தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மாநில ஆணையர் பஷீர் அஹ்மத் இம்மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் - குறிப்பாக, மகளிருக்கான நலத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட ஆய்வுகளை அவர் மேற்கொள்ளவிருக்கிறார்.
அவரது வருகையையொட்டி தூத்துக்குடியில் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில், காயல்பட்டினத்திலிருந்து அதிகளவில் இத்துறை சம்பந்தப்பட்ட ஆர்வலர்களை கலந்துகொள்ளச் செய்வதற்காக, தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நல அலுலவகத்திலிருந்து துணை வட்டாட்சியர் தங்கத்தாய், அலுவலர் ஜுபிலி மனோகரன், உதவியாளர் சுப்பையா ஆகியோர் பிரதிநிதிகளாக காயல்பட்டினம் வந்திருந்தனர்.
இதற்கான கூட்டம் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்டரங்கில் 11.02.2011 அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது. ஹாஜி காக்கா தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலர் ஹாஜி பிரபு சுல்தான், ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்க ஒருங்கிணைப்பாளர் அ.வஹீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்காக தமிழக அரசால் அறிவிக்கப்படும் சலுகைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டோர் கருத்து தெரிவித்தனர். அவற்றைக் கவனமாக கேட்டறிந்த பிரதிநிதிகள், 17ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் துறை மாநில ஆணையர் முன் அக்குறைகள் தெரிவிக்கப்படும் என்றனர்.
ஹாஜி பிரபுத்தம்பி, ஹாஜி சின்னத்தம்பி, ஹாஜி டி.எம்.எஸ்.சுல்தான், ஹாஜி அரிஸ்டோ இக்பால், ஹாஜி எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், இக்ராஃ செயலாளர் கே.எம்.டி.சுலைமான், இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், தாருத்திப்யான் நெட்வர்க் நிறுவனர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
தகவல்:
ஏ.தர்வேஷ் முஹம்மத்,
அப்பாபள்ளித் தெரு, காயல்பட்டினம். |