காயல்பட்டினத்தில் புற்றுநோய் தாக்கம் குறித்த தகவல் சேகரிப்புப் பணி இக்ராஃ கல்விச் சங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. அதன் துவக்கமாக, தகவல் சேகரிப்பில் ஈடுபடவுள்ள தன்னார்வப் பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் முகாம 20.02.2011 அன்று மாலையில் நடைபெற்றது.
இதுகுறித்து, இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
டாக்டர் மாசிலாமணியின் வழிகாட்டல்:
காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அதற்கான தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டு சஊதி அரபிய்ய காயல் நல மன்றங்களான ரியாத் காஹிர் பைத்துல்மால், தம்மாம் காயல் நற்பணி மன்றம் மற்றும் ஜித்தா காயல் நற்பணி மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து, ரியாதிலுள்ள மன்னர் ஸஊத் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானியுமான டாக்டர் மாசிலாமணியுடன் ஆலோசனை செய்தனர்.
துவக்கமாக நகரில் இதுவரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்கள், தற்சமயம் சிகிச்சை பெற்று வருவோர், புற்றுநோயிலிருந்து பூரண குணமடைந்தோர் குறித்த முழு தகவல்களை சேகரிக்க வேண்டுமெனவும், பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாம் வகுக்கும் செயல்திட்டங்கள் மட்டுமே முழுப் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.
இக்ராஃவிடம் பொறுப்பளிப்பு:
அதனடிப்படையில், ஊரில் இத்தகவல் சேகரிப்புப் பணியை மேற்கொள்வதற்கான பொறுப்பை உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திடம் அளிக்க அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
இப்பணியின் அத்தியாவசியத்தைக் கருத்தில் கொண்டு இத்தகவல் சேகரிப்புப் பணியை தலைமையேற்று செய்து தர இக்ராஃ நிர்வாகக் குழு முழு சம்மதம் தெரிவித்தது, அதனடிப்படையில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளது.
இரண்டாவது ஆலோசனைக் கூட்டம்:
07.02.2011 அன்று ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் தலைமையில் இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில், இக்ராஃ துணைச் செயலர் எஸ்.கே.ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டோர் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட பின்னர், தகவல் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு முழு விபரங்களையும் தெரிவிக்கும் பொருட்டு பிரசுரம் அச்சிடுவதெனவும், கேள்விப்படிவம் அச்சிடுவது பற்றியும், நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் அவற்றின் கத்தீப் - பேருரையாளர்களைக் கொண்டு இத்தகவல் சேகரிப்பு குறித்து உரை நிகழ்த்தக் கோருவதெனவும், உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுகுறித்து எழுத்துச் செய்தி, அசைபட விளம்பரம் வெளியிடுவதெனவும் முடிவு செய்யப்பட்டு அவற்றுக்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மூன்றாவது ஆலோசனைக் கூட்டம்:
அதன் தொடர்ச்சியாக, தகவல் சேகரிப்பு குறித்த அடுத்த ஆலோசனைக் கூட்டம் 19.02.2011 அன்று ஹாஜி எஸ்.ஐ.புகாரீ தலைமையில் இக்ராஃ கூட்டரங்கில் நடைபெற்றது. ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கிவைத்தார்.
ரியாத் காஹிர் பைத்துல்மால் துணைத்தலைவர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.ஸதக்கத்துல்லாஹ், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப், இக்ராஃ உறுப்பினர் கோமான் மீரான், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் பொருளாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீத், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் பொருளாளர் ஹாஜி எஸ்.ஏ.நூஹ், இக்ராஃ செயலாளர் (பொறுப்பு) கே.எம்.டி.சுலைமான், புற்றுநோய் தகவல் சேகரிப்பு ஒருங்கிணைப்பாளர்களான ஆசிரியர் சுலைமான், ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாவு வஜீஹா கல்லூரி வருத்தம் தெரிவிப்பு:
கூட்டத்தின்போது, முன்னரே ஒப்புக்கொண்ட படி தமது கல்லூரியின் முன்னாள் மாணவியரைத் தன்னார்வலர்களாத் தரும் ஆர்வத்துடன் பல வழிகளில் தான் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், ஆனால் அவர்கள் யாருமே ஆர்வப்படாத காரணத்தால் தன்னால் எதுவும் செய்யவியலாமல் போய்விட்டது என்றும் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் தெரிவித்தார்.
