சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 24 வது பொதுக்குழு, 09ஆம் வருட துவக்கம் மற்றும் 05வது அமர்வுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு நிகழ்வுகள் சென்ற 04ஆம் தேதி வெள்ளி அன்று இம்பாலா உணவக கூட்டரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. மன்றத் தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்க, சகோ. யானி எம்.எம்.முஹம்மது அபூபக்கர் இறைமறை ஓத, சகோ.எஸ்.அய்.செய்யிது முஹம்மது ஸாஹிபின் வரவேற்புரையுடன் கூட்டம் ஆரம்பமானது. சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
முன்னிலை:
மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ.எஸ்.ஹெச்.ஹுமாயூன் கபீர், சகோ.எம்.ஏ.முஹம்மது அபூபக்கர் மற்றும் சகோ.ஏ.எம்.அப்துல் நசீர் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
தலைமை உரை:
"நாம் நடும் விதை நம் எதிர்கால சந்ததிகளுக்கு மரமாக வளர்ந்து பலன் தரும் வகையில் நமது பணிகள் அமையவேண்டும் என்றும், ஒரே மகசூலில் பல பலன்கள் பெற நாம் யாவரும் உழைக்க வேண்டும் என்றும், நாம் ஆற்றும் இச்சிறிய சேவைகள் மூலம் நமதூர் மக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்" என்றும், மேலும் நமது மன்றம் ஆற்றி வரும் சுகாதாரம் மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு குறித்த செய்திகளை கோடிட்டு புற்று நோய் காரணிக்கான படிவம் குறித்த விபரத்தை மன்ற சகோதரர்கள் தமது குடும்பத்தினருக்கு அறிவிக்கும்படியும் கேட்டுகொண்டார் மன்றத்தலைவர்.
மன்ற செயலபாடுகள்:
நமது மன்றம் செய்த, செய்கின்ற, செய்யவிருக்கும் பணிகள் குறித்தும், முந்திய செயற்குழுவில் நாம் நிறைவேற்றிய தீர்மானங்கள் மற்றும் அது சார்ந்து நிறைவேறிய செயல்பாடுகள் மற்றும் பயனாளிகள் விபரம் போன்றவைகளை விரிவாக எடுத்துக்கூறினார் செயலர் சகோ.சட்னி எஸ்.ஏ.செய்யிது மீரான். மேலும் அவர் பேசுகையில்; நமது மன்ற நிர்வாக குழுவில் செவ்வனே செயலாற்றி விடைபெற்றுச்சென்ற சகோதரர்களான குளம் ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், எம்.ஈ.எல்.நுஸ்கி, சட்னி எஸ்.எம்.முஹம்மது லெப்பை, வேனா எஸ்.எஸ்.ஜாகிர் ஹுசைன் மற்றும் எம்.எம்.மொகுதூம் முஹம்மது ஆகியோர் உலகில் உள்ள காயல் நல மன்றங்கள் மற்றும் சமுதாய அமைப்புக்களில் முக்கிய பங்கினை செலுத்தி வருகிறார்கள் என்றும், அது போன்ற உன்னத பணியினை இனிதே ஆற்ற சகோதரர்கள் ஆர்வமாக முன்வரவேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
தொடரும் விழிப்புணர்வு:
தொடர்ந்து பேசிய செயலர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம்; நமது மன்றத்தின் ஆரம்பகால பணிகள், இதுநாள் வரை அதன் தொய்வில்லாத சேவைகள், உங்களின் உயர்ந்த ஒத்துழைப்பு மூலம் நம் மன்றம் செய்த அளப்பரிய உதவிகள், நாம் நடத்திய சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம், அதன் மூலம் நகரில் ஏற்பட்ட சுகாதார விழிப்புணர்வு போன்ற செய்திகளை சிறப்பாக எடுத்துச்சொன்னார்.
மேலும; நமதூரை ஆட்டிபடைக்கும் கொடிய புற்று நோயின் தாக்கத்தை அடியோடும் ஒழிக்கும் விதமாக மருத்துவர் விஞ்ஞானி மாசிலாமணி அவர்களுடன் சஊதிஅரபிய்யாவில் இயங்கும் நமதூர் மூன்று நல மன்றங்களும் ரியாதில் ஒன்று கூடி கலந்துரையாடி அந்நோயை வேரோடு அழிக்கும் கருத்துக்களை பரிமாரிய விபரம், அந்நோயின் பாதிப்புக்கு உள்ளானோரை கண்டறிந்து கணக்கெடுப்பு (CANCER SURVEY) நடத்தும் முறை, CFFC என்ற புற்று நோய் காரணி கண்டறியும் குழுவுக்கு உதவிகள் வழங்கி அதன் பணிகளை நாம் ஊக்குவித்தது, மேலும்; புற்று நோய் குறித்து நகரில் விழிப்புணர்வை ஏற்படுத்த "குறும்படம்" தயாரித்தல் என்று நம் மன்றம் ஏற்கனவே தீர்மானித்தபடி சுகாதார விழிப்புணர்வின் தொடர்ச்சியாக அந்த குறும்படம் (DOCUMENTARY ABOUT CANCER) தயாரிக்கும் பணிகள் நகரில் முழு வீச்சுடன் நடைபெற்று வருவதாகவும், அதன் பணிகளை நமது மன்ற செயற்குழு உறுப்பினர் சகோ.எம்.எம்.முஜாஹித் அலீ மிகச்சிறப்பாக ஆர்வமாக முன்னெடுத்து வருவதாகவும் கூறிய அவர், அது பற்றிய மேலதிக செய்திகளையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.
நிதி நிலை:
நமது மன்றம் இதுவரை வழங்கிய கல்வி, மருத்துவம் மற்றும் சிறுதொழிலுக்கான உதவிகள் அதன் விபரங்கள், மன்றத்தின் நிதி நிலைகள் மற்றும் அதன் தேவைகள் போன்ற செய்திகளை துல்லியமாக பட்டியலிட்டார் பொருளாளர் சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
சுகாதாரக்கவி:
நமது மன்றம் இயற்றிய சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கவியை பாடல் மூலம் அழகாக சொல்லிச் சென்றார் சகோ.எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப்.
நிர்வாகத்தேர்வு:
சகோ.எம்.எம்.மூஸா ஸாஹிபின் கண்காணிப்பில் மன்றத்தின் பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு 2011 - 2012 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு மிகச்சிறப்பான முறையில் கலகலப்பாக நடந்தேறியது. தெரிவு செய்யப்பட புதிய நிர்வாகிகளை சகோதரர்களுக்கு அறியத்தந்தார் சகோ.மூஸா ஸாஹிப்.
காணொளி காட்சி:
நமது மன்றம் தயாரிக்கும் சுகாதாரம் மற்றும் புற்று நோய் பற்றிய குறும்படம் எவ்வாறு அமையும் அதன் நோக்கம் என்ன? என்ற வெள்ளோட்ட செய்தியினை காணொளி காட்சிகளாக அருமையாக விளக்கிக்கூறிய சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், இந்த நோய் குறித்து ரியாதில் நடைபெற்ற கலந்துரையாடலின் சாரம்சம்களையும் சிறப்பாக எடுத்துச்சொன்னார். மேலும்; இந்த நோய் குறித்த தகவல் சேகரிக்கும் படிவங்களை நம் வீடுகளுக்கு கொண்டு சென்று துல்லியமான குறிப்புக்களை சேகரிக்கும் பணிகளுக்கு நமது வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி நிர்வாகத்தின் முழு ஒத்துழைப்புடன் அக்கலூரி மாணவிகள் களம் இறங்குகிறார்கள் என்றும் அவர்களுக்கு அது பற்றிய முறையான பயிற்சி அளிக்கபடுகிறது என்றும் கூறினார்.
அறிமுகம்:
பணி நிமித்தம் ஜித்தா வந்துள்ள புதிய சகோதரர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஜித்தா காயல் நற்பணி செய்து வரும் நலப்பணிகளில் நாங்களும் இணைந்து செயலாற்ற ஆயத்தமாக உள்ளோம் என்றும் அறிவித்தனர்.
