காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் 169 தொகுப்பு வீடுகள் தமிழக அரசால் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவசியமின்றி நிறைவேற்றப்படும் இத்திட்டத்தை கைவிடக் கோரியும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் 04.01.2011 அன்று கடையடைப்பு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
பின்னர் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பிரதிநிதிக் குழுவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரனை - ஜனவரி 13 அன்று - சந்தித்து இதுகுறித்து முறையிட்டுள்ளதாகவும், திட்டத்தை நிறுத்த தமக்கு அதிகாரமில்லை என்றும், பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்திடும் பொருட்டு ஜனவரி 31ஆம் தேதி வரை கட்டிடப் பணிகளை நிறுத்தி வைப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தூத்துக்குடி நீதி மன்றத்தில் இது குறித்த வழக்கு ஜனவரி 31 அன்று விசாரணைக்கு வந்தது. அவ்வேளையில் கட்டுமான பணிகளுக்கு தடைகொடுக்க மறுத்து நீதிபதி, வழக்கினை பிப்ரவரி 21 க்கு தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தொடர்ந்து கட்டிடப் பணிகள் நடைபெற்று வருவதைக் கருத்தில் கொண்டு, அதுகுறித்து ஆலோசித்து முடிவெடுப்பதற்காக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் அவசரக் கூட்டம் 09.02.2011 அன்று காலை 11.15 மணிக்கு காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் கூடியது.
கூட்ட நிகழ்வுகள்:
பேரவைத் தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், முஹ்யித்தீன் பள்ளி நிர்வாகி ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ, குருவித்துறைப் பள்ளி செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், ஐ.ஐ.எம். குழும நிறுவனங்களின் தலைவர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார். மவ்லவீ ஹாஃபிழ் முத்துச்சுடர் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
எஸ்.கே. மறைவுக்கு இரங்கல்!
துவக்கமாக, 12.01.2011 அன்று காலமான காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் கவுரவ ஆலோசகர் ஹாஜி எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானமியற்றப்பட்டதுடன், அவர்களுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
பேரவை செயலாளர் உரை:
வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
சுனாமி நிதியை நகர்நலப் பணிகளுக்கு பயன்படுத்தல்:
சுனாமி தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சார்ந்த மக்களின் நிவாரணத்திற்காக உலக காயலர்களிடமிருந்து ஐக்கியப் பேரவையால் நன்கொடை வசூலிக்கப்பட்டதாகவும், பின்னர் சில காரணங்களால் அவற்றை வினியோகிக்க இயலாமற்போனதையடுத்து, காயல்பட்டினம் நகர்நலப் பணிகளுக்கு அதைப் பயன்படுத்தலாம் என ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கூட்டத்தின் நோக்கம்:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் 169 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவை வலுவான பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், எனினும் அரசும், நீதித்துறையும், ஆளும் கட்சியும் இதுவரை இதற்கு சாதகமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்த அவர், வரும் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளதாகவும், அப்போதும் சாதகமான சூழல் ஏற்படாவிட்டால் சாலை மறியல், சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு ஆகியவற்றை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
முதல்வருக்கு ஐந்தாயிரம் அஞ்சலட்டைகள் அனுப்பல்:
எதிர்ப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, தொகுப்பு வீடு கட்டிடப் பணிகளை நிறுத்தக் கோரி தமிழக முதல்வருக்கு காயல்பட்டினம் பொதுமக்கள் ஐந்தாயிரம் அஞ்சல் அட்டைகளில் கோரிக்கைகளை அனுப்ப வேண்டுமெனவும், அதற்காக அனைத்து ஜமாஅத்துகளுக்கும் பேரவை சார்பில் அஞ்சலட்டைகள் மொத்தமாக வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பேரவையில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் தேவை:
நகர்நலப் பணிகளுக்காக சிரமம் நிறைந்த பல வேலைகளையும் ஐக்கியப் பேரவை செய்து வருவதாகவும், இதுவிஷயத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே உள்ளதாகவும் ஆதங்கப்பட்டுக் கொண்ட அவர், களப்பணியாற்றும் பொருட்டு ஒவ்வொரு ஜமாஅத்திலிருந்தும் 50 வயதிற்குட்பட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து பேரவைக்குத் தருமாறு அனைத்து ஜமாஅத்துகளிடமும் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
காயல் அமானுல்லாஹ் உரை:
பின்னர், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் பின்வருமாறு உரையாற்றினார்:-
சென்னையிலுள்ள காயல்பட்டினம் ஐக்கிய சங்க நிர்வாகத்தின் சம்மதத்துடனும், சென்னையிலிருந்தவாறு இப்பணிகளை சில நாட்களாக முன்னின்று கவனித்து வரும் நமது ஐக்கியப் பேரவை பிரதிநிதிகளின் பரிந்துரையின் பேரிலும் இக்கருத்துக்களை நான் உங்கள் முன் வைக்கிறேன்...
