தூத்துக்குடி துறைமுகத்திற்கு வஉசி பெயர் சூட்டு விழா நேற்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி எஸ்.ஏ.வி.பள்ளி மைதானத்தில் தொடங்கியது. துறைமுகத்திற்கு, வ.உ.சிதம்பரனார் பெயரை மத்திய கப்பல்துறை அமைச்சர் வாசன் சூட்டினார். அதற்கான கல்வெட்டை மேடையில் அவர் திறந்து வைத்தார். மேலும், வீடியோ கான்பரன்சிங் மூலம், துறைமுகத்திலும் வ.உ.சிதம்பரனார் பெயரை மாற்றினார்.
நிகழ்ச்சியில், வ.உ.சிதம்பனரார் மகன் வாலேஸ்வரன், அவரது வாரிசுகள் கலந்து கொண்டனர். மேலும், வ.உ.சிதம்பரனாரின் அரிய புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சியையும் திறந்து வைத்தார். மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஜெயதுரை எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துறைமுக பொறுப்புக்கழக தலைவர் சுப்பையா வரவேற்றார்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் வாசன்,தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார் துவங்கி வைத்த சுதந்திர போராட்ட வேட்கையை பின்னர் சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன் வழிநடத்திச் சென்றனர். இந்தியாவில் பெரிய துறைமுகங்களில் மும்பை துறைமுகத்திற்கு மட்டுமே, முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு பெயர், முன்னர் சூட்டப்பட்டது. இவ்வகையில், தற்போது தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
துறைமுகத்திலுள்ள நிலக்கரித் தளம், வடக்கு சரக்குத் தளம் உள்ளிட்ட ஏழு தளங்களுக்கு, முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டப்படுகிறது. அதுபோல, கண்டெய்னர் தளம் உள்ளிட்ட ஏழு தளங்களுக்கு, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயர் சூட்டப்படுகிறது. துறைமுகத்திலுள்ள பூங்கா, அம்பேத்கர் சிலை அமைந்துள்ள சாலைக்கு அம்பேத்கர் பெயர் சூட்டப்படுகிறது என்றார் வாசன்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரன், மத்திய கப்பல் துறை செயலாளர் மோகன்தாஸ்,ராமசுப்பு எம்.பி., ஞான தேசிகன் எம்.பி., முன்னாள் எம்.பி.ராம்பாபு, வேல்துறை எம்.எல்.ஏ.,மாலைராஜா எம்.எல்.ஏ., சுடலையாண்டி எம்.எல்.ஏ.,மாவட்ட திமுக செயலாளர் பெரியசாமி, வ.உ.சி. கல்லூரி தாளாளர் சொக்கலிங்கம், ஏ.பி.சி.வி.சண்முகம், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஜஸ்டின், கதிர்வேல், துறைமுகசபை உறுப்பினர் விஜயசீலன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
www.tutyonline.net
|