரையும் மதித்து செயலாற்றும் தன்மை, நடுநிலை பிசகாமை போன்றவற்றை அது துவங்கிய காலம் தொட்டு கடைப்பிடித்து வருவதை அனைவரும் நன்கறிவர்.
நகரின் அனைத்துப் பள்ளிகளின் நிர்வாகங்களும், ஆசிரியர் வட்டமும் இக்ராஃவுடன் இணக்கமான தொடர்புடன் இருப்பதையும், இக்ராஃ மேற்கொண்டு வரும் கல்விச் சேவைகளுக்கு அவர்கள் மனப்பூர்வமாக முழு ஒத்துழைப்பளித்து வருவதையும் காண்கிறோம்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்கள் இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களைத் தொடர்புகொண்டு, (மாணவியர் கல்வி உதவித்தொகை தொடர்பாக மக்கள் சேவாக் கரங்கள் அமைப்புடனான) இதுகுறித்த விபரங்களைத் தெரிவித்து, அதில் இக்ராஃ தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக என்னிடம் கூறினார்.
அச்சமயம், இக்ராஃ புற்றுநோய் குறித்த தகவல் சேகரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டுக் கொண்டிருந்த காரணத்தால், உடனடியாக இப்பிரச்சினையைத் தீர்க்கவியலவில்லை. எனவே, ஓரிரு தினங்கள் கழித்து, சகோ. பா.மு.ஜலாலி அவர்களையும், அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியை அவர்களையும் ஒன்றாக வைத்துப் பேசலாம் என்ற எனது எண்ணத்தை இக்ராஃ துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்களிடம் தெரிவித்தேன்.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று மதியம் 3 மணியளவில் அலுவலகத்திலிருந்து உணவருந்த நான் வீடு நோக்கிப் புறப்பட்டபோது, இக்ராஃ துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் - ஏற்கனவே தெரிவித்த பிரச்சினைகள் சம்பந்தமாக பேசுவதற்காக மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு வந்துள்ளதாகவும், அவரும், பள்ளி தலைமையாசிரியையும், பா.மு.ஜலாலீ அவர்களும் அழைத்ததன் பேரில் தான் அங்கே இருப்பதாகவும், என்னை உடனே வருமாறும் கைபேசியில் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நானும் உடனடியாக அங்கு சென்றேன்.
இரு தரப்பு பிரச்சினைகள் குறித்தும் அங்கு பேசப்பட்டது. இதில், இக்ராஃ சார்பாக நடுநிலையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசின் விதிமுறைகள், தற்போது பேணப்படும் முறைகள் குறித்தும் இக்ராஃ சார்பில் கல்வி அதிகாரியிடம் கேட்டு விளக்கம் பெறப்பட்டது.
இறுதியில், இனி வருங்காலங்களில் இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்படுமாறும், பழைய பிரச்சினைகளை அத்தோடு மறந்துவிடுமாறும் இக்ராஃ சார்பாகவும், மாவட்ட கல்வி அதிகாரி அவர்களாலும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அச்சமயத்தில் கூட மாவட்ட கல்வி அதிகாரி அவர்கள் சிரித்துக்கொண்டே ஒரு விஷயத்தை சொன்னார்:
“நான் இந்த காயல்பட்டினம் ஊருக்குள் நுழையும்போது, டிரைவர் சொன்னார்... இந்த ஊரில் காவல் நிலையமே இல்லை என்று! கேட்டு பெருமைப்பட்டேன்... காரணம், இங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் இணக்கமாகவும், ஒற்றுமையுடனும் வாழ்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன்...
அப்படிப்பட்ட உங்கள் ஊரில் என்னை வரவழைக்காமல் நீங்களே இவ்விஷயத்தைத் தீர்த்துக் கொண்டிருக்கலாமே...?” என்று புன்னகையுடன் கூறினார்.
அதன்பிறகு, இதுகுறித்த செய்தியை காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் வெளியிடும் பொருட்டு, இன்று இரவுக்குள் தாங்களே எழுதித் தாருங்கள் என்று சகோ. பா.மு.ஜலாலியிடம் எஸ்.கே.ஸாலிஹ் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுநாள் இச்செய்தி வெளியிடப்படும் வரை அவ்வாறு செய்தியறிக்கை எதுவும் எழுதித் தரவில்லை என்றும், எனவே நடந்தவற்றை கவனித்ததன் அடிப்படையில் நானே செய்தியை வெளியிட்டு விட்டேன் என்றும் எஸ்.கே.ஸாலிஹ் என்னிடம் தெரிவித்தார்.
இதுவே நடைபெற்ற சம்பவம்.
இதில் மக்கள் சேவாக்கரங்கள் எடுத்த முயற்சியை, அதன் நிறுவனர் தெரிவித்த படி அவருக்குக் கிடைக்க வேண்டிய பெயரை இக்ராஃ எங்கே - எப்போது - எப்படி தட்டிச் சென்றது என்பது புரியவில்லை.
இக்ராஃ செய்திடும் பணிகளில் சில செய்திக்கு வருகிறது. சில செய்திகளில் இடம்பெறுவதில்லை. காரணம், இக்ராஃ ஒருபோதும் விளம்பரத்தை விரும்பியதில்லை. அது மட்டுமல்ல! வேறு எவரோ செய்த சேவைகளை இக்ராஃ செய்ததாகக் கூறியதாக இதுவரை எந்தக் குற்றச்சாட்டையும் இக்ராஃ இதுவரை சந்தித்ததில்லை.
மட்டுமல்ல! மாணவர் சமுதாயத்திற்குச் செய்யப்படும் எந்த சேவைக்கும் இக்ராஃ அவர்களிடமிருந்து ஒருபோதும் கட்டணம் பெற்றதில்லை. அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைக் கூட அரசு இணையதளத்திலிருந்து இக்ராஃ பதிவிறக்கம் செய்து இலவசமாகவே இன்றளவும் வினியோகித்து வருகிறது.
இக்ராஃவின் தன்னலமற்ற சேவைகளை ஊர் நன்கறியும்.
எனவே, பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள், மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொள்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படாமல் இருக்க வேண்டும். அத்துடன், ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல அல்லது கவனமாக படித்தறியாமல் அவசரப்பட்டு இதுபோன்று குற்றஞ்சாட்டுவதை, தவறான கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நமது பொன்னான நேரங்களை நன்மையான பல காரியங்களில் பயன்படச் செய்ய இயலும் என்பது எங்களது தாழ்மையான கருத்து!
எல்லாம்வல்ல அல்லாஹ் நம் யாவரையும் உளத்தூய்மையான சேவைகளில் ஈடுபடுத்தி, அவற்றுக்கான முழு பலன்களையும் இம்மையிலும், மறுமையிலும் தந்தருள்வானாக, ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross