திடக்கழிவு மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் முகமாக காயல்பட்டினம் நகராட்சி மன்ற ஏற்பாட்டில், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத்திலிருந்து, நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் காஜா நஜ்முத்தீன் பேரணியைத் துவக்கி வைத்தார். நகர்மன்ற உறுப்பினர்கள் நோனா ஜாஃபர், மும்பை முகைதீன், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி ஆசிரியர்கள் எம்.அப்துல் ரசாக், மீராஸாஹிப், நியாஸ், சுதாகர், குலாம் காதர், டிக்ஸன் ஆகியோரும், நகர்மன்ற துப்புரவுப் பணியாளர்கள் உடன் சென்ற இப்பேரணியில் காயல்பட்டினம் காக்கும் கரங்கள் அமைப்பின் சார்பில் அசாருத்தீன், ஹஸன், கஸ்ஸாலி மரைக்கார், செய்யித் ஆகியோரும் இணைந்து பங்கேற்றனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற அலுவலகத்திலிருந்து மதியம் 03.30 மணிக்குக் கிளம்பிய இப்பேரணி, காட்டு தைக்கா தெரு, தைக்கா தெரு வழியே - ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வழியாக கூலக்கடை பஜாரை அடைந்து, அங்கிருந்து பெரிய தெரு - சதுக்கைத் தெரு வழியாக சென்ட்ரல் மேனிலைப்பள்ளியை சென்றடைந்தது. |