தொகுப்பு வீடு கட்டிடப் பணிகள்:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் தமிழக அரசால் 169 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இப்பகுதியில் இது தேவையற்றது என்றும், கட்டிடப் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் மோசடிக் கிரய பத்திரம் மூலம் பெறப்பட்டது என்பதாலும், இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்பதாலும், இத்திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கோரி காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் கடந்த மாதம் 04ஆம் தேதி கடையடைப்பு போராட்டமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழக அரசின் பல துறைகளுக்கும் இதுகுறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்கு முயற்சி:
இதனிடையே, மீனவர் கூட்டமைப்பின் தலைவர் கயஸ், ஐக்கியப் பேரவையின் ஆலோசகர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா அவர்களை சென்னையில் சந்தித்து, சுமூகமான பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என தெரிவித்ததன் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு:
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உள்ளிட்டோரையும் இதற்காக காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சந்தித்துள்ளது.
மாவட்ட ஆட்சியரை சந்திக்கையில், ஏற்கனவே மீனவர் தலைவர் கயஸ் கேட்டுக் கொண்ட படி இரு தரப்பாரும் சுமுகமாக பேசித் தீர்த்துக்கொள்ளும் பொருட்டும், நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு அவகாசம் தரும் வகையிலும் ஜனவரி 31ஆம் தேதி வரை மேற்படி கட்டிடப் பணிகளை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார். பணியும் நிறுத்தப்பட்டது.
சாதகமற்ற நிலை:
ஆனால் அன்று நீதிமன்றத்தில் கட்டுமானப் பணிகளுக்கு தடை உத்தரவு கிடைக்கவில்லை என்பதோடு, அரசு தரப்பு வக்கீல் வழமைக்கு மாற்றமாக மிக பலமான மறுப்பு வாதத்தை எடுத்து வைத்தார். வேலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற நமது தரப்பு வாதத்தையும் பொய்யெனக் குறிப்பிட்டு உரத்த குரலில் மறுத்தார். நமக்கு ஆதரவாக தடை உத்தரவு கிடைக்கவிருந்த வாய்ப்பை அவரது பலத்த மறுப்பு வாதம் தகர்த்தது. அதனடிப்படையில் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு மறு வாய்தா அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் வெளிவந்த நாளிதழில் கூட, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டி முடிக்கப்பட்ட பெரும்பாலான வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சதி வேலை முறியடிப்பு:
முன்னதாக, ஜனவரி 31 வரை கட்டிடப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மறுதரப்பாருக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் பொருட்டு ஒரு திட்டமிட்ட சதி மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக செய்ய முயன்றது நமக்கு பெரும் அதிர்ச்சியளித்தது.
