திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்துடன் கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகள் இணைந்து, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் நடத்திய புற்றுநோய் பரிசோதனை மூன்றாமாண்டு இலவச முகாமில், 292 பேர் பரிசோதனை செய்துகொண்டனர். முகாம் நிகழ்வுகள் பின்வருமாறு:-
முகாம் முன்னேற்பாடுகள்:
கடந்த 13.02.2011 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் ஆகிய அமைப்புகள், திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்துடன் இணைந்து காயல்பட்டினத்தில் தொடர்ந்து மூன்றாமாண்டாக புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தின.
முன்னதாக முகாம் குறித்த விபரங்களடங்கிய பிரசுரங்கள் 04.02.2011 மற்றும் 11.02.2011 தேதிகளில் நடைபெற்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளான முஹ்யித்தீன் டி.வி., ஐ.ஐ.எம். டி.வி. ஆகியவற்றிலும் இதுகுறித்த விண்ணப்பிக்கும் விபரங்கள் எழுத்துச் செய்தியாக ஓட விடப்பட்டது.
11.02.2011 ஜும்ஆ தினத்தன்று காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் ஆகிய இரு ஜும்ஆ பள்ளிகளிலும் குத்பா உரையாற்றிய கத்தீப்கள் இதுகுறித்து விளக்கிப் பேசி, பள்ளியின் வெளிப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விண்ணப்ப முகாமில் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - கே.டி.எம். தெரு முனையிலுள்ள மன்னர் ஃபேஷன் ஜுவல்லரியில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகாமுக்கு முந்திய நாளான 12.02.2011 அன்றே அனைத்து விண்ணப்பங்களும் தீர்ந்துவிட்டன.
முகாமுக்கு முந்திய நாளான 12.02.2011 அன்று இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரை புற்றுநோய் குறித்த கேள்வி-பதில் நிகழ்ச்சி காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசையான ஐ.ஐ.எம். டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
முகாம் துவக்கம்:
13.02.2011 அன்று காலை 09.00 மணிக்கு காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை கூட்டரங்கில் முகாம் துவக்க விழா நடைபெற்றது. கே.எம்.டி. மேலாளர் அப்துல் லத்தீஃப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், புற்றுநோய் மருத்துவ நிபுணர்களான திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் பொன். சசிப்பிரியா, மகப்பேறு மருத்துவ நிபுணரான டாக்டர் பொன். சாந்தி ஆகிய மருத்துவர்களும்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எஸ்.ஏ.நூஹ், உறுப்பினர் எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம், உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித் ஆகியோரும்,
கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் உறுப்பினர் அமீன், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், பொதுநல ஆர்வலர் ஹாஜி ஷாஃபீ, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அறங்காவலர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோரும் முன்னிலை வகித்தனர்.
முகாம் ஏற்பாடுகள் மற்றும் முறைமைகள் குறித்து கத்தர் காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதியும், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனருமான எஸ்.கே.ஸாலிஹ் விளக்கிப் பேசியதோடு, நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்தார்.
புற்றுநோய் பற்றிய விளக்கம், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள், அதற்காக இதுபோன்ற முகாம்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து, ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சாளை பாதர் விளக்கிப் பேசினார்.
காயல்பட்டினம் நகரில் புற்றுநோய் பரவல், அதுகுறித்து பொதுமுக்களிடம் இருக்க வேண்டிய விழிப்புணர்வு, தயக்கமின்றி புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளல் குறித்து, ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா விளக்கிப் பேசி, முகாமைத் துவக்கி வைத்தார்.
தன்னார்வலர்கள்:
முகாமில் விண்ணப்ப்ப் படிவங்களைப் பதிவு செய்வதற்காகவும், முகாமில் கலந்துகொள்ளும் பெண்களை ஒருங்கிணைப்பதற்காகவும் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் மாணவியர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி மாணவியர் உள்ளிட்டோர் தன்னார்வலர்களாக களப்பணியாற்றினர்.
முகாம் நிகழ்வுகள்:
காலை 08.00 மணிக்குத் துவங்குமென அறிவிக்கப்பட்டிருந்த முகாம், காலை 09.30 மணிக்கு துவங்கியது. ஆண்களுக்கான பதிவுப்பணிகளை ஜித்தா காயல் நற்பணி மன்றம், அமீரக காயல் நல மன்றம், ரெட் ஸ்டார் சங்கம், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, காயல்பட்டினம் ஐக்கிய சங்கம் - சென்னை ஆகிய அமைப்புகளின் அங்கத்தினரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, எம்.ஏ.செய்யித் முஹம்மத் ஜியா, ஹாஃபிழ் சுல்தான் (கத்தர்), இப்றாஹீம் (48), எஸ்.எச்.முஹம்மத் ஹஸன் உள்ளிட்ட பொதுநல ஆர்வலர்களும் சுய ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.
மருத்துவ பரிசோதனையின்போது ஆண்கள் பகுதியில் தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.ஏ.ஸஈத் உதவிப்பணிகளை மேற்கொண்டார். பெண்கள் பகுதியில் கே.எம்.டி. மருத்துவமனை செவிலியர் உதவிப்பணிகளை மேற்கொண்டனர்.
நிறைவு விழா:
மாலை 05.00 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி கே.எம்.டி. கூட்டரங்கில் நடைபெற்றது. ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புற்றுநோய் மருத்துவ சிறப்பு நிபுணர் டாக்டர் கோவிந்தராஜன், காயல்பட்டினம் நகரில் பொதுமக்களிடம் இதுவரை தாம் மேற்கொண்ட பரிசோதனைகள் குறித்து சுருக்க விளக்கமளித்தார்.
அதனைத் தொடர்ந்து புற்றுநோய் குறித்து பொதுமக்கள் கேட்ட சந்தேகங்களுக்கு டாக்டர் கோவிந்தராஜன், டாக்டர் பொன். சசிப்பிரியா ஆகியோர் விளக்கமளித்தனர்.
இம்முகாமை நகர்நலன் கருதி நடத்திய கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் ஆகிய இருபெரும் அமைப்புகள், இடவசதி செய்து தந்த கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகம்,
தன்னார்வலர்களை ஆர்வத்துடன் அனுப்பித் தந்த வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி நிர்வாகங்கள், ஆண்கள் பகுதியில் தன்னார்வலர்களாக ஆர்வத்துடன் பங்கேற்ற அனைத்துலக காயல் நல மன்ற அங்கத்தினர்கள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள்,
விண்ணப்ப வினியோகம் செய்த மன்னர் ஃபேஷன் ஜுவல்லரி அதிபர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப்,
இரு ஜும்ஆ பள்ளிகளிலும் முகாம் குறித்து விளக்கமளித்த கத்தீப்களான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ,
கேபிள் டி.வி.யில் மருத்துவருடன் நேர்காணல் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி, முகாம் குறித்த விண்ணப்ப விபரங்களை எழுத்துச் செய்தியாக வெளியிட்டமை ஆகியவற்றைச் செய்த உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகளான முஹ்யித்தீன் டி.வி., ஐ.ஐ.எம். டி.வி. நிறுவனத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் முகாம் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எஸ்.கே.ஸாலிஹ் நன்றி தெரிவித்தார். துஆவுடன் முகாம் நிறைவுற்றது.
இம்முகாமில் ஆண்கள் 114 பேருக்கும், பெண்கள் 178 பேருக்கும் என மொத்தம் 292 பேருக்கு புற்றுநோய் இலவச பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாம் துவக்க நேரத்தைக் கண்டுகொள்ளாமல், முடியும் நேரத்தை மட்டும் கருத்தில் கொண்டு - ஏற்கனவே விண்ணப்பித்திருந்தும் தாமதமாக வருகை தந்த பலர், முகாமில் பரிசோதனை செய்ய இயலாமல் ஏமாற்றமடைந்தனர். எனினும், அடுத்து நடைபெறும் முகாமில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், அந்த முகாமிலாவது குறித்த நேரத்தில் கலந்துகொள்ளுமாறும் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் கலைந்து சென்றனர்.
ரமழானுக்கு முன் அடுத்த முகாம் மற்றும் CFFC குழுமத்திற்கு நிதியுதவி:
வரும் ரமழான் காலத்திற்கு முன்பாக ஜூலை மாதத்தில் புற்றுநோய் பரிசோதனைக்கான அடுத்த இலவச முகாம் நடைபெறும் என்றும்,
காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணிகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்ள CANCER FACT FINDING COMMITTEE - CFFC குழுமத்திற்கு, முகாம் ஏற்பாட்டாளர்களான கத்தர் காயல் நல மன்றம் மற்றும் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புகளின் சார்பில் ரூ.25,000 நிதி வழங்கப்படும் என்றும் முகாம் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எஸ்.ஏ.நூஹ் தெரிவித்துள்ளார்.
|