2010-2012 பருவத்திற்கான காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் மூன்றாவது செயற்குழுக் கூட்டம் 02.02.2011 அன்று ஹாங்காங்கில் நடைபெற்றுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
கூட்ட நிகழ்வுகள்:
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் 12ஆவது செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 02, புதனன்று இரவு 08.15 மணியளவில், பேரவை துணைச் செயலாளர் ஆஷிகீன் இல்லத்தில், பேரவையின் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, பேரவையின் செயலாளர் யு.ஷேக்னா லெப்பை கடந்த செயற்குழு குறிப்பினை விவரித்தார்.
வரவு - செலவு கணக்கு தாக்கல்:
தொடர்ந்து பேரவையின் பொருளாளர் ஹாஃபிழ் வி.எம்.டி.முஹம்மத் ஹஸன், பேரவையின் வரவு-செலவு கணக்கினை சமர்ப்பிக்க, செயற்குழு அதனை அங்கீகரிதது.
தொடர்ந்து பல ஆக்கப்பூர்வமான செயல்திட்ட, நல உதவிகள் வழங்கல், ஊரின் தற்போதைய சூழல் உள்ளிட்டவை குறித்து நல்ல பல கருத்துக்கள் அனைவராலும் பரிமாற்றம் செய்யப்பட்டது.
CFFCக்கு ஒத்துழைப்பளித்தல்:
சிறப்பு விருந்தினராக இக்கூட்டத்தில் கலந்துகொண்ட CFFC உறுப்பினர் சாளை நவாஸ், CFFC குழுமத்தால் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள செயல்பாடுகள், இனி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பேரவையின் முழு ஒத்துழைப்பு CFFCக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டது.
இலங்கை வெள்ள நிவாரண நிதியுதவி:
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டும் முகமாக இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவுடன் இணைனந்து நமது ஹாங்காங் பேரவையும் நிதியினை வழங்கியுள்ளது.
புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:
நமது பேரவை, கத்தர் காயல் நல மன்றம் மற்றும் திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் ஆகிய அமைப்புகள் இணைந்து மூன்றாமாண்டாக இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 12ஆம் தேதியன்று (இன்று) நமது கே.எம்.டி. மருத்துவமனையில் வைத்து புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தவுள்ளது.
சுயதொழில் செய்ய கருவிகள் வழங்கல்:
சுயதொழில் உபகரணங்கள் கோரி நமதூரின் எளியவர்களிடமிருந்து காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு மற்றும் இத்திஹாதுல் இக்வானில் முஸ்லிமீன் - ஐ.ஐ.எம். ஆகிய அமைப்புகள் மூலமாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவையனைத்தும் ஏற்கப்பட்டன.
இன்ஷாஅல்லாஹ் வெகுவிரைவில் தொழில் உபகரணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.
மரம் வளர்ப்போம்; பசுமை பெறுவோம்:
சமீப காலமாக நமதூரில் மரங்கள் வெட்டப்பட்டு வருவதைக் கண்டு வருகிறோம். வீட்டு தோட்டங்களும் தேவைகளுக்காக அழிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஏற்படும் பசுமைக் குறைவைக் களையும் பொருட்டு பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் மரங்களை நட்டு, பராமரிக்க காயல்பட்டினம் நகர்மன்றத்தைக் கோருமாறு காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மரம் வளர்ப்பதால் நாம் பசுமை பெறுவோம்... நோயிலிருந்து தடுப்பும் பெறுவோம்... இதனால் நிலத்தடி நீரும் சுத்தம் பெறும்... சுகாதாரமும் கிடைக்கும்.
இரங்கலும், இறைவனிடம் இறைஞ்சுதலும்:
சமீபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த சமுதாய சேவகர் சகோதரர் ஹாஜி ஷாஹுல் ஹமீத் என்ற எஸ்.கே. அவர்களது மஃக்ஃபிரத்திற்காக துஆ செய்தும், இரங்கல் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அவர்களது சமுதாயப் பணி பாராட்டுக்குரியது. அவற்றை இறைவன் அங்கீகரிப்பானாக, ஆமீன்.
இவ்வாறு கூட்டத்தின் நிகழ்முறைகள் அமைந்திருந்தது. ஹாஜி பி.எம்.எஸ்.முஹ்ஸின் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேரவை செயலாளர் நன்றி தெரிவித்தார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் V.M.T.முஹம்மத் ஹஸன்,
பொருளாளர்,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங். |