காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவிலும், குட்டியப்பா பள்ளியிலும் செயல்பட்டு வருகிறது சமூக நல்லிணக்க மையம் என்ற தஃவா சென்டர்.
இஸ்லாம் மார்க்கத்தை தாமாக முன்வந்து தம் வாழ்வியல் நெறியாக்கி வருவோருக்காக புனித குர்ஆன் கல்லூரி என்ற நிறுவனத்தை அமைத்து மூன்று மாத இஸ்லாமிய ஆரம்பக் கல்வி உள்ளிட்ட பணிகளைச் செய்து வருவதோடு, மாதந்தோறும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தஃவா சுற்றுப்பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஃவா சென்டர் பணிகளின் ஒரு பகுதியாக, முஸ்லிம் மாணவர்களை ஒழுக்க மாண்புகளோடும், உயர் சிந்தனைகளோடும் திகழச்செய்திடும் நோக்கில் அவ்வப்போது தர்பிய்யா - உளத்தூய்மை பயிற்சி முகாம்களை நடத்தி வருகின்றனர்.
அந்த அடிப்படையில், 13.02.2011 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை காயல்பட்டினம் குட்டியப்பா பள்ளியில் மாணவர்களுக்கான அரை நாள் பயிற்சி முகாம் “மனதோடு போராடு” நடைபெற்றது.
பள்ளி, கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்களும், பொறியாளர்களும், பணியிலிருக்கும் மாணவர்களும் என திரளான மாணவர்கள் கலந்துகொண்ட இம்முகாமை, தஃவா சென்டர் மேலாளர் டி.வி.எஸ்.ஜக்கரிய்யா வழிநடத்தினார்.
மனதைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம், இஸ்லாமில் இளைஞர்களின் பங்கு, தறகாலத்தில் இளைஞர்கள் முன்னுள்ள பொறுப்புகள் குறித்து இம்முகாமில் மாணவர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. பின்னர், முகாமில் கலந்துகொண்ட மாணவர்களின் சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
கலந்துகொண்ட மாணவர்கள், மாதந்தோறும் இதுபோன்ற முகாமை வழமையாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, வரும் மார்ச் 13ஆம் தேதி அடுத்த முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஆரிஷ் கான்,
செய்தித் தொடர்பாளர்,
சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர்,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |