வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையின் நகல் பெறுவதற்கு தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது. இதற்காக பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தமிழகத்தில் அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை தொலைந்துவிட்டால் நகல் பெறவும், வீட்டு முகவரி மாறினால் புதிய முகவரிக்கு நகல் அட்டை பெறவும், பழைய அடையாள அட்டை கிழிந்தோ அல்லது உபயோகப்படுத்த இயலாத நிலையிலோ இருந்தாலும் நகல் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு வாக்காளர்கள் ‘001சி‘ என்ற படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணமாக ரூ.15 செலுத்த வேண்டும். ‘நகல்‘ என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும். நகல் அட்டை தேவைப்படுவோர் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் உள்ள புகைப்பட அடையாள அட்டை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நகல் அட்டை கோருபவர்கள் தாங்கள் குடியிருக்கும் முகவரிக்கு ஆதார ஆவண நகல் இணைக்க வேண்டும்.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வங்கிக்கணக்கு புத்தகம், அஞ்சலக சேமிப்பு புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். படிவம்&6 அளிக்கும் போது இணைக்கப்படும் ஆதார ஆவணங்கள், மாணவர் அடையாள அட்டை, வருமான வரி அட்டை, அரசு அடையாள அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று ஆதார ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும்.
குறுவட்ட அளவில் வரும் பிப்ரவரி 19, 20 ஆகிய தேதிகளில் நகல் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
வருவாய் ஆய்வாளர்கள் இதற்கான ‘நியமனம் செய்யப்பட்ட அலுவலராக‘ செயல்படுவர். உரிய படிவம், கட்டணத்தை அளித்து வாக்காளர்கள் நகல் அட்டை பெற்றுக்கொள்ளலாம். மாநகராட்சி பகுதிகளில் மண்டல அலுவலகங்களில் இம்முகாம் நடத்தப்படும். முகாம் தினங்களில் அளிக்கும் விண்ணப்பங்களுக்கு மார்ச் 5, 6 தேதிகளில் அதே இடத்தில் நகல் அட்டை வழங்கப்படும்.
தாசில்தார் அலுவலகங்களில் உள்ள புகைப்பட அடையாள அட்டை மையத்தில் வழங்கப்படும் விண்ணப்பங்களுக்கு இரண்டு வார காலத்திற்குள் நகல் அட்டை வழங்கப்படும்.
தகவல்:
தினகரன்
|