தூத்துக்குடி-கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக இலங்கையைச் சேர்ந்த 9 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள பயணிகள் முனையத்தை ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பயணிகள் கப்பல் போக்குவரத்தினை தொடங்குவதற்கு இருநாட்டு அரசுகளும் ஒப்புதல் அளித்தது. கொழும்பு துறைமுகத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து கடந்த மாதம் இந்திய குழு ஒன்று கொழும்புவிற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வந்தது.
பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் 2.50 கோடி ரூபாய் செலவில் பயணிகள் முனையத்தை கடந்த மாதம் 24ம் தேதி மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசனால் திறந்து வைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே முன்னிலையில் இலங்கையின் துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக செயலாளர் சுஜாதா கூரே மற்றும் இந்தியாவின் தூதர் அசோக்சுந்தரும் கப்பல் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பயணிகள் கப்பல் போக்குவரத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக இலங்கை அரசின் துறைமுக மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஜெய விக்ரமே தலைமையில் 9 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தனர். இந்த குழுவினர், துறைமுக சபை தலைவர் சுப்பையா மற்றும் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், அவர்கள் துறைமுகத்தில் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இலங்கை அரசிடம் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளனர். இதனையடுத்து தூத்துக்குடி-கொழும்பு பயணிகள் போக்குவரத்து விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross