காயல்பட்டினம் ஓடக்கரையில் இன்று மதியம் 02.00 மணியளவில் நடந்த சிற்றுந்து விபத்தில், அதில் பயணித்த பயணியர் சிலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபரம் பின்வருமாறு:-
காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில், ஓடக்கரை பகுதி நுழைவிடத்தில் விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 02.00 மணியளவில் திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டினம் நோக்கி வந்த சிற்றுந்து ஒன்று கட்டுப்பாடற்ற வேகத்துடன் அத்தடுப்பைத் தாண்டி வந்தபோது, எதிரேயிருந்த மனோகரன் என்பவரது வீட்டையொட்டிய கோட்டைச் சுவரில் பலத்த ஒலியுடன் மோதியதில், அச்சுவர் தகர்க்கப்பட்டு அதனுள் நிறுத்தப்பட்டிருந்த நாற்சக்கர வாகனம் சேதமுற்றது. விபத்து நடந்தவுடன் வாகன ஓட்டுனர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஆறுமுகநேரி காவல்துறை துணை ஆய்வாளர்கள் ஹரிகுமார், பெரியசாமி ஆகியோர் வாகன ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தைச் சந்தித்த சிற்றுந்தில் பயணித்த காயல்பட்டினம் சிவன்கோயில் தெருவைச் சார்ந்த கபீர் என்பவரது மகன் கலீலுர்ரஹ்மானுக்கு தலையிலும், காயல்பட்டினம் வண்டிமலைச்சியம்மன் கோயில் தெருவைச் சார்ந்த செண்பகபெருமாள் என்பவரது மகன் - காயல்பட்டினம் அரசு மருத்துவமனை ஊழியரான கணபதிக்கு இடது கால் மூட்டிலும், காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சார்ந்த செய்யித் இப்றாஹீம் என்பவரது மகன் இஸ்மாயீலுக்கு வலது கை சுட்டு விரல், இடது கை மணிக்கட்டிலும் காயமேற்பட்டுள்ளது.
இவர்கள் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் இஸ்மாயீல் என்பவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், அதற்கான சிகிச்சையைப் பெற்றிடுவதற்காக தூத்துக்குடியிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்,
தலைவர்,
“காக்கும் கரங்கள்” பொதுநல அமைப்பு, காயல்பட்டினம். |