சிறந்த சிந்தனையாளரும், சமூக சேவகருமான ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள் 12.01.2011 அன்று காலமானார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும்,
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட CANCER FACT FINDING COMMITTEE - CFFCக்கு பாராட்டு தெரிவித்து நிதியொதுக்கீடு செய்தும், அமீரக காயல் நல மன்ற செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத்தின் பிப்ரவரி 2011 மாத செயற்குழுக் கூட்டம் அல்லாஹ் அருளால் வழமை போல் மன்றத்தின் தலைவர் ஜனாப் ஜே.எஸ்.ஏ.புஹாரி அவர்கள் இல்லத்தில் வைத்து பிப்ரவரி 11 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஜனாப் ஜே.எஸ்.ஏ.புஹாரி அவர்கள் தலைமை தாங்க, ஜனாப் எம்.எஸ்.நூஹ் சாஹிப் அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பித்து வைத்தார்கள்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் பின்வருமாறு:-
எஸ்.கே. மறைவுக்கு இரங்கல்:
மர்ஹூம் ஜனாப் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எல்லாம்வல்ல அல்லாஹ் அவர்களின் குடும்பத்தாருக்கு சபூர் என்ற பொறுமையை கொடுத்து, மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து 'ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்' என்ற உயர்ந்த சுவனபதியை அவர்களுக்கு கொடுத்து அருள்வானாகவும். ஆமீன்.
மன்றம் நமது தாயகத்தில் 2008ஆம் ஆண்டு ஆசிரியர்களை பாராட்டி பரிசளித்த விழாவை மர்ஹூம் அவர்கள் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியதை மன்றம் நன்றியுடன் நினைவு கூர்ந்தது.
தாயகம் சென்ற உறுப்பினரின் சேவைக்கு பாராட்டு:
மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் மெஹெர் அலி அவர்களின் சேவையை பாராட்டி அவர்கள் தாயகம் சென்ற செய்தியும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
CFFC குழுமத்திற்கு பாராட்டும், நிதியொதுக்கீடும்:
நமதூரில் சமீப காலமாக பரவி வரும் கேன்சர் என்ற கொடிய நோய்க்கு காரணிகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட CFFC அமைப்பிற்கு மன்றம் பாராட்டு தெரிவிப்பதோடு, அதன் முயற்சிகளுக்கு உதவியாக ரூ. 25 ,000 நிதி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
அபூதபியில் அடுத்த செயற்குழு:
மன்றத்தின் அடுத்த செயற்குழு கூட்டத்தை அபூதபியில் நடத்தவும், அதற்கான தேதியை அபூதபி உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இலச்சினை பரிசீலனை:
மன்றத்தின் மலர்குழுவினரால் பெறப்பட்ட இலச்சினைகள் பரிசீலிக்கப்பட்டு, ஒரு சில மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஏப்ரலில் மலர் வெளியீடு:
மன்றத்தின் சிறப்பு மலரை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்றும், மலர் மூலம் பெறப்படும் வருமானத்தில் பெரும்பகுதியை கேன்சர் வியாதிக்கு என்று ஒதுக்கி, எதிர்காலத்தில் ஒரு கேன்சர் ஃபவுண்டேஷன் நாமதூரில் அமையப் பெறுவதற்க்கு வழிகோலாக இருக்க எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டது.
மேற்கண்டவாறு முடிவுகளும், தீர்மானங்களும் அமைந்திருந்தன. பின்னர், நகர்நலன் குறித்த பல விஷயங்கள் குறித்து செயற்குழு உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டனர். தேனீர் விருந்திற்குப் பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அமீரக காயல் நல மன்றம் சார்பாக,
சாளை ஷேக் ஸலீம்,
(துணைத்தலைவர்)
படங்கள்:
ஹுஸைன் ஈஸா,
துபை, ஐக்கிய அரபு அமீரகம். |