இக்ராஃ ஏற்கனவே எடுத்துக்கொண்ட பணிகளுக்கே நேரம் பற்றாத நிலையில், கல்லூரியிலிருந்து தன்னார்வலர்களைத் தருவதாக வாக்களித்த்தை நம்பியே இப்பொறுப்பை சிரமேற்கொண்டதாகவும், ஒத்துழைப்புத் தரவியலவில்லையென திடீரென கல்லூரியின் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் மிகுந்த ஏமாற்றமளித்ததாகவும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்தார்.
40 பெண் தன்னார்வலர்கள்:
எனினும், முன்வைத்த காலை பின்வாங்கும் சரித்திரம் இக்ராஃவுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, தன்னார்வலர்களைப் பெற்றிடுவதற்காக தனிப்பட்ட முறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு நாட்கள் அல்லும் பகலும் முயற்சித்ததன் பலனாக, முஸ்லிம் - முஸ்லிமல்லாத 40 தன்னார்வப் பணியாளர்கள் தமது பல்வேறு குடும்பச் சுமைகளுக்கு இடையிலும் இப்பணியில் ஈடுபட ஆர்வம் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பின்னர், தனிப்பட்ட முயற்சியில் பெறப்பட்ட தன்னார்வப் பணியாளர்கள் நாற்பது பேரையும் ஒருங்கிணைத்து, தகவல் சேகரிப்பின்போது அவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைமைகள் குறித்து விளக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டு, 20.02.2011 அன்று தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாமை இக்ராஃ கூட்டரங்கில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
தன்னார்வலர்கள் பயிற்சி முகாம்:
20.02.2011 அன்று மாலை 05.15 மணிக்கு இக்ராஃ கூட்டரங்கில் தன்னார்வப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி சோனா ஷாஹுல் ஹமீத் தலைமையிலும், அவ்வமைப்பின் துணைத்தலைவர் முத்துச்சுடர் ஹாஜி என்.டி.ஸதக்கத்துல்லாஹ், புற்றுநோய் தகவல் சேகரிப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சுலைமான் ஆகியோர் முன்னிலையிலும் துவங்கிய முகாமை ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் கிராஅத் ஓதி துவக்கிவைத்தார்.
முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் நிகழ்ச்சியை தொகுத்தளித்தார். இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ புற்றுநோய் தகவல் சேகரிப்பின் அவசியம், அதை முன்னின்று ஏற்பாடு செய்யும் அமைப்புகளின் நன்னோக்கத் திட்டங்கள் குறித்தும் சுருக்கவுரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, தகவல் சேகரிப்புக்கான கேள்விப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் குறித்தும், தகவல் சேகரிப்பின்போது பொதுமக்களிடம் நளினமாக நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
பின்னர், பகுதிவாரியாக தகவல் சேகரிப்பாளர்கள் பிரிக்கப்பட்டு, தகவல் சேகரிப்பிற்குத் தேவையான பிரசுரங்கள், கேள்வித்தாள்கள், எழுதுவதற்கான அட்டை, எழுதுபொருட்கள் அடங்கிய இரண்டு பைகள் ஒப்படைக்கப்பட்டது. நகரின் நகைக்கடைகளான ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ், எல்.டி.எஸ்.கோல்டு ஹவுஸ், ஜுவல் ஜங்ஷன் ஆகிய நிறுவனங்கள் இதற்கு அனுசரணையளித்திருந்தனர். துஆவுடன் பயிற்சி முகாம் நிறைவுற்றது.
தகவல் சேகரிப்பில் நகர மக்கள் முழு ஒத்துழைப்பு:
அதனைத் தொடர்ந்து நேற்று முதல் தகவல் சேகரிப்புப் பணிகள் துவங்கியுள்ளன. ஊடகங்கள் வாயிலாகவும், பள்ளிவாசல்கள் வாயிலாகவும் ஏற்கனவே பொதுமக்களுக்கு விபரமாக அறிவிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் ஆர்வத்துடனும், தயக்கமின்றியும் ஒத்துழைப்பதாக இத்தகவல் சேகரிப்புப் பணியில் களமிறங்கியுள்ள தன்னார்வப் பெண்மணிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இக்ராஃ நிர்வாகியும், புற்றுநோய் தகவல் சேகரிப்பு செயல்திட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |