இம்மாதம் 09ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறும் என்றும், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் இக்கணக்கெடுப்புப் பணியை மேற்கொள்வர் என்றும் அரசு சார்பில் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கணக்கெடுப்புப் பணி நேற்று துவங்கியது.
கணக்கெடுப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நீண்ட படிவத்தில், குடும்ப உறுப்பினர்கள் விபரம், அவர்களின் பிறந்த தேதி, திருமண நிலை, மதம், ஜாதி, மாற்றுத்திறனாளியா?, எழுத்தறிவு மற்றும் கல்வி நிலைமை, பொருளாதார நடவடிக்கைகள், இடப்பெயர்ச்சி, இனவிருத்தி உள்ளிட்ட விபரங்கள் குறித்த கேள்விகள் இடம்பெற்றுள்ளன. கணக்கெடுப்பின்போது இல்லங்களில் பெறப்படும் விபரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கணக்கெடுப்பின்போது பொறுமையாக இவ்விபரங்களை அளிக்குமாறு சென்னையிலுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த அதன் சுற்றறிக்கை பின்வருமாறு:-
காயல்பட்டினத்தில் நேற்று மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி துவங்கியது. காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் இல்லத்தில் துவக்கமாக கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.
காயல்பட்டினத்திற்கான மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள எல்.கே.மேனிலைப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் எம்.ஏ.புகாரீ தலைமையில், ஃபாத்திமா வின்னரசி கணக்கெடுப்பு விபரங்களை நகர்மன்றத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார். வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் உடனிருந்து விபரங்களைத் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், ஆய்வாளர் (பொறுப்பு) ஆர்.முரளி, சுகாதார ஆய்வாளர் காஜா நஜ்முத்தீன், நகர்மன்ற அலுவலக உதவியாளர் ஃபாழில் ஆகியோர் இக்கணக்கெடுப்பில் உடனிருந்தனர். |