காயல்பட்டினம் நகராட்சி வங்கிக் கணக்கிலிருந்து ஏறத்தாழ 14 லட்ச ரூபாய் காசோலை மோசடி செய்ய முயற்சி செய்யப்பட்டது குறித்து தினத்தந்தி நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
காயல்பட்டினம் நகரசபை ரூ.13 லட்சம் போலி காசோலை விவகாரம் தொடர்பாக போலீசார் குஜராத் விரைந்தனர்.
காயல்பட்டினம் நகரசபையில் ஆணையாளர் பொறுப்பில் நகரசபை தலைமை எழுத்தர் சக்திகுமார் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அவரை போன்று நகரசபை காசோலையில் போலியாக கையெழுத்து போட்டு 13 லட்சத்து 73 ஆயிரத்து 431 ரூபாய் குஜராத் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கிளை மூலம் பணம் எடுப்பதற்காக தூத்துக்குடி ஸ்டேட் வங்கிக்கு அனுப்பப்பட்டு இருந்தது.
காசோலை மீது சந்தேகம் ஏற்பட்ட வங்கி மேலாளர் நகரசபையில் தொடர்பு கொண்டு கேட்டார். அப்போது அது போலியான கையெழுத்துயிட்ட காசோலை என்பது தெரியவந்தது. இது குறித்து நிர்வாக அதிகாரி (பொறுப்பு) சக்திகுமார் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், இந்த காசோலை நிர்வாக அதிகாரிக்கு தெரியாமல் அவர் விடுப்பில் இருந்த நாளில் காசோலை புத்தகத்தில் இருந்து ஒரு தாள் கிழித்து எடுக்கப்பட்டு இருந்ததும், அவரைப் போன்று கையெழுத்து இடப்பட்டு இருந்ததும் தெரிந்தது.
மேலும், போலீசார் காசோலையில் இருந்த பெயரான செய்யது முகமது என்பது யார்? என்று தீவிரமாக விசாரணை நடத்தினர். காயல்பட்டினம் நகரசபையில் தற்போது துணை தலைவராக இருந்து வரும் கசாலி மரைக்காயரின், உடன்பிறந்த தம்பிதான் செய்யது முகமது என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து செய்யது முகமதுவிடம் விசாரணை நடத்துவதற்காக குஜாரத் மாநிலம் உமர்கவுன் என்ற ஊருக்கு ஆறுமுகநேரி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து துணை தலைவர் கசாலி மரைக்காயர் தலை மறைவாகி உள்ளார்.
செய்யது முகம்மது என்பவர் சிக்கினால் காயல்பட்டினம் நகரசபை காசோலை எப்படி வெளியே சென்றது. அதில் நிர்வாக அதிகாரி போன்று கையெழுத்திட்டது யார்? யார் உதவியுடன் காசோலை கைமாறியது என்பது போன்ற தகவல்கள் தெரியவரும்.
இந்த சம்பவம் தொடர்பாக நகரசபை தலைவர் வாவு செய்யது அப்தூர்ரகுமான் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தகவல்:
தினத்தந்தி
|