நடுவண் அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் உதவித்தொகைகளைப் பெறுவதற்காக, மாணவியரால் சமர்ப்பிக்கப்படும் விண்ணங்களுடன் இணைக்கப்படும் சான்றிதழ்களிலுள்ள சிறு சிறு எழுத்துப் பிழைகளைக் காரணங்காட்டி, அவர்கள் உதவித்தொகையைப் பெற்றிட முட்டுக்கட்டையாக இருப்பதாக, காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை மீது காயல்பட்டினம் மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலி குற்றம் சுமத்தியிருந்தார்.
மாணவியர் நன்மைக்காகவே தாம் செயல்பட்டு வருவதாகவும், முறைப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டால் அது அம்மாணவியருக்கே நன்மையளிக்கும் என்றும் கருதியே தாம் அவ்வாறு செய்ததாக காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியை யு.திருமலை தெரிவித்திருந்தார்.
இதுகுறித்த செய்தி காயல்பட்டினம்.காம் வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், உதவித்தொகை தேவையில்லை என ஏராளமான மாணவியரின் பெற்றோரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளதாகவும், அக்கடிதங்களை மாணவியரின் பெற்றோர் மனமொப்பி அளிக்கவில்லை எனவும், எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறும் கோரி மாவட்ட தலைமைக் கல்வியதிகாரி அலுவலகத்திற்கு மக்கள் சேவாக்கரங்கள் அமைப்பின் நிறுவனர் பா.மு.ஜலாலீ கடிதம் மூலம் கோரியிருந்தார்.
இதுகுறித்து நேரடி விசாரணை செய்வதற்காக, தூத்துக்குடி மாவட்ட கல்வியதிகாரி தமிழ்ச்செல்வி நேற்று மதியம் 02.30 மணிக்கு காயல்பட்டினம் தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளிக்கு வந்திருந்தார்.
பள்ளி தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், மக்கள் சேவாக்கரங்கள் நிறுவனர் பா.மு.ஜலாலீ ஆகியோர் இடம்பெற்றிருந்த அப்பேச்சுவார்த்தையில், மாவட்ட கல்வி அதிகாரி தமிழ்ச்செல்வியின் அழைப்பின் பேரில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோரும் கலந்துகொண்டனர். விவகாரம் குறித்து அப்போது மாவட்ட கல்வியதிகாரி இருதரப்பினரிடமும் கேட்டறிந்தார்.
பின்னர் கருத்து தெரிவித்த இக்ராஃ அங்கத்தினர், அரசு வழங்கும் சலுகைத் திட்டங்களை மாணவியருக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதே மக்கள் சேவாக் கரங்கள் அமைப்பின் நோக்கமாக அறியப்படுவதாகவும்,
அதே நேரத்தில், மாணவியர் முறையான பதிவுகளுக்குப் பின் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவர்களுக்கு வருங்காலத்தில் உதவிகரமாக அமையும் என்பதே தலைமையாசிரியரின் எண்ணமாக இருக்கும் என்றும் தெரிவித்துவிட்டு, பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களை அங்கேயே கிழித்தெறிந்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறும் தெரிவித்தனர்.
அத்துடன் உதவித்தொகை பெறுவதற்கான உண்மை விதிமுறைகள் குறித்து மாவட்ட கல்வியதிகாரியிடம் இக்ராஃ குழுவினர் வினவினர்.
அதற்கு விடையளித்த மாவட்ட கல்வியதிகாரி தமிழ்ச்செல்வி, அரசின் கல்வி உதவித்தொகையைப் பெற்றிட மாணவியர் பெயரில் தனி வங்கிக் கணக்கு அவசியமற்றது எனவும், மாணவியரின் தந்தை அல்லது தாய் பெயரிலிருக்கும் வங்கிக் கணக்கைக் காண்பித்து கூட பணத்தைப் பெற்றுக்கொள்ளவியலும் என்றும் தெரிவித்தார்.
பின்னர், பெற்றோரிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களை அங்கேயே கிழித்தெறிந்த அவர், உதவித்தொகை இதுவரை பெறாத மாணவியரும், உதவித்தொகை வேண்டாமென பெற்றோர் மூலம் கடிதம் பெறப்பட்டிருந்த மாணவியரும் வரும் 28ஆம் தேதிக்குள் உரிய ஆவனங்களை பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பித்து கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தார்.
இவ்வாறு விவகாரம் சுமூகமாக தீர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி பழைய விவகாரங்களை யாரும் மனதிற்கொள்ளத் தேவையில்லை என இருதரப்பாருக்கும் அறிவுறுத்தப்பட்டது. |