காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவில், சிதிலமடைந்த நிலையில் உள்ளது கிராம நிர்வாக அலுவலகம். இதனால் தற்சமயம் காயல்பட்டினம் புறவழிச்சாலையிலுள்ள வாடகைக் கட்டிடத்தில் தற்காலிகமாக அது இயங்கி வருகிறது.
பழுதடைந்து பயனற்றுப் போன கிராம நிர்வாக அலுவலகத்தை சீராகக் கட்டித் தரும் பொருட்டு முன்னுரிமைப் பட்டியலில் சேர்த்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் இளைஞர் ஐக்கிய முன்னணிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த இளைஞர் ஐக்கிய முன்னணி செயலர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், முற்றிலும் பழுதடைந்து பயனற்றுப் போன காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகத்தைப் புதிய கட்டிடமாக கட்டித் தருமாறு கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில் பலமுறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடைசியாக, மத்திய இரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவர்களுக்கும் இதுகுறித்து கோரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளோம். அதனைப் பரிசீலித்த அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு மேற்கொண்ட முயற்சியின் பலனாக இக்கடிதம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களால் எமது இளைஞர் ஐக்கிய முன்னணி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், புதிய கட்டிடம் கட்ட மதிப்பீடு பெற்று அனுப்பும் பொருட்டு இக்கடிதத்தின் நகல் பொதுப்பணித்துறை திருச்செந்தூர் உதவி செயற்பொறியாளருக்கும் மாவட்ட ஆட்சியரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். |