காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் இரண்டாமாண்டு பட்டமளிப்பு விழா நேற்று (08.02.2011) காலை 11.00 மணிக்கு, கல்லூரி கேளரங்கில் நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் தலைவரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் விழாவிற்குத் தலைமை தாங்கினார். முதலாமாண்டு வணிகவியல் மாணவி எம்.அய்.கிதுரு ஃபாத்திமா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, கல்லூரி செயலர் ஹாஜி வாவு எம்.எம்.மொஹுதஸீம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி நிர்வாக அதிகாரி முனைவர் கம்சா முகைதீன் அறிமுகவுரையாற்றினார்.
இவ்விழாவில், நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் ச.மாணிக்கம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசிய அவர், பின்தங்கிய ஒரு பகுதியில் இக்கல்லூரியை நிறுவி, பெருநகருக்கொப்பாக அனைத்து வசதிகளையும் உருவாக்கி, கல்வியுடன் மனித வளத்திற்குத் தேவையான அனைத்துப் பயிற்சிகளையும் மாணவியருக்கூட்டி, சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக கல்லூரி நிர்வாகத்தை அவர் பாராட்டிப் பேசினார். பின்னர் அவர், கல்லூரியின் 148 மாணவியருக்கு இளங்கலை பட்டம் வழங்கினார்.
தொடர்ந்து, பட்டம் பெற்ற மாணவியரிடம் கல்லூரி முதல்வர் முனைவர் மெர்ஸி ஹென்றி உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.
இறுதியில், கல்லூரி துணைச் செயலாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக் நன்றி கூற, மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியத்துறை மாணவி ஏ.எல்.எஸ்.அப்துல் காதிர் உம்மாளின் துஆவுக்குப் பின் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் நிர்வாகக் குழுவினரான ஹாஜி வாவு அபுல்ஹஸன், ஹாஜி வாவு ஹபீபுல்லாஹ் ஆகியோரும், கல்லூரி ஆசிரியையர், மாணவியர், பெற்றோரும், ஹாஜி வாவு அப்துல் கஃப்ஃபார், காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் தாளாளர் ஹாஜி வாவு காதர் ஸாஹிப், தாய்லாந்து காயல் நல மன்ற பிரதிநிதி ஹாஜி வாவு உவைஸ், கே.எம்.டி. மருத்துவமனை செயலர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் முஸ்லிம் அய்க்கியப் பேரவை நிர்வாகி ஹாஜி செய்யித் முஹம்மத் அலீ, ஹாஜி வட்டம் ஹஸன் மரைக்கார், வாவு முஹம்மத் அலீ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
|