பல்வேறு மருத்துவ தேவைகளுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏற்கப்பட்டவற்றுக்கு ரூ.71,500 நிதியொதுக்கீடு செய்து சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம் 12.02.2011 அன்று மாலை 05.30 மணிக்கு, சிங்கப்பூரிலுள்ள மன்றத்தின் பதிவு அலுவலகத்தில், மன்றத் தலைவர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் தலைமையில் நடைபெற்றது.
எஸ்.எச்.உதுமான் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மன்றத்தின் வரவு - செலவு கணக்கறிக்கையை துணைச் செயலாளர் மொகுதூம் முஹம்மத் சமர்ப்பித்தார். பின்னர், மன்றத்திற்கான காலாண்டு சந்தா தொகைகளை குறித்த காலத்தில் செலுத்தி ஒத்துழைக்குமாறு மன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மருத்துவ உதவியாக ரூ.71,500 நிதியொதுக்கீடு:
பல்வேறு தேவைகளுக்காக காயல்பட்டினம் நகரின் ஏழை-எளிய மக்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் செயற்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பத்து பேரின் மருத்துவத் தேவைகளுக்காக ரூ.71,500 நிதியொதுக்கீடு செய்யவும், வரும் வாரத்தில் பயனாளிகளிடம் அத்தொகைகளை ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்தியாவசிய சமையல் பொருட்களுக்கு நிதியுதவி:
காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய - இயலாநிலையிலுள்ள குடும்பத்தினருக்காக மன்றத்தால் அடுத்து வழங்கப்படவுள்ள அத்தியவாசிய சமையல் பொருளுதவித் திட்டத்திற்காக மன்ற உறுப்பினர்கள் தமது தாராள நிதிகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அத்துடன், மன்றத்தின் நிர்வாகப் பணிகளில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மார்ச் 26இல் அடுத்த பொதுக்குழு:
மன்றத்தின் அடுத்த பொதுக்குழுவை வரும் மார்ச் மாதம் 26ஆம் தேதியன்று (26.03.2011) மாலையில், சிங்கப்பூரிலுள்ள Fairy Point Chalets, 10, Leuchars Road, Aloha Changi என்ற முகவரியில் நடத்துவதெனவும்,
2011-2013 பருவத்திற்கான மன்றத்தின் புதிய நிர்வாகக் குழுவை அக்கூட்டத்தில் தேர்ந்தெடுப்பதெனவும், உறுப்பினர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு அக்கூட்டத்தையொட்டி பல்வேறு வேடிக்கை-விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டதோடு, உறுப்பினர்கள் தமது குடும்பத்தினருடன் அக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஜூன் மாதத்தில் மலர் வெளியீடு:
மன்றத்தின் சிறப்பு மலரை வரும் ஜூன் மாதத்தில் வெளியிடுவதென தீர்மானிக்கப்பட்டது.
விவாதிக்க வேறு அம்சங்கள் எதுவுமில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.எம்.அஹ்மத் அவர்களின் துஆவுடன் கூட்டம் இரவு 07.00 மணிக்கு நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
மொகுதூம் முஹம்மத்,
துணைச் செயலாளர்,
காயல் நல மன்றம், சிங்கப்பூர். |