தமிழக இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ரூ439 கோடி உபரி பட்ஜெட்டான இதில் புதிய வரிகள் ஏதும் விதிக்கப்படவில்லை. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப் பேரவையில் 2011&2012ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் நேற்று தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே அறிவித்து நடைமுறையில் இருக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காவல்துறையை நவீனப்படுத்த ரூ3239 கோடி,
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ375 கோடி,
பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ12674 கோடி,
தொழில் வளர்ச்சிக்கான வரிச் சலுகை ரூ1525 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் அன்பழகன் கூறியிருப்பதாவது:
கடந்த ஐந்தாண்டுகளில் பல திட்டங்களை இந்த அரசு புதிதாக அறிவித்து செயல்படுத்தி வந்தாலும் மக்களுக்குக் கூடுதல் வரிச் சுமை எதையும் ஏற்படுத்தி விடாமல் இந்த அரசு கவனமாகச் செயல்பட்டுள்ளது. விரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலின் காரணமாக 2011&2012ம் ஆண்டுக்கு இடைக்கால வரவு செலவுத் திட்டமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதால் புதிய வரிகள் விதிப்பது பற்றியோ, வரி விலக்குகள் அறிவிப்பது பற்றியோ அறிவிப்புகள் ஏதும் செய்யப்படவில்லை. எனவே, தற்போதைய வரிகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த நிதிநிலை கணிக்கப்பட்டுள்ளது.
பொது விற்பனை வரிக்கு பதிலாக மதிப்பு கூட்டு வரியை ஜனவரி 2007 முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வரியிழப்பை ஈடுசெய்ய, 2006 & 2007ம் ஆண்டு முதல் இதுவரை ^3,040 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மத்திய விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வரியினை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைத்ததால் ஏற்பட்ட வரியிழப்பை ஈடுசெய்ய, மத்திய அரசு இதுவரை ரூ2,456 கோடி அளித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் விற்பனை வரிகள் மூலம் ரூ30,371 கோடி வருவாய் இருக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. 2011& 2012ம் ஆண்டிற்கு இந்த வருவாய் ரூ. 33,394 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
2011& 2012ம் ஆண்டிற்கு மாநில ஆயத்தீர்வை வருவாய் ரூ8,935 கோடியாகவும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் வருவாய் ரூ5,856 கோடியாகவும், வாகனங்களின் மீதான வரி வருவாய் ரூ3,033 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
2011 &2012ம் ஆண்டிற்கு மேற்கண்ட வரிகளை உள்ளடக்கிய, மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூ53,783 கோடியாகவும்,
வரி அல்லாத வருவாய் ரூ4,811 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இதே காலகட்டத்திற்கு மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரிப் பகிர்வு நிதி ரூ13,375 கோடியாகவும், உதவி மானியங்கள் ரூ7,445 கோடியாகவும் இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வருவாய் வரவு ரூ79,413 கோடி என்றும் மொத்த வருவாய் செலவு ரூ 78,974 கோடி என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக 2011 &2012ம் நிதியாண்டின் இறுதியில் வருவாய்ப் பற்றாக்குறை நீங்கி ரூ439 கோடி அளவிற்கு வருவாய் உபரி இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவின் இறுதித் தவணையினை 2011&2012ம் ஆண்டில் வழங்க வேண்டியுள்ளதால் கூடுதல் வருவாய் உபரி ஏற்பட வாய்ப்பில்லை. 2011 &2012ம் ஆண்டில் தற்போதைய கணிப்பின்படி நிதிப் பற்றாக்குறை ரூ13,507 கோடி இருக்கும். இந்த நிதிப் பற்றாக்குறை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.32 சதவீதம் மட்டுமே இருக்கும். இது 13வது நிதிக் குழு வரையறுத்துள்ள அளவான 3 சதவீதத்தை விடக் குறைவானதாக இருக்கும்.
நிதிப் பற்றாக்குறை குறித்து 13வது நிதிக் குழு அறிவித்துள்ள அனைத்து இலக்குகளுக்கும் உட்பட்டதாக இந்த நிதிநிலை குறியீட்டு அளவுகள் இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தகவல்:
தினகரன் |