காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் நடைபெற்ற மீலாத் விழாவில் வாணியம்பாடியைச் சார்ந்த பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் சிறப்புரையாற்றினார். விழா நிகழ்வுகள் பின்வருமாறு:-
இறைத்தூதர் முஹம்மத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 1485ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 16.2.2011 அன்று காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபையில் நடைபெற்றது.
மீலாத் விழாவையொட்டி, முன்னதாக 12.02.2011 அன்று காலை 09.00 மணிக்கு மகளிருக்கான பேச்சுப்போட்டியும், 13.02.2011 அன்று காலை 09.00 மணிக்கு மகளிருக்கான திருக்குர்ஆன் மனன - ஹிஃப்ழுப் போட்டியும், காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவிலுள்ள வாவு பெண்கள் தைக்காவில் நடைபெற்றது.
14.02.2011 அன்று காலை 09.00 மணிக்கு மஹ்ழரா மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது.
16.02.2011 மீலாத் விழா தினத்தன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா மாணவர்களுக்கான சன்மார்க்கப் போட்டிகள் மஹ்ழரா வளாகத்தில் நடைபெற்றது.
16.02.2011 அன்று மாலை 04.45 மணிக்கு மீலாத் பெருவிழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ தலைமையில் நடைபெற்றது.
மஹ்ழரா குர்ஆன் மத்ரஸாவின் ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர் அனைவரும் எழுந்து நின்று நபிகளார் புகழ்பாடும் அஹ்மதுல்லாஹ் பைத் பாடினர். பின்னர், மஹ்ழரா மீலாதுர்ரஸூல் விழாக்குழு செயலர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் வரவேற்றுப் பேசினார். தலைமையுரையுடன் மாலை அமர்வு நிறைவுற்றது.
பின்னர் இரவு 07.15 மணிக்கு தொடர்ந்த மறு அமர்வில், நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ஃபைஜுல் அன்வார் அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஓ.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் ஃபைஜீ சிறப்புரையாற்றினார்.
பின்னர் போட்டிகளில் வென்ற மஹ்ழரா அரபிக்கல்லூரியின் ஆலிம் பிரிவு மாணவர்களுக்கும், மஹ்ழரா குர்ஆன் மத்ரஸாவின் சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மீலாதுர்ரஸூல் விழாக்குழுவின் தலைவர் ஹாஜி கத்தீப் ஏ.ஜே.மீராஸாஹிப் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவின் சிறப்பம்சமாக, தொழில் முனைவோருக்கு தொழில் உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மூவருக்கு மிதிவண்டியும், இருவருக்கு மாவு அரைக்கும் க்ரைண்டரும், ஒருவருக்கு தையல் இயந்திரமும் என ஆறு பயனாளிகளுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.
பின்னர், இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வாணியம்பாடியை பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் சிறப்புரையாற்றினார்.
பின்னர் ஹாஜி கத்தீப் ஏ.ஜே.மீராஸாஹிப் நன்றி கூற, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் பாக்கவீ துஆவுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நேர்ச்சை வினியோகிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, மஹ்ழரா மீலாதுர்ரஸூல் விழாக்குழுவினர் விமரிசையாக செய்திருந்தனர்.
படங்களில் உதவி:
ஹாஜி J.M.அப்துர்ரஹீம் காதிரீ,
மகுதூம் தெரு, காயல்பட்டினம். |