சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது பொதுக்குழுக் கூட்டம் 11.02.2011 அன்று நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
பிப்ரவரி 11 வெள்ளியன்று மாலை தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58வது பொதுக்குழுக் கூட்டம் சகோதரர் பாலப்பா அஹ்மது அவர்கள் இல்லத்தில்வைத்து நடைபெற்றது. இக்கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் பெருந்திரளாகக்கலந்துகொண்டனர்.
தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 58ஆவது பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளை சகோதரர் அப்துல் காதர் சூபி கிராஅத் ஓதி துவக்கி வைக்க, சகோதரர் பாலப்பா அஹ்மது அவர்களது அருமை பாலகன் "இளைய தளபதி - யூசுப் சாகிப்" அவர்கள் சிரித்த முகத்துடன் தனக்கே உரிய மழலை மொழியில் வந்தோரை வரவேற்று வரவேற்புரை வழங்கினார்.
தலைவர் முன்னுரை:
அதனை தொடர்ந்து மன்ற தலைவர் டாக்டர்.முஹம்மது இத்ரீஸ் அவர்கள் முன்னுரை வழங்கினார். நமதூரில் சமீப காலமாக அதிகளவில் பொதுமக்களை மரண பயத்தில் ஆழ்த்தி வரும் கொடிய புற்றுநோய் குறித்து தலைவர் அவர்கள் விளக்கிப் பேசியதுடன் அதற்காக காயல் நற்பணி மன்றம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மன்ற உறுப்பினர் அனைவருக்கும் விவரித்தார்.
பின்னர், விரைவில் நமதூரில், தம்மாம், ரியாத், ஜித்தா காயல் நற்பணி மன்றங்கள் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் புற்றுநோய் கணக்கெடுப்பு (Cancer Survey) குறித்து அவர் விளக்கிப் பேசியதுடன் , புற்று நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும் துபாய் CFFC மற்றும் கத்தர் காயல் நல மன்றங்களின் சேவைகள் குறித்து வெகுவாக பாராட்டி பேசினார்கள்.
பொதுச்செயலாளர் உரை:
அடுத்து பொதுச்செயலாளர் அஹமது ரபீக் அவர்கள் 57வது பொதுக்குழுவுக்குப் பின்பு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும், மன்றம் சார்பில் ஊரில் நடத்தி முடித்த சமுதாய நல நிகழ்வுகள் பற்றியும் விளக்கமாக உரையாற்றினார்.
மேலும் பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட மனுக்கள் செயற்குழு உறுப்பினர்கள் முன் பரிசீலிக்கப்பட்டதையும் , ஏற்கப்பட்ட மனுக்களுக்கான கோரிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்யப்பட்டதும் குறித்தும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விவரித்தார்
ஆலிம் அவர்களின் சிறப்புரை:
இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மவ்லவி நூஹ் ஆலிம் அவர்கள், காயல் நற்பணி மன்றத்தின் சேவைகளை வெகுவாக பாராட்டியதோடு அதற்கு இறைவனிடத்தில் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் மார்க்க அடிப்படையில் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்
மருத்துவ கேள்வி-பதில்:
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மருத்துவ கேள்வி-பதில் நிகழ்ச்சியில், தலைவர் DR.இத்ரீஸ் அவர்கள் மருத்துவ சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் கேள்விக்கு மிக தெளிவாகவும் துல்லியமாகவும் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் விளக்கமளித்தார்கள்.இது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
நன்றி உரை:
இனிப்பு, கார வகைகளுடன் தேநீர் இடைவேளைக்குப் பின் தலைவர் DR.இத்ரீஸ் அவர்கள் இப்பொதுக்குழுவின் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கு மிகவும் உறுதுணையாக பணியாற்றிய சகோதரர்.பாலப்பா அஹ்மது அவர்களுக்கும்,அன்னாரின் துணைவியாருக்கும் மற்றும் பல்வேறு பணிகளில் பங்கேற்றுத் துணையாய் நின்ற மன்ற சகோதரர்களுக்கும் மன்றத்தின் சார்பாக நெஞ்சார்ந்த பாரட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.
இறுதியில் சுவையான கறி கஞ்சியுடன் இனிய துஆவோடு பொதுக்குழு நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்:
M.M. முஹம்மது ஹஸன்
&
B.A.முத்துவாப்பா,
செய்தித் தொடர்பாளர்கள்,
காயல் நற்பணி மன்றம்,
தம்மாம், சஊதி அரபிய்யா. |