காயல்பட்டினம் தாயிம்பள்ளிவாசலையொட்டி கிழக்கே செல்லும் குறுக்குச் சாலையின் மேல்முனையில் அமைந்துள்ளது AKL 3 என்ற எண்ணுடைய நியாயவிலைக் கடை. காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெரு, பரிமார் தெரு, அலியார் தெரு, கே.டி.எம். தெரு, சின்ன நெசவுத் தெரு, பெரிய நெசவுத் தெரு, மேல நெசவுத் தெரு, ஆசாரிமார் தெரு ஆகிய தெருக்களிலுள்ள குடும்ப அட்டைதாரர்கள் இக்கடையிலேயே பொருட்கள் வாங்க வேண்டும்.
பதுக்கல், தரமற்ற பொருட்கள் வினியோகம், முறையற்ற வரிசையமைப்பு, எடை குறைவு, தெரிந்தவர்களுக்கு தனி கவனிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைக் காரணங்காட்டி, 04.02.2011 வெள்ளிக்கிழமை மாலையில் இக்கடையில் வாடிக்கையாளர்களுக்கும், அலுவலர்களுக்குமிடையே நடைபெற்ற வாக்குவாதம் காரணமாக அங்கு சலசலப்பு ஏற்பட்டு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
அதனையடுத்து, தாயிம்பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் சார்பில் சம்பந்தப்பட்ட கடை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறித்த நேரத்தில் கடை திறக்கப்பட வேண்டும்...
எவ்வளவு கூட்டம் இருந்தாலும் உரிய நேரத்தில் கடை பூட்டப்பட வேண்டும்...
வேலை நேரம் அல்லாத இரவு நேரங்களில் கடை திறக்கவே கூடாது...
ஒரு வாடிக்கையாளருக்கு இரண்டு குடும்ப அட்டைக்கு மேல் ஒரே நேரத்தில் பொருட்கள் வினியோகிக்கக் கூடாது...
அனைவர் பார்வையிலும் தராசை முன்வைத்து, பொருட்கள் எடை போடப்பட வேண்டும்... எடை போடுவதில் அவசரம் காண்பிக்கக் கூடாது...
இதுபோன்ற நிபந்தனைகள் கடை அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன் வைக்கப்பட்டு, இரு தரப்பாரும் இதனை ஒப்புக்கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்று அப்பேச்சுவார்த்தையில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் வரம்பு மீறல் இருந்தால் ஜமாஅத் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பினராலும் அவை ஏற்கப்பட்டதையடுத்து பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், கடையில் பொருட்களை எடை போட்டு வினியோகிக்கும் பொறுப்பிலிருந்த முகைதீன் அப்துல் காதர், தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டதாகவும், இந்நிலையில் தொடர்ந்து அப்பொறுப்பிலிருக்க தனக்கு விருப்பமில்லை என்றும் கூறி, அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. |