அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையிலிருந்து, புற்றுநோய் ஆய்விற்காக ஒதுக்கீடு செய்வதென, சஊதி அரபிய்யா - ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
எமது ரியாத் காஹிர் பைத்துல்மால் அமைப்பின் 22ஆவது செயற்குழுக் கூட்டம் 27.01.2011 வியாழக்கிழமை பின்னிரவு 08.00 மணிக்கு, ஜனாப் எஸ்.ஏ.கே.மஹ்மூத் சுல்தான், ஜனாப் எஸ்.பி.முஹம்மத் முஹ்யித்தீன், ஜனாப் எஸ்.ஏ.கலீலுர்ரஹ்மான் ஆகியோரது இல்லத்தில் நடைபெற்றது.
கே.பி.எம். அமைப்பின் இணைச் செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மத் லெப்பை தலைமை தாங்கினார். உறுப்பினர்களின் நகர்நலன் குறித்த கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - பொதுக்குழு தேதி மாற்றம்:
பிப்ரவரி 04 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தை இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மார்ச் 04ஆம் தேதிக்கு மாற்றம் செய்து தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 02 - புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பிற்கு பேராதரவு:
சஊதி அரபிய்யாவின் ரியாத் - தமாம் - ஜித்தா மன்றங்கள் இணைந்து புற்றுநோய் பாதிப்பின் சர்வே செய்வது என்ற நிலைபாட்டிற்கு பேராதரவு நல்குவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 03 - புற்றுநோய் ஆய்விற்கு நிதியொதுக்கீடு:
அமைப்பின் மலர் வெளியீட்டின் மூலம் ஈட்டப்பட்ட தொகையிலிருந்து ரூ.50 ஆயிரம் முதற்கட்டமாக புற்றுநோய் ஆய்விற்காக ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 04 - புற்றுநோய் மருத்துவ விஞ்ஞானி வருகைக்கு நன்றி:
நமது அழைப்பினை ஏற்று வருகை புரிந்து, புற்றுநோய் பற்றி பல்வேறு கருத்துக்களை எளிய முறையில் விளக்கி வழிகாட்டிவருகிற - புற்றுநோய் மருத்துவ நிபுணரும், விஞ்ஞானியுமான டாக்டர் மாசிலாமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 05 - மருத்துவ உதவிப்பிரிவில் இணையும் சிங்கை மன்றத்திற்கு நன்றி:
ரியாத் - தமாம் - ஜித்தா மன்றங்களின் ஒருங்கிணைந்த மருத்துவ உதவிப் பிரிவில் இணைந்து செயல்பட ஆர்வம் தெரிவிக்கும் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் தீர்மானத்தை முழுமனதோடு வரவேற்பதோடு, அதற்காக இச்செயற்குழு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 06 - எஸ்.கே. மறைவுக்கு இரங்கல்:
எல்லோராலும் எஸ்.கே. மாமா என அன்போடு அழைக்கப்பட்டு வந்த அல்ஹாஜ் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்கள் மரணமடைந்தார்கள் என்ற செய்தி காயல் நல விரும்பிகள் அனைவருக்கும் கவலையை தந்தது. அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து, உயர்வான சுவன பாக்கியத்தை அருள்வானாக!
பன்முகத்தன்மையோடு இலங்கி, நல்லெண்ண சமாதான விதைகளைப் பரப்பி வந்த எஸ்.கே. அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் “ஸப்ரன் ஜமீலா” என்ற அழகிய பொறுமையை வழங்கிடுவானாக! என்று பிரார்த்தித்து தீர்மானமியற்றப்பட்டது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கேன்சர் சர்வே:
மேலும், இன்ஷாஅல்லாஹ் நமதூரில் மிகவரைவில் நடைபெறவுள்ள கேன்சர் சர்வே பற்றி, கே.பி.எம்.இன் ஆலோசகர் சகோதரர் அல்ஹாஜ் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் அவர்கள் விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக் கூறினார்கள். அதுசமயம் நீண்ட கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன.
நலத்திட்ட உதவிகள்:
இன்னும் நமதூர் ஏழை மக்களிடமிருந்து வந்திருந்த கடிதங்களை பரிவோடு பரிசீலித்து கீழ்கண்டவாறு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. இதில் பங்கேற்று தாராளமாக நன்கொடைகள் வழங்கிய அன்பு சகோதரர்களுக்கும் கே.பி.எம். நன்றிகளை காணிக்கையாக்குகிறது.
தொண்டையில் புற்று நொய் ஏற்பட்டு கடும் அவதிக்குள்ளாகிவரும் சகோதரருக்கு மருத்துவ செலவாக ரூ 12,000.00 வழங்க தீர்மானிக்கப்பட்டது.
கணவனை இழந்து தவிக்கும் சகோதரியின் இரண்டு கால்களும் செயற்பட முடியாமல் வாதம் ஏற்பட்டு கடும் வேதனை அடைந்து வருகிறார். அவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ 12,000.00 வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நரம்பு தளர்ச்சியால் மனசஞ்சலமடைந்துவரும் ஏழை சகோதரியின் தொடர் மருத்துவ செலவிற்காக (5 மாதம்) ரூ 5,000.00 வழங்கிட தீர்மானித்துள்ளது.
சிறுதொழில் ஆர்வமுள்ள சகோதரி ஒருவருக்கு பண்டங்கள் செய்து விற்பனை செய்ய ஓவன் வாங்கும் வகைக்கு சிறுதொழில் நிதியுதவியாக ரூ 4,000.00 வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது.
வெல்டிங் வேலை தெரிந்த ஏழை சகோதரர் சுயதொழில் துவங்க நிதியுதவியாக ரூ 5,000.00 வழங்குவது என தீர்மானித்துள்ளது.
ஏழை சகோதரர் ஒருவர் (கிஃப்ட் சென்டர்) சிறுதொழில் துவங்க சிறு முதலீடு நிதியாக ரூ6,000.00 வழங்குவது என காஹிர் பைத்துல் மால் தீர்மானித்துள்ளது.
(கோல்ட் கவரிங் வெள்ளி) பூச்சுக்கடை சிறிதாக துவங்க சிறுதொழில் கடனுதவியாக ஏழை சகோதரர் ஒருவருக்கு ரூ 10,000.00 வழங்குவது என தீர்மானித்துள்ளது.
கூட்ட நிறைவு:
சூடான காயல் ஹரீரா - பக்கட் பரிமாறப்பட்டது. இறுதியாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்துக்கள் கூற, கூட்டம் இறையருளால் இனிதாய் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பின் நிர்வாகிகள்,
காஹிர் பைத்துல்மால்,
ரியாத், சஊதி அரபிய்யா. |