கருத்துரை:
நம் மன்றம் செய்த உதவிகள் மூலம் பலன் அடைந்த நமது சகோதரர்கள் மன்றத்துக்கு நன்றி தெரிவித்தும் மன்றப்பணிகள் மென்மேலும் சிறந்தோங்க பிரார்த்தித்தும், தாம் பெற்ற உதவிகளை திருப்பி அளிக்கிறோம் என்றும் எழுதும் கடிதங்களை கண்ணுறும்போது நம் கண்கள் கலங்குகிறது என்று கூறிய சகோ.எஸ்.எஸ். ஜாஃபர் ஸாதிக், எங்களுக்கு நீங்கள் தரவிரும்பும் உதவியை நீங்களே தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கி அவர்களின் மேம்பாட்டிற்கு உதவலாம் என்று நாம் பதில் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
நமது மன்றம் ஆரபித்த விதம், அது எதிர்கொண்ட சவால்கள், அதன் அப்போதைய செயல்பாடுகள், இப்பொழுது நமது மன்றசசேவையின் நிறைந்த வளர்ச்சி இவைகளை பார்க்கும்போது மனம் குளிர்கிறது என்றும், தன்னலமற்ற பொது சேவையே நமது ஒரே குறிக்கோள் என்றும் இதை நாம் மனதில் கொண்டு நமது தூய பணிகளை தொடர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் யான்புவில் இருந்து வந்திருந்த நமது மன்ற பிரதிநிதி சகோ. எம்.டபிள்யூ.ஹாமீது ரிஃபாய். நமது மன்ற ஆரம்ப நிர்வாகிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நம் நகரில் பரவலாக ஆட்கொண்டுள்ள புற்றுநோயை ஒழிக்கும் முயற்சியில் நம் மன்றம் இறங்கியுள்ளது வரவேற்கதக்கதே. அதே வேலை நமதூரின் உணவு பழக்கம் மூலம் புற்றுநோய் வருகிறது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது, காரணம் நமது முன்னோர்களும் இதே உணவு பழக்க முறையில் வளர்ந்தவர்கள்தான். அவர்கள் எப்படி திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார்கள்? அதே உணவை முறையை கைகொள்ளும் நம்மை மட்டும் ஏன் இந்த புற்றுக்கிருமி தாக்குகிறது? என்று கேட்ட சகோ.எம்.என்.எல்.முஹம்மது ரஃபீக், வேறு பல காரணங்களாலும் இக்கிருமி உண்டாகலாம் அந்த வழிகளை கண்டறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
சிறப்பு விருந்தினர்கள்:
தொழில் நிமித்தம் ஜித்தா வந்துள்ள தைஸீர் குழும நிறுவனத்தின் அதிபர் சகோ.இப்னு ஸஊத் மற்றும் ஜித்தாவில் இயங்கும் அரேபிய இயற்க்கை மருத்துவ மையத்தில் மருத்துவராக பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த முனைவர் சகோ.ஹமீது முஹம்மது ரஃபீக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
துறைகளை மாற்றுவோம்:
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகளை ஏற்கனவே நன்றாக அறிந்திருக்கும் நான் அதன் வீரியமிக்க பணிகளை கண்டு வியப்புறுகிறேன். CONCEPT OF IBADAH என்று சொல்வார்கள், அதாவது படைத்தவனுக்கு செய்ய வேண்டிய கடமை மற்றும் படைப்பினங்களுக்கு செய்யவேண்டிய கடமை. படைத்தவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறு இருந்தால் படைத்தவன் நாடினால் மன்னிப்பான். ஆனால் படைப்பினங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் சரியாக இல்லையென்றால் அந்த படைப்பினம் மன்னிக்காத வரை படைத்தவன் நம்மை மன்னிக்க மாட்டான் என்ற தத்துவத்தை சரியாக புரிந்து அதை முறையாக கையாள்வதில் இமன்றம் மிகக்கவனமாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார் சகோ.இப்னு ஸஊத்.
தொடர்ந்து பேசிய அவர்; நகரை பற்றியும் நகரின் மக்களை பற்றியும் இமன்றம் அதிகம் கவலை கொள்வதாக அறிகிறேன். நகர் மக்களின் தேவைகளை அறிந்து அதை இம்மன்றம் சிறப்பாக நிறைவேற்றுவதாகவும் அறிகிறேன். இதுபோன்ற நமது மன்றங்களின் பொது நலப்பணிகள் ஒரு புறம் இருந்தாலும், நமது சிறுபான்மை சமூகத்துக்காக அரசாங்கம் தரும் உதவிகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். MUSLIM WOMENS AID SOCIETY என்று அரசு நமக்கென்று உருவாக்கியுள்ள உதவி திட்டங்கள் மற்றும் அரசின் மகளிர் சுய உதவிக்குழு போன்ற அமைப்பின் மூலம் கிடைக்கும் நலத்திட்டங்கள் போன்றவைகளை நாம் பெற முயற்சிகள் மேற்கொள்வதோடு இதுபற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், நமதூர் மக்களின் தொழில் திறமைகளை கண்டுபிடித்து அதற்கான உதவிகளை அந்த திட்டங்கள் மூலம் பெற்றுத்தரலாம் என்றும் கூறினார்.
மேற்படிப்பிற்காக நாம் பெரும்பாலும் பொறியாளர், மருத்துவர், கணினி வல்லுனர்கள் போன்ற தொழில் சார்ந்த துறைகளையே அதிகமாக தேர்ந்தெடுக்கிறோம். மாற்றமாக IAS, IPS போன்ற அரசுத்துறைகளை நாம் ஏன் தேர்ந்தெடுப்பதில்லை? என்று வினவிய அவர், இத்துறைகளில் ஒருவர் கூட நமதூரில் இல்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த செய்தியை நமது இளைஞர்களுக்கு மத்தியில் எடுத்துச்சொல்லி இத்துறைக்கான விழிப்புணர்வை எற்படுத்தவேண்டுமென்றும், நம் நகரில் அதற்கான கல்வித்திறன் மிகவும் பிரகாசமாக உள்ளதால் அதன் முயற்சிகளை தாமதமின்றி மேற்கொள்ளவேண்டுமென்றும் நமது மன்றத்தை கேட்டுக்கொண்டார்.
பிரகாசத்தை காண்கிறேன்:
தொடர்ந்து சிறப்புரையாற்றிய மருத்துவர்; ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பொது நலச்சேவைகள் அறிந்து மிகுந்த ஆனந்தம் கொள்கிறேன். நீங்கள் செய்யும் உதவிகளுக்கு கண்டிப்பாக இறைவனிடத்தில் மிகச்சிறந்த கூலி உண்டு. உயர்ந்த நோக்கோடு நீங்கள் ஆற்றும் அனைத்து செயல்களும் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. உங்களின் இந்த பயிற்சி ஒரு நல்ல அழகிய முயற்சி. நீங்கள் செய்யும் இந்த அரிய பணியின் மூலம் மாணிக்கம் போன்ற பிரகாசத்தை உங்கள் ஒவ்வொருவரது முகத்திலும் காண்கிறேன் என்றார்.
மேலும்; பக்கத்து வீட்டுக்காரன் பசித்திருக்க தான் மற்றும் புசிப்பவன் நம்மை சார்ந்தவனல்ல என்ற நபிமொழிக்கேற்ப உங்கள் செயல்களை அமைத்திருப்பது மிகுந்த போற்றுதலுக்குரியது. உங்கள் பணிகளில் ஏற்படும் தடைகளை படிக்கல்லாக மாற்றி நீங்கள் வெற்றி நடை போட்டு முன்னேற வேண்டுகிறேன். இது போன்ற பணிகள் செய்யும் போது பொறுமை, மென்மை, நிதானம், வளைந்து கொடுக்கும் தன்மை, காலந்தவறாமை போன்ற நற்பண்புகளை தன்னகத்தே கொண்டு செயல்படுதல் அவசியம் என்றும், இதே போல் ஒற்றுமையாக இன்னும் சிறப்பாக உங்கள் சேவைகள் மேலும் தொடர்ந்திட நான் பிரார்த்திக்கிறேன் என்றும் கூறி தனது சிறப்புரையை முடித்தார் மருத்துவர் ஹமீத் முஹம்மது ரஃபீக்.
தீர்மானங்கள்:
• ஆட்கொல்லி நோயாம் புற்று நோயை ஒழிப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து முயற்ச்சிகளையும் இம்மன்றம் பலமாக ஆதரிக்கிறது என்றும் அதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் இம்மன்றம் முழுமையாக அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
• கல்விக்கான தனி அமைப்பாக இக்ரஃ உள்ளதுபோல், சுகாதாரம் மற்றும் புற்று நோய் விழிப்புணர்வுக்காக ஒரு தனி அமைப்பை உருவாக்கி அதன் மூலம் இம்மருத்துவ பணிகளை செய்யலாம் என்று இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
• புற்றுநோய் பற்றிய விபரங்கள் சேகரிக்க (CANCER SURVEY) கணக்கெடுப்பிற்கு வருபவர்களிடம் உரிய செய்திகளை முழுமையாக தெளிவாக அளிக்குமாறு இம்மன்றம் நம்நகர் மக்களை அன்போடு வேண்டிக்கொள்கிறது.
நன்றியுரை:
சகோ.எஸ்.ஹெச்.அப்துகாதிர் நன்றி கூற பொறியாளர் அல்ஹாபிழ் சகோ.ஷெய்க் ஆலம் பிரார்த்தனையுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
சிற்றுண்டி மற்றும் இரவு உணவு ஏற்பாடுகள் சகோ.எம்.ஏ.மூஸா ஸாஹிபின் முழு அனுசரணையுடன் மிகச்சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. இரவு உணவை முடித்து அனைவரும் மகிழ்ச்சியோடு களைந்து சென்றனர்.
(குறிப்பு: புதிய நிர்வாகிகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்)
தகவல்,
அரபி ஷுஅய்ப், ஜித்தா.
நிழற்படங்கள்,
முஹம்மது ஸாலிஹ், மக்கா.
|