வட அமெரிக்க காயல் நல மன்றம் - நக்வாவின் கலிஃபோர்னியா வாழ் காயலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, 30.01.2011 அன்று அநேகம் (Anaheim)இல் உள்ள மாஸ் இஸ்லாமிக் சைனீஸ் ஓய்வுணவகத்தில் நடைபெற்றது. கலிஃபோர்னியாவில் வசிக்கும் வி.டி.என்.அப்துல்லாஹ், சாளை முஹம்மத் முஹ்யித்தீன், அப்பாஸ், ஜமால், ஹாஃபிழ் எம்.எல்.ஷேக் ஐந்து காயலர்கள் தம் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
லுஹர் தொழுகையை ஓய்வுணவகத்தில் கூட்டாக நிறைவேற்றிய பின்னர், முதன்முறையாக அமெரிக்காவில் சந்திப்பதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட அவர்கள், தமது அமெரிக்க வாழ்வு குறித்து ஒருவருக்கொருவர் விசாரித்தறிந்து கொண்டனர்.
கூட்ட நிகழ்வுகள்:
முன்னதாக, Orange County National Parkஇல் இக்குழு சந்திப்பதாக இருந்தது. மழை காரணமாக அது முடியாமற்போனதால், மதிய உணவிற்குப் பிறகு அருகிலிருந்த காயலர் ஒருவரின் இல்லத்தில் சந்திப்புக் கூட்டம் துவங்கியது.
நக்வா ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்ததோடு, அமெரிக்காவில் பிராந்திய வாரியாக இவ்வாறு கூட்டம் கூட்டப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார்.
காயலர் உடல் நலன் ஆய்வு செயல்திட்டம்:
பின்னர், நக்வாவின் காயலர் உடல் நலன் ஆய்வு செயல்திட்டம் குறித்து விளக்கிப் பேசிய அவர், 11ஆம், 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு நக்வா சார்பில் உதவும் திட்டம் குறித்தும் விளக்கினார்.
புற்றுநோய் தடுப்பு முயற்சிகளை ஒரு குடையின் கீழ் செயல்படுத்தல்:
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவல், அதனைத் தடுப்பதற்காகவும், தவிர்ப்பதற்காகவும் நகரின் பொதுநல அமைப்புகள், தனி நபர்கள் மற்றும் உலக காயல் நல மன்றங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விவாதித்த உறுப்பினர்கள், ஒரே திட்டத்தை அல்லது ஒரே மாதிரியான திட்டத்தை பல மன்றங்களோ, தனி நபர்களோ செய்வதால் ஏற்படும் பொருள் - கால விரையமாவதைத் தவிர்க்கும் விஷயத்தில் அவை மிகுந்த கவனத்துடன் செயலாற்றலாம் எனவும், அதற்காக, இக்கருவின் கீழுள்ள அனைத்து செயல்திட்டங்களையும் கூட மன்றங்கள் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுத்தலாம் எனவும் தெரிவித்தனர்.
இக்ராஃவை பன்னோக்கு செயல்திட்டத்தின் கீழ் கட்டமைத்தல்:
இவ்வாறு செயல்படும் பொருட்டு, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தை வெறும் கல்வித்துறையோடு வரையறுத்துக் கொள்ளாமல், தகுந்த ஊதியத்துடன் தேவையான பணியாளர்களை நியமித்து, பன்னோக்குத் திட்டத்தின் கீழ் செயல்பட உலக காயல் நல மன்றங்கள் முயற்சி மேற்கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்தனர்.
சந்தா தொகை:
பின்னர், கூட்டத்தில் கலந்துகொண்ட கலிஃபோர்னியா வாழ் நக்வா உறுப்பினர்கள் தமது காலாண்டு, அரையாண்டு சந்தா தொகைகளை ஒருங்கிணைப்பாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீனிடம் செலுத்தினர்.
மஃரிப் தொழுகையுடன் கூட்டம் நிறைவுற்றது. கடுமையான மழைக்கிடையிலும், சுமார் 100 மைல்கள் பயணித்து வந்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டமைக்காக அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அமெரிக்காவில் காயலர்கள் அமைப்பு ரீதியாக கூட்டம் நடத்தி சந்தித்துக்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்,
ஒருங்கிணைப்பாளர்,
வட அமெரிக்க காயல் நல மன்றம் - நக்வா. |