அதாவது, மாவட்ட ஆட்சியரின் கட்டிடப் பணி நிறுத்த அறிவிப்புக்கு மாற்றமாக, இக்கட்டிடப் பணிகள் நிறுத்தப்படவேயில்லை என்றும், தொடர்ந்து நடைபெற்று வந்துகொண்டிருப்பதாகவும், இனியும் தொடர்வதற்கு எந்த ஆட்சேபனையுமில்லை என்றும் நகர்மன்றத்திலிருந்து கடிதம் தருமாறு அதிகார வட்டத்திலிருந்து வற்புறுத்தல் செய்யப்பட்டு, அக்கடிதத்தைப் பெற்றுச் செல்வதற்காக ஓர் அதிகாரியும் நமதூர் நகர்மன்ற அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அந்நேரத்தில் அங்கிருந்த நகர்மன்ற துணைத்தலைவர் கஸ்ஸாலி மரைக்கார், அதிகாரிகள் கேட்டதுபோல் ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அக்கடிதத்தைக் கொடுக்கக் கூடாது என்று தடுத்து, இதில் நகர்மன்றத்திற்கு ஒப்புதலில்லை என்று மற்றொரு கடிதம் எழுதி வந்திருந்த அதிகாரியிடம் கொடுக்க, “ஆட்சேபனையில்லை” என்ற கடிதத்தைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த அவர், “ஆட்சேபனை” கடிதத்தைப் பெறாமலேயே சென்றுவிட்டார்.
தொடரும் சதித்திட்டம்:
இதனிடையே, கடற்கரை அண்ணா நகர் பகுதியில் தெற்கில் சில ஆண்டுகளுக்கு முன்னால் விதிமுறைகளை மீறி உருவாக்கப்பட்டிருந்த குருசடியைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட தகவல் கிடைத்து, நகர மக்கள் உஷாரானதும் கட்டிடப் பணி நிறுத்தப்பட்டது.
மேலும், தேவாலயத்திற்கு வடக்கே உருவாக்கப்பட்டிருந்த மற்றொரு குருசடியைச் சுற்றியும் கோட்டைச் சுவர் எழுப்பும் பணி துவக்கப்பட்டு, முக்கால் பகுதி முடிவுற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் துணை கொண்டு அதுவும் நிறுத்தப்பட்டது.
இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும், தீர்வு எதுவும் காணப்படாத நிலையிலும், மேலும் ஆத்திரமூட்டக்கூடிய வகையில் இதுபோன்ற வேலைகள் அவர்களால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
பேரவை அங்கலாய்ப்பு:
தொகுப்பு வீடு திட்டத்திற்கெதிரான நடவடிக்கைகள் எதுவுமே சாதகமாக இல்லாத நிலையில், தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோரை சந்தித்து முறையிடுவதற்கான வாய்ப்பும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அமையவில்லை என பேரவை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
தொகுப்பு வீடு கட்ட ஆதரவாக 2006இல் நகர்மன்றத்தில் தீர்மானம்:
திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களிடமும் பேரவை முறையிட்டது. தொகுப்பு வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் முன் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் நடப்பு உறுப்பினர்களால் 2006ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் தீர்மானம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதனடிப்படையிலேயே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தற்போது எதுவும் செய்ய இயலாத நிலையில் இருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
திட்டத்தைக் கைவிடுவது நடைமுறை சாத்தியமற்றது!
மேலும், மீனவர்களுக்கு அரசு நாடு முழுவதும் வீடுகளைக் கட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீடுகளின் கட்டிடப் பணிகளை நிறுத்தச் சொல்வது அரசின் கண்ணோட்டத்தில் இயலாத ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், காயல் மாநகர முஸ்லிம்களுக்கு வீடுகள் தேவைப்பட்டால், அதே கடற்கரையில் கட்டித்தர அமைச்சர் வாக்களித்திருப்பதாகவும் தெரிய வருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்திற்குத் தொடர்புகொண்டு பேசிய மாநில அமைச்சர் சுப.தங்கவேலனும், இக்கருத்தை வழிமொழிந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை இழுத்தடிப்பு:
இதற்கிடையே, விவகாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், தொகுப்பு வீடு கோரும் மீனவர் குழு தலைவர் கயஸ் முன்னர் வாக்களித்த படி ஜனவரி 31ஆம் தேதி வரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. மேலும், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுத்து மூலமாக நிபந்தனைகள் அவர்களுக்கு அனுப்பப்பட்ட பிறகும் முறையான பேச்சுவார்த்தைக்கு அமர அவர்கள் ஆயத்தமாக இல்லை.
இதுபோன்ற பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகமும் எவ்வித ஏற்பாடும் செய்து தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் தற்போதைய நிலை.
தீர்வுதான் என்ன?
ஆக, இப்போது நமக்கு முன்னர் இரண்டே தீர்வுகள்தான் உள்ளன.
(1) பேச்சுவார்த்தை மூலமாக கடற்கரை நிர்வாகம் சம்பந்தப்பட்ட சில உரிமைகளை மீட்டெடுப்பது..
(2) மோசடி செய்யப்பட்ட நிலத்தை நீதிமன்றத்தின் மூலமாக மீட்டெடுப்பது...
அரசும், அதிகாரிகளும், அமைச்சர்களும் இவ்விஷயத்தில் நமக்கு சாதகமாக செயல்பட முடியாத நிலையில் இதைத்தவிர வேறு வழியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இது எனது தாழ்மையான கருத்தாகும். இதையும், வேறு வழிமுறைகள் இருக்குமானால் அவற்றையும் இந்த ஊர் பரிசீலிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
காயல்பட்டினத்தில் மீனவர்களின் கடந்தகால நடவடிக்கைகள்!
இவ்விஷயத்தில் நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மீனவர்களுக்கெதிரானதோ, கிறிஸ்துவ மக்களுக்கெதிரானதோ அல்ல; மாறாக, அநீதிக்கெதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையே இது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்படியென்ன அநீதி நடந்துவிட்டது என்பதை, அங்கு குடியேறியவர்களின் கடந்த கால வரலாறு தெளிவுபட சொல்லும்.
காயல்பட்டினத்திற்குட்பட்ட கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் சீசன் மீன்பிடி தொழில் செய்வதற்காக வந்தவர்கள் நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டனர்...
புதிய குடியேற்றங்களை திட்டமிட்டு அதிகளவில் உருவாக்கினர்...
வழிபாட்டுத் தலங்களை சிறிய அளவில் உருவாக்கி, அவற்றில் ஒன்றைப் பெரிதாக்கினார்கள்...
இதற்கு முன்னரும் பெரியதாழை, ஆலந்தலை, அமலிநகர் போன்ற நமதூருக்கு அருகிலுள்ள மீனவ கிராமங்களிலிருந்து சீசன் மீன்பிடி தொழிலுக்காக வந்தவர்கள் கடைப்பள்ளிக்கு மகிமைக் கட்டணம் செலுத்தி, அதன் மூலம் கடற்கரை காயல்பட்டினத்திற்குரியது என்று இருந்த நியதியை இவர்கள் தகர்த்தெறிந்து, தங்களது தேவாலயத்திற்கு செலுத்தினார்கள்...
இவர்களின் சொந்த ஊரான சிப்பிக்குளம், வேம்பார், வைப்பாறு பகுதிகளிலும் இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை இருப்பது போன்று, இங்கு காயல்பட்டினத்திலும் அரசு அதிகாரிகளை கையில் எடுத்துக்கொண்டு அவற்றைப் பெற்று இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களாக திகழ்கிறார்கள்...
காயல்பட்டினத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய “கற்புடையார் பள்ளி வட்டம்” என்ற பெயரை மாற்றி, “சிங்கித்துறை” என்று மோசடியாக பெயர் மாற்றம் செய்து, மீன்வளத்துறையிலும் அப்பெயரைப் பதிவு செய்துகொண்டார்கள். இதனால், இவர்களின் அறிவிப்பிலும், இவர்களைப் பற்றிய அரசின் அறிவிப்பிலும் “சிங்கித்துறை” என்று பெயர் வருமே தவிர “காயல்பட்டினம்“ என்று அறிவிக்கப்படுவதில்லை.
பரந்த மனப்பான்மை மற்றும் இவர்களின் உள்நோக்கம் அறியாமையால் பிழைப்புக்கு வந்த மீனவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, நிலப்பட்டா என அனைத்தையும் பெற்றுத் தந்த ஒருவருக்கெதிராக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, 7 வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி வாய்ப்பை இழந்தார்கள். அந்தளவுக்கு இவர்களின் எண்ணிக்கை திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவையனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், சிங்கித்துறை, கொம்புத்துறையுடன், மங்களவாடி சுனாமி நகர் பகுதியையும் இணைத்து தனி பஞ்சாயத்து அந்தஸ்து கேட்டு அரசுக்கு அவர்கள் அளித்த கோரிக்கை மனுவின் நகல் நம்மிடம் உள்ளது. இவர்களின் உள்நோக்கம் இதன்மூலம் தெளிவுபட தெரிகிறது. இப்படியிருந்தால், நகரின் வருங்காலம் எப்படியிருக்கும் என்பதை சற்று கற்பனை செய்து பாருங்கள்!
அவரவர் மத வழிபாட்டிற்காக வழிபாட்டுத் தலங்களை எழுப்புவதில் யாருக்கும் எந்த ஆட்சேபனையும் இல்லை. அதே நேரத்தில், ஏற்கனவே நம்முடைய பட்டா நிலங்களில் கட்டப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் கட்டிட அமைப்பை மாற்றுவதற்கே அதிகாரிகளிடம் அல்லும், பகலும் நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்நிலையில், இதுபோன்ற எந்த விதிமுறைகளையும் சிறிதும் மதிக்காமல், விருப்பப்பட்ட இடங்களில், விருப்பப்படி சிறிதாகவும், பெரிதாகவும் தேவாலயங்களை அமைத்துக் கொண்டே செல்கின்றனர். நமதூரில் பாரம்பரியமாகப் பேணப்பட்டு வந்த மத நல்லிணக்கத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக அனைவருக்கும் சொந்தமான கடற்கரை புறம்போக்கு நிலத்தில் - மணற்பகுதியில் இதுபோன்ற அத்துமீறல்களை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
1996-97 காலகட்டத்தில் இவர்களுக்கு தனி குடியிருப்புகள் கட்டிக்கொடுக்கப்பட்ட பிறகும், தமது பழைய இடத்தை காலி செய்யாமல் இன்று வரை அடம்பிடிப்பது...
அண்ணா நகர் பகுதியிலிருந்த மக்களுக்கு மங்களவாடி பகுதியில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்ட பிறகும், பழைய குடிசைகளை முழுமையாக இன்று வரை அப்புறப்படுத்தாமல் இருப்பது...
இவையெல்லாம் அவர்களின் விஷச் சிந்தனைக்கான சான்றுகளாக அமைந்துள்ள கடந்த கால வரலாறு.
ஆதாயத்திற்காக நம்மவர்கள் செய்த தவறுகள்!
சில விஷயங்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்... நம்மவர்கள் செய்யும் சில தவறுகளே நமக்கு தலைவலியாக மாறுகிறது... எப்படியெனில்,
முறையாகவோ, முறையின்றியோ... நாம் நிலம் கொடுக்காமல் அவர்கள் அங்கு 169 தொகுப்பு கட்டிடம் எழுப்பியிருக்க முடியாது...
1996ஆம் ஆண்டில் பொறுப்பிலிருந்த நாச்சித்தம்பி தலைமையிலான காயல்பட்டினம் பேரூராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மக்கள் பொழுதுபோக்கிற்காக அமரும் காயல்பட்டினம் கடற்கரையில் தென்பகுதியில் எவ்வித மீனவர் குடியிருப்பும் இருக்கக் கூடாது என்று தீர்மானமே இயற்றப்பட்டிருக்க, அதைக் கண்டுகொள்ளாமல், சொற்ப வருமானங்களுக்கு ஆசைப்பட்டு மங்களவாடியில் தொகுப்பு வீடு கட்ட நம்மவர்களே நிலம் விற்றது... அதற்கு 2004ஆம் ஆண்டிலிருந்த பேரூராட்சி நிர்வாகம் அனுமதியளித்தது...
கற்புடையார் பள்ளி வட்டம் பகுதியில் முஸ்லிம்களின் நிலப் பகுதிகளில் இடையிடையே அவர்களுக்கு நிலம் விற்பனை செய்திருப்பது...
அவர்கள் விழித்துக்கொண்டு கவனத்துடன் செய்துவந்த பல தவறுகளை கவனமின்றி உறங்கிக்கொண்டு கோட்டை விட்டது...
இவையெல்லாம் நம்மவர்கள் தெரிந்தும், தெரியாமலும் செய்து வரும் தொடர் தவறுகள்...
பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம்... விற்ற நிலத்தை திரும்ப வாங்க இயலுமா என்பதுதான் நம் முன்னுள்ள ஒரே கேள்வி!
நாம் செய்ய வேண்டியதென்ன?
எனவே, நமது முன்னோர்கள் எப்படி நமதூர் நிலங்களைக் காப்பாற்றி, நாம் நிம்மதியாக வாழும் பொருட்டு நம்மிடம் ஒப்படைத்தார்களோ அதேபோன்று, நாம் நமது வருங்கால சந்ததியிடம் நமது தாய் மண்ணை ஒப்படைக்க வேண்டியது நமது தார்மீகக் கடமையாகும்.
இவ்வாறு அவர் தனதுரையில் தெரிவித்தார்.
பின்னர், பேரவை செயலாளர் அறிவித்த படி தமிழக முதல்வருக்கு அனுப்புவதற்காக கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அஞ்சலட்டைகள் வினியோகிக்கப்பட்டு, அதற்கான வாசகமும் பேரவையால் வினியோகிக்கப்பட்டது.
முடிவெடுக்காமல் முடிந்த கூட்டம்:
தொகுப்பு வீடு கட்டிடப் பணிக்கு எதிரான வழக்கு பிப்ரவரி 21ஆம் தேதியன்று நகர மக்களுக்கு சாதகமாக அமையாவிடில் அடுத்து சாலை மறியல், தேர்தல் புறக்கணிப்பு உள்ளிட்டவற்றைச் செய்வது குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என கூட்டத்தின் துவக்கத்தில் பேரவை செயலாளர் அறிவித்திருந்தார். காலை 10.00 மணிக்குத் துவங்கியிருக்க வேண்டிய கூட்டம் 11.15க்கு துவக்கப்பட்டதாலும், அடுத்த 45 நிமிடங்களில் தினசரி மின்தடை ஏற்பட்ட காரணத்தாலும் இதுகுறித்து எந்த கலந்தாலோசனையும் செய்ய இயலாமற்போனது.
பாதுல் அஸ்ஹப் ஹாஜி மற்றும் பேரவைத் தலைவர் உரை:
பின்னர், சுனாமி தொகுப்பு வீடு கட்டிடப் பணிகள் குறித்தும், அப்பகுதியிலுள்ள நிலங்களின் வரலாறு குறித்தும் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப், பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் ஆகியோர் நீண்ட நேரம் விளக்கமளித்தனர்.
மின்தடை காரணமாக பேச்சுக்கள் எதுவும் தெளிவாகக் கேள்வியுற இயலாத நிலை ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர் - அருகில் அமர்ந்து - தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமலேயே கூட்டம் நிறைவுற்றது. சில தினங்களில் மீண்டும் பேரவையால் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்படும் என்றும், அனைவரும் அக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
கூட்டத்தில், நகரின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
|