காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் தமிழக அரசின் கடலோரபகுதிகளில் ஆபத்தான இடங்களில் உள்ள வீடுகளை மாற்று இடத்தில் கட்டும் திட்டத்தின் கீழ் [Vulnerability Reduction of Coastal Communities (VRCC)], கட்டப்பட்டு வரும் 169 குடியிருப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டத்திற்கான நிலம் தவறான வழியில் ஆர்ஜிதம் செய்யப்பட்டதாகவும், கட்டுமானப் பணிக்கான ஒப்புதல் நகராட்சியிடம் இருந்து பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமீபத்தில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல அரசு துறைகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 31.01.2011 அன்று விசாரணைக்கு வந்தது. அதில், இத்திட்டம் குறித்து பல ஆவணங்கள் சமர்பிக்கவேண்டி உள்ளதாகக் கூறி வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க, வழக்கை பிப்ரவரி 21 வரை நீதிபதி ஒத்தி வைத்தார். அதே வேளையில் கட்டுமானப்பணிகளுக்கு அப்போது தடை விதிக்க நீதிபதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்வழக்கு குறித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று காலையில் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், அப்போது மேற்படி கட்டிடப்பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இவ்வழக்கு குறித்த